ஐ.தே.க தூரநோக்குடன் செயற்படும் கட்சியாகும் | தினகரன்


ஐ.தே.க தூரநோக்குடன் செயற்படும் கட்சியாகும்

அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம்

ஐக்கிய தேசிக் கட்சி தூரநோக்குடன் செயற்படும் கட்சியாகும். இந்த கட்சி ஆட்சிக்கு  வரும் காலமெல்லாம் நாட்டின்  கல்வி, பொருளாதார  வளர்ச்சிக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் முக்கிய பங்கை வகித்துள்ளது என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ்  அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டட தொழில் நுட்ப கூடம் திறந்துவைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தொடர்ந்தும் பேசிய அவர்,

அரபு மத்ரஸாக் கல்வி முறையில் யாரும் சந்தேகப்படுமளவுக்கு ஒன்றும் இடம்பெறவில்லை. நல்ல போதனைகளே  அங்கு இடம்பெறுகின்றது. சிறந்த சிந்தனையாளர்கள், கல்விமான்கள், நல்வழிகளை காட்டக் கூடிய மார்க்க அறிஞர்களே அங்கு உருவாக்கப்படுகின்றார்கள். அரபுக் கல்லூரிகளை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

அரபு மத்ரஸாக்கள் ​தொடர்பில்  பாராளுமன்றில் சட்ட மூலம் ஒன்றை உருவாக்கி மேலும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்துக்கு மின்சாரம் வழங்கப்பட வில்லை, தொழில்நுட்ப பாடத்திற்கான ஆசிரியர் வளங்கள் கிடைக்கப்பெறவில்லை என  அதிபர் சுட்டிக் காட்டினார். வெகுவிரைவில் புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

அதன் போது இப்பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திக்கப்படும். புதிய கட்டடத்திற்கான மின்சாரத் தேவையை வெகு விரைவில் நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.இனிவரும் காலங்களில் க.பொ. த. உயர்தரத்தில் அதி சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடர்வதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அக்குறணைப் பிரதேசத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

உலக மாற்றத்துக்கு ஏற்ப இன்று அரசாங்கத்தினால் தொழில்நுட்பக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் ஆர்வத்துடன் கற்பதற்கு முன் வரவேண்டும். தொழில்நுட்பக் கல்வி அறிவில் தான் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்றார்.

மாவத்தகம தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...