'எனை நோக்கி பாயும் தோட்டா' விரைவில் திரைக்கு... | தினகரன்


'எனை நோக்கி பாயும் தோட்டா' விரைவில் திரைக்கு...

கடந்த 2016ஆம் ஆண்டே கௌதம் மேனன் தனுஷை வைத்து 'எனை நோக்கி பாயும் தோட்டா' என்றொரு படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார். விரைவில் படம் வெளியாகிவிடும் என்று பார்த்தால், அப்படியே இந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தை எடுக்க தொடங்கினார் கௌதம். இதன் பின்னர் மீண்டும் 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திலிருந்து மருவார்த்தை பேசாதே என்றொரு பாடல் வெளியிடப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய புரோமோஷனாக இருந்தது.

2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவரை ஷூட்டிங்கும் நீடித்துக்கொண்டே இருக்க, படத்திற்கு வேறு பல தடைகள் வர தொடங்கின. தீபாவளிக்கும் வெளியிடப்படாமல் இருந்த படம், 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. இதுபோல வெளியிடும் திகதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டு படம் வெளியாகமலேயே ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அண்மையில் தணிக்கை குழு இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சினை காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படம் வருகிற 26ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பலமுறை வெளியிடும் திகதி அறிவித்து, தற்போது மீண்டும் வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அடுத்த வாரத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...