கல்வியறிவு பெற்ற ஒருவரே ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் | தினகரன்


கல்வியறிவு பெற்ற ஒருவரே ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர்

ஓரிரு தினங்களில் பெயர் வெளிவரும் 

நன்கு கல்வி அறிவைப் பெற்றுள்ள, நாட்டில் சமூக மாற்றத்தை உறுதிப்படுத்தக் கூடிய, சர்வதேசத்துடன் ஒத்துப்போகக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்குமென பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.  

தமது கட்சியின் ​வேட்பாளர் யார் என்பதை ஓரிரு தினங்களில் தெரிந்துகொள்ள முடியும்.முடிந்தால் ராஜபக்‌ஷ தரப்பின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.  

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ஹேஷா விதானகே எம்.பி இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.   ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் அவருடைய கல்வித் தகைமை என்ன என்பது பற்றி எவரும் கவலையடையத் தேவையில்லை. க.பொ.த சாதாரண தரம், உயர்தரப் பரீட்சைகளில் தேர்ச்சிபெற்று, சர்வதேச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஒருவரே ஐ.தே.கவின் வேட்பாளராவார். அவர் யார் என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துகொள்ள முடியும்.

வேட்பாளர் விவகாரத்தில் ஐ.தே.கவின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஐ.தே.கவின் உறுப்பினர்கள் யாவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர்.

கடந்த காலங்களில் வேறு விடயங்களில் கட்சிக்குள் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் சகலரும் ஏகமனதாக வேட்பாளரை தெரிவுசெய்வோம் என்றார்.

திருட்டுத்தனமாக பரீட்சைகளில் தேர்ச்சிபெற்று, கையெழுத்தே போடத்தெரியாது கைநாட்டுக்கள் ஆட்சிசெய்த நிலையில், நாட்டை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கட்டி எழுப்பக்கூடிய, சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவரே ஐ.தே.கவின் வேட்பாளராகக் களமிறக்கப்படுவார்.

சுதந்திரக் கட்சியின் ​செயலாளராகவிருந்த ஒருவரை அக்கட்சியினரே சரியாக அடையாளம் கண்டுகொள்ளாத நிலையில், அவரை சரியான முறையில் அடையாளம் கண்டு ஜனாதிபதியாக்கிய பெருமையைக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது பொக்கட்டில் உள்ள துரும்புச் சீட்டை சரியாகப் பயன்படுத்தி சரியான நபரை களமிறக்குவார் என்பதில் தமக்கு எந்தவித சந்தேகமும் இல்லையென்றும் கூறினார்.

(மகேஸ்வரன் பிரசாத்)  


Add new comment

Or log in with...