அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள்! | தினகரன்

அற்ப அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள்!

பல்லின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியில் ஒரு முக்கிய காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றது. உயிர்த்தெழுந்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மே 12 ஆம், 13 ஆம் திகதிகளில் வட மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட வன்முறை என்பனவே இந்நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றன. இவற்றின் விளைவாக நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்ததோடு பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் விரிவான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் இலங்கையின் அண்மைக்கால நகர்வுகள் குறித்து உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கையாள வேண்டிய ஒழுங்கு முறைகள் குறித்த பரிந்துரைகளை பொலிஸ் மாஅதிபருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்திருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அற்ப அரசியல் இலாபம் தேடுவதில் கூட்டு எதிரணியினர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அத்தோடு மேலும் சிலர் நாட்டில் இன, மத ரீதியில் குரோதங்களை ஏற்படுத்தவும் அவற்றின் ஊடாக அற்ப இலாபமடையவும் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக நிதி அமைச்சர் மங்கள சமரவீர குரல் கொடுத்து வருவதோடு, ஜுன் மாதம் 1-0ஆம் திகதி மாத்தறை மக்கள் ஒழுங்கு செய்திருந்த அனைத்து அடிப்படைவாதிகள், இனவாதிகள், சந்தர்ப்பவாதிகளுக்கு எதிரான 'குரோதமற்ற நேரம்' நிகழ்ச்சியில் நேரடியாகக் கலந்து கொண்டு ஆதரவு நல்கினார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் சமரவீர, 'மாத்தறை என்பது ஆரம்ப காலம் தொட்டு அநியாயத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுபவர்கள் வாழும் பிரதேசமாக விளங்குகின்றது. இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் எதிராக ஐக்கிய இலங்கைக்காகவும் அர்ப்பணிப்புடன் அன்று தொடக்கம் இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். இந்நாட்டில் மீண்டும் குரோதத்தை விதைக்கவும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டவும் சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், மாத்தறை மக்கள் துணிச்சலுடன் முன்வந்து அவர்களது கருத்துக்கமைய 'குரோதமற்ற நேரம்' நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இன, மத ரீதியிலான குரோதங்களை விதைத்து அற்ப அரசியல் இலாபம் தேட மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் வாழ்வை கௌரவிக்கும் 'மங்களவின் அரசியல் பயணம்' என்ற நிகழ்வு கடந்த ஞாயிறு மாத்தறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச,'வெறுமனே இராணுவப் பலத்தினால் மாத்திரம் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. சமூக, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் முறையாகப் பேணப்படல் வேண்டும். ஒருமித்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இராணுவ பாதுகாப்புக்கு மேலாக பொருளாதாரத்தின் உறுதிப்பாடு, தேசிய ஒற்று​ைம என்பவற்றின் ஊடாகவே தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு, 'நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் முறை என்பன இருந்தால் மாத்திரமே ஒருமித்த இலங்கையை உருவாக்க முடியும். சகல இனத்தவர்களுக்கும் இடையில் சமாதானம், ஒற்றுமை, சமத்துவம், உள்ளிட்ட அனைத்தும் இருக்கும் போது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

உண்மையில் பல இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் ஒரு நாட்டின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் சகவாழ்வு, ஒற்றுமை, புரிந்துணர்வு மிகவும் இன்றியமையாதவை. அதன் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்ந்து கொண்டவர்களால்தான் அவற்றின் பெறுமதியைப் புரிந்து கொள்ளக் கூடியதாயிருக்கும். இதனையே அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

நாட்டின் மீது உண்மையான பற்றும், அன்பும் கொண்ட எவரும் இன,மத ரீதியான குரோதங்களையும் பகைமைகளையும் வளர்ப்பதற்கோ அவை வளர்வதற்கோ ஒருபோதும் துணை போக மாட்டார்கள். ஆனால் தற்போதைய சூழலில் நாட்டின் எழுந்துள்ள நிலைமைகளைத் தம் அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்பவர்கள் உண்மையாகவே இந்நாட்டின் மீது அன்பு, பற்று கொண்டவர்களாக இருக்க முடியாது என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.

இவர்கள் அற்ப அரசியல் இலாபம் தேட கையிலெடுத்துள்ள விடயங்கள், உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் இந்நாட்டுக்கு விமர்சனங்களையும் அழுத்தங்களையும் தேடிக் கொடுத்துள்ளன. இதனையிட்டு நாட்டின் மீது உண்மையாகவே பற்று கொண்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனாலும் கூட்டு எதிரணியினரதும் அவர்கள் சார்ந்தோரதும் முயற்சிகள் தொடர்பில் நாட்டு மக்கள் தெளிவான விளக்கத்துடன் உள்ளனர். அவர்களுக்கு பதிலளிப்பதற்கான உரிய நேரத்தை அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனெனில் இந்நாடு எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் நாடடின் வாழும் அனைத்து மக்களதும் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும். அதனூடாகவே நாடு வளமான சுபீட்சத்தைப் பெறும். நாட்டின் தேசிய ஐக்கியத்துக்கும் சகவாழ்வு நல்லிணத்திற்கும் ஊறு விளைவித்து அற்ப இலாபம் தேட மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சிக்கும் இந்நாட்டு மக்கள் ஒருபோதுமே துணைபோகத் தயாரக இல்லை.


Add new comment

Or log in with...