புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதே ஆரோக்கியம் | தினகரன்


புகையிலைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதே ஆரோக்கியம்

உலகலாவிய ரீதியில் புகையிலை பாவனை ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. போதைப்பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவையே. கஞ்சா, அபின் போன்ற பொருட்களை சட்டரீதியாக விற்பனை செய்ய அனுமதி இல்லை. ஆனால் புகையிலை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எந்தவொரு போதை பொருளை விடவும் புகையிலை தான் அதிகம் கேடு விளைவிக்கிறது. சந்தையில் புகையிலை சிரமமின்றி கிடைப்பது தான் இதற்கு காரணம். போதைப்பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வருடம்தோறும் 8.2மில்லியன் மக்கள் மரணம் அடைகின்றனர். இதில் 7மில்லியன் மக்கள் நேரடியாக புகையிலைப் பாவிப்பதன் மூலம் மட்டுமே இறக்க நேரிடுகிறது. எஞ்சியுள்ள 1.2மில்லியன் மக்கள் புகைபிடிப்பவர்கள் வெளிவிடும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் நோயின் மூலம் இறக்க நேரிடுகிறது.  

இன்று புகையிலை, பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகின்றது. அவற்றில் மெல்லும் வகை புகையிலை, நுகரும் வகை புகையிலை, புகைக்கும் வகை புகையிலை என்பன குறிப்பிடத்தக்கவையாகும். வாயில் மெல்லும் வகை புகையிலையாக ஹன்ஸ், மாவா, வெற்றிலையுடன் புகையிலை ஆகியவற்றை குறிப்பிடலாம். மூக்கின் வழியாக நுகரக்கூடிய புகையிலையும் உள்ளது.  

புகையின் மூலம் பாவிக்கப்படும் புகையிலைக்கு பீடி, சிகரெட், சுருட்டு போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் எந்த வடிவத்தில் புகையிலையை பயன்படுத்தினாலும் அவை உயிர்க்கொல்லியே. புகையிலையில் 4ஆயிரம் வகையான நச்சு பொருட்கள் உள்ளன. அவற்றில் 70விதமான புற்றுநோயை உருவாக்கும் முதல் தர காரணிகள் அடங்கியுள்ளது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. புகையிலையினால் புற்றுநோய் மட்டுமின்றி மாரடைப்பு, சுவாச கோளாறுகள், பக்கவாதம், இருமல் போன்ற பலவித நோய்கள் ஏற்படுகின்றது.  

நிக்கொட்டின் என்னும் போதைப்பொருள் புகையிலையில் அடங்கியுள்ளது. இதை ஒன்று அல்லது இருமுறை உபயோகித்து பார்த்தாலே போதைக்கு அடிமையாக்கிவிடும் தன்மைகொண்டது. சட்ட ரீதியாக கிடைக்கும் ஒரே ஒரு போதைப்பொருள் புகையிலை மட்டும் தான். பொதுவாக 13வயதில் தான் இதைப் பாவிக்க ஆரம்பிக்கிறார்கள் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தல், தவறான முன்மாதிரி, இதன் தீய விளைவு அறியாமை என்பவற்றினால் இதை ஆரம்பிக்கிறார்கள். என்றாலும் இதன் பாவனையை விட்டு வெளிவர 55.4சதவீத மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் நிக்கொட்டின் ஏற்படுத்தும் அடிமைத்தனத்தால் அவர்களால் எளிதில் அதிலிருந்து வெளிவர முடிவதில்லை. இதிலிருந்து விடுபட வேண்டுமானால், புகையிலை உபயோகிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட வேண்டும்.  

குறிப்பாக மூச்சு பயிற்சி, அதிகம் தண்ணீர் பருகுதல், புகையிலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை திசை திருப்புதல் என்பன சுட்டிக்காட்டத்தக்கவையாகும். இந்த சுய உதவி ஆலோசனைகள் மூலம் புகையிலை பழக்கத்திலிருந்து வெளிவர முயற்சிக்கலாம். இதுவும் உதவவில்லை என்றால் அது தொடர்பான மருத்துவ நிபுணரை அணுகி அடிமை தனத்திலிருந்து விடைபெறலாம்.  

போதைப் பொருளுக்கு அடிமையானால் அது புதை குழிக்கு இழுத்து சென்றுவிடும். மனிதன் உடல் சார்ந்த உபாதைகளுக்கு அரசு செலவிடும் தொகை அதிகம். இன்று தனி நபரின் மனமாற்றம் அவசியமானது. தங்களின் எதிர்காலம், சந்ததியினரின் எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.  

புகையிலையை தடுக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் புகையிலை இல்லா நகரத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும். இது ஒரு தனி மனிதப் பிரச்சினை அல்ல. மாறாக ஒரு சமுதாய பிரச்சினை. அதனால் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஓரணியில் நின்று செயல்பட வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.   


Add new comment

Or log in with...