இலவச மாங்கன்று வழங்கிய திருமண தம்பதி | தினகரன்


இலவச மாங்கன்று வழங்கிய திருமண தம்பதி

இலவச மாங்கன்று வழங்கிய திருமண தம்பதி-Mango Tree for Invitees-in Wedding

திருமண வைபவங்களில் அவரவர் வசதிக்கேற்ப பல்வேறு புதுமைகளை இன்று புகுத்திவருகின்றனர். அதற்காக உடை, உணவு, ஆபரணம் என்று நிறைய செலவுகளை செய்வதை நடைமுறை வாழ்க்கையில் பார்த்துவருகின்றோம். எனினும் குறிப்பிட்ட சிலரே இதுபோன்ற வைபவங்களை சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

பொதுவாக திருமண வரவேற்பு வைபவங்களுக்கு வருபவர்களுக்கு நினைவு பரிசாக தாம்பூல தட்டு, குங்கும சிமிழ், அழகிய பொம்மைகள் என்று அவரவர் வசதிக்கேற்ப வழங்குவார்கள். எனினும் கடந்த மாதம் 29 ஆம் திகதி நல்லூரில் நடைபெற்ற ரோஷான், றொஷாந்தி திருமண வரவேற்பு வைபவத்திற்கு வருபவர்களுக்கு வித்தியாசமான முறையில் இலவசமாக மாங்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

திருமண வரவேற்பு வைபவத்திற்கு வருகை தந்தவர்கள் அனைவரும் புதுமண தம்பதிகளை வாழ்த்தியதுடன், அவர்களுடைய முயற்சிக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

இலவச மாங்கன்று வழங்கிய திருமண தம்பதி-Mango Tree for Invitees-in Wedding

வைபவத்திற்கு வந்தவர்கள் ஆர்வத்துடன் மாங்கன்றுகளை பெற்றுச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. அது மாத்திரமன்றி இரண்டு மணிநேரத்தில் அனைத்து மரக்கன்றுகளும் எடுத்துச்செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நம்மையும் நம் திருமண நாளையும் அவர்கள் மறக்காமல் இருப்பதற்கு இதுவொரு வாய்ப்பாக இருக்கும் என்பதோடு, வீட்டுக்கொரு மாமரக்கன்று அவர்களுக்கும் பயனுள்ளதாக அமையுமென புதுமண தம்பதிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற விழிப்புணர்வூட்டும் நற்செயல்கள் ஏனையோருக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதோடு, நாளடைவில் வைபவங்களில் இவ்வாறான விடயங்கள் சம்பிரதாயமாக மாறினால் ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமான சுற்றுசூழலை உருவாக்க முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

- வசந்தா அருள்ரட்ணம்


Add new comment

Or log in with...