Friday, March 29, 2024
Home » ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 மில். டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 மில். டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை

by Rizwan Segu Mohideen
January 17, 2024 4:55 pm 0 comment

ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலக வளாகத்தில் நேற்று (16) இலங்கை அரசாங்கத்திடம் இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

2023 டிசம்பர் 30 ஆம் திகதி 117.3 மெட்ரிக் டொன் சூரியகாந்தி எண்ணெயும், 2024 ஜனவரி 04 ஆம் திகதி 13.1 மெட்ரிக் டொன் எண்ணெயும் ரஷ்ய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது, மேலும் மொத்த நன்கொடையான 130.41 மெட்ரிக் டொன் எண்ணெய் இலங்கை அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 351.9 மெற்றிக் டொன் சூரியகாந்தி எண்ணெய் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அவசர பதிலளிப்பு திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது மற்றும் நாடு முழுவதும் உள்ள குறைந்த வருமானம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நேரடியாக இது சென்றடையும். குறிப்பாக மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 8625 குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

இலங்கையில் பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் மக்களின் அவசரத் தேவைகளை உணர்ந்து அவற்றிற்கு விரைவாகப் பதிலளிப்பதற்கான இந்த கூட்டு முயற்சியானது ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவில் மிக முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்நிகழ்வில், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். தகயரான், உலக உணவுத் திட்டத்தின் இந்நாட்டுப் பணிப்பாளர் ஜெரார்ட் ரெபெலோ உள்ளிட்ட அதன் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் வெர்னான் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அமீர் அஜ்வாட், கொழும்பு உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம். எம்.எச்.ஏ.எம். ரிப்லான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT