10 வருடங்களின் பின் இராணுவ புலனாய்வு அதிகாரி கைது | தினகரன்


10 வருடங்களின் பின் இராணுவ புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் தாக்குதலுக்குள்ளான போது...

ஊடகவியலாளர் உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்

ரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேரடி தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் 10 வருடங்களுக்குப் பின்னர் நேற்று (08) ஹங்வெல்லையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

புலனாய்வு விசாரணைகள் மூலம் கிடைத்த தகவல்களுக்கமையவே அவர் கைது செய்யப் பட்டுள்ளதாக CID உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் கோப்ரலான ராஜபக்ஷலாகே லலித் ராஜபக்ஷ என்ற அதிகாரியே நேற்று கைது செய்யப்பட்டவராவார். 2014இல் ஜேர்மனுக்கான இலங்கை தூதரகத்தில் பணியாற்றிய இவர், 2017இல் இலங்கை திரும்பியிருந்தார். 2009 ஜனவரி 23ஆம் திகதி கம்பஹா இம்புல் கொடையில் தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது உபாலி தென்னகோன் மோசமான தாக்குதலுக்கு உள்ளானார்.

மேற்படி தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பலரின் கைவிரல் அடையாளங்கள் மோட்டார் சைக்கிளிலிருந்து பெறப்பட்ட நிலையில், மேற்படி இராணுவ வீரரின் விரல் அடையாளம் அதில் மிக நெருக்கமானதாக இருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பலரிடமிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் விரல் அடையாளங்கள் பெறப்பட்ட நிலையில், மேற்படி இராணுவ அதிகாரியிடமும் விரல் அடையாளம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இதன் மூலமான விசாரணையிலிருந்து இத் தாக்குதலுடன் அவர் நேரடி தொடர்புபட்டுள்ளதாகப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பதாக இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த அதிகாரிகள் புலனாய்வு ரீதியான சாட்சி மற்றும் தொலைபேசி உரையாடல் மூலமான சாட்சிகளை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டிருந்தனர்.

அன்று இடம்பெற்ற மோசமான அத் தாக்குதலுக்குப் பின்னர் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் உபாலி தென்னக்கோன், அவரது மனைவியான தம்மிக்கா தென்னக்கோன் ஆகியோர் சந்தேக நபர்களை இனங்காண்பதற்கான அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக 2016இல் இலங்கைக்கு வந்து சென்றிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.

விரல் அடையாள விசாரணையின் மூலம் நேற்று கைது செய்யப்பட்டவர் எட்டாவது சந்தேக நபராவார். அவரை இனம்காண்பதற்கான அணிவகுப்பொன்றை நடத்துவதற்கு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்காக உபாலி தென்னக்கோன் மற்றும் அவரது மனைவியையும் இலங்கைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...