உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய மாட்டோம் | தினகரன்


உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்ய மாட்டோம்

"அபிவிருத்தி மட்டும் நோக்கமல்ல" அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து அரசியல் செய்யமாட்டோம் என  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். 

கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் (07)  அமான் வீதிக்கான ரண்மாவத்த காபட் இடும் வீதி அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும்  உரையாற்றுகையில்,  இங்கு வீதிகளை மாத்திரம் திறந்து விட்டுச் சென்று அபிவிருத்திகளை மாத்திரம் நடை முறைப்படுத்த வரவில்லை. 

மாறாக இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காக போராடுகிறோம். முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்கள், பாதுகாப்பு, வாழ்வாதாரம், காணி போன்ற விடயங்களை இழந்து வாழ்ந்து வருகிறோம். 

பேரினவாதிகளின் அடாவடித்தனங்களுக்கும் அட்டூழியங்களுக்குள்ளும் தள்ளப்பட்டு எமது குரல் வலைகளை நசுக்குகின்ற சதிகாரர்களாக நாட்டு நிலைமைகள் படு மோசமாக மாறியிருக்கின்றன.  

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்  இன்று பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  பாராளுமன்றத்தில் இனவாதிகள் இருக்கிறார்கள். அரசியல் யாப்புக்கு முரணாக நாங்கள் செயற்பட்டதில்லை. வீணாண புரளிகளை கிளப்பி மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டு பண்ணுவதையோ பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்தவர்களை விடுவியுங்கள் என மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறோம் என்றார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர் 


Add new comment

Or log in with...