பதின்ம பருவத்தினரின் நடத்தைகளில் அவதானம் செலுத்துவது பெற்றோரின் கடமை | தினகரன்


பதின்ம பருவத்தினரின் நடத்தைகளில் அவதானம் செலுத்துவது பெற்றோரின் கடமை

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பதின்ம பருவம் (Teenage) மிக முக்கியமானது. 13-இலிருந்து 19வயதுவரையிலான காலமே பதின்பருவம் ஆகும். இந்த வயதில் ஆண், பெண் இருபாலரிடமும் உடல், உளரீதியாகப் பல மாற்றங்கள் நிகழும். பதின்ம பருவத்தைக் கண்ணாடிமேல் நடப்பதுபோன்று மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அக்காலப்பகுதியில் பிள்ளைகள்மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்தி வழிநடத்த வேண்டும். இல்லாவிடில் அவர்களது எதிர்காலமே பாதிக்கப்படக்கூடும். பதின்ம பருவத்தில் உடல், உள நலம், உணர்வு நலம் (Emotional Health), நடத்தை நலம் (Behavioral Health) ஆகிய நான்கையும் ஆரோக்கியமானவையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.  

குறிப்பாக பதின்ம பருவத்தினரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய அவர்களைப் பழக்க வேண்டும். தூங்கும் போதுதான் உடல் இயங்குமுறை நிர்மாணிக்கப்படும். அதனால் ஒரு நாளைக்கு 9மணி நேரத் தூக்கம் பதின்ம பருவத்தினருக்கு அவசியமானது. பதினம பருவத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில், உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.  

இப்பருவத்திலிருப்பவர்கள் துரித உணவு, நொறுக்குத்தீனி போன்றவற்றை அதிகம் விரும்பி உட்கொள்வார்கள். அதன் விளைவாக உடல் எடை அதிகரித்து, உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சில குழந்தைகள் தங்களை ஒல்லியாகக் காட்டிக்கொள்ள உணவுக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வார்கள். இத்தகைய விஷயங்கள் ஆரோக்கியத்துக்குப் புறம்பானவை. இதனைப் பெற்றோர் எடுத்துக்கூறி, ஆரோக்கியமான உணவு வகைகளை உட்கொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பழங்கள், மரக்கறிகள், கீரைகள், பருப்பு வகைகளை அதிகம் உண்ணப்பழக்க வேண்டும்.  

குழந்தைகளைப் போன்று பதின்ம பருவத்தினருக்கும் சில தடுப்பூசிகள் அவசியம் வழஙக்ப்பட வேண்டும். அது குறித்த விழிப்புணர்வும் பெற்றோருக்கு அவசியம். இது தொடர்பில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

மேலும் பதின்ம பருவத்தில் ஆண், பெண் குழந்தைகளின் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும். மனநலத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்ப்பாலினம் மீதான ஈர்ப்பு பதின்ம பருவத்தில்தான் தோன்றும். இதனால் இவ்வயதினர் பாலியல் கிளர்ச்சிக்கும் உள்ளாவார்கள். எதிர்காலம் குறித்த சிந்தனைகளும் மேலெழும். இவை அனைத்தையும் பகுத்துப் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாத வயது என்பதால், மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்வார்கள். இந்நிலையைப் புரிந்துகொண்டு மன அழுத்தம் தரும் சூழல்களைத் தவிர்க்க பெற்றோர் ஆலோசனை வழங்க வேண்டும். நண்பர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல், ஆரோக்கியமான நட்பு வட்டத்தை உருவாக்கவும் பெற்றோர் அவர்களுக்கு உதவலாம். அதேபோன்று பதின்மபருவக் குழந்தைகளுக்கு முன்பாக பெற்றோர் சண்டையிட்டுக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அதுவும் அவர்களின் மனநிலையைப் பாதிக்கக்கூடியதாக அமையும்.  

பொதுவாக பதின்ம பருவத்தினர் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டுவர். வளர்ந்தவர்களது பக்குவம் அவர்களிடம் காணப்படாது. அதனால் உணர்வுகளைக் கையாளத் தெரியாமல் அவர்கள் தவிப்பர். உணர்வுநலம் பாதிக்கப்பட்டால் பதற்றம், மனச்சோர்வு, உணவு உட்கொள்வதில் ஆர்வம் குறைதல், எதிலும் ஈடுபாடின்றி இருத்தல் போன்ற நிலைகள் ஏற்படலாம். இவை அனைத்துமே மன அழுத்தம் வருவதற்கான அறிகுறிகளாகும். இவ்வகை அறிகுறிகள் தெரிந்தால் தாமதியாமல் மனநல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.  

`தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு அவசியம்’ என்பதைப் பதின்ம பருவத்தினருக்கு உணர்த்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். `உன்னை ஒருவர் காயப்படுத்தினால் எப்படித் துன்பப்படுவாயோ, அதேபோலத்தான் நீ காயப்படுத்தும்போது மற்றவரும் துன்பப்படுவார்’ என்பதை எடுத்துக்கூறி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். உணர்வுகளைக் கையாளத் தெரியாமல், பெற்றோரிடமும் அவற்றைப் பகிர்ந்துகொள்ளாமல், மனதுக்குள்ளேயே போட்டுப் புதைத்துக்கொள்வதால் தீர்வு கிடைக்காது. இதன் விளைவாக பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்து, மனநிலையை பாதிக்கும். அதனால் `பெற்றோரிடம் தெரிவிக்க முடியாத பிரச்சினைகளை ஆசிரியரிடமோ, நெருங்கிய உறவினரிடமோ தெரியப்படுத்தலாம்’ என்று எடுத்துக்கூற வேண்டும். இவற்றைவிடுத்து தம் வயதையொத்த நண்பர்களிடம் ஆலோசனை கேட்பதால் தம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.  

மேலும், ஒருவர் வாழ்க்கையில் வெற்றியடைய, நன்னடத்தை மிகவும் முக்கியம். பாடசாலை, அலுவலகம், குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிலும் நன்னடத்தை முக்கியப் பங்காற்றுவதால், அது குறித்த முக்கியத்துவத்தைப் பதின்ம பருவத்தினருக்கு உணர்த்த வேண்டியதும் பெற்றோரின் கடமையே. புகைபிடித்தல், மது மற்றும் பிற போதைப் பழக்கங்களிலிருந்து விலகியிருக்க வேண்டியதன் அவசியத்தையும், அவற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் பதின்ம பருவத்தினருக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.  

இப்பருவத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படுதல், சண்டையிடுதல் என்பனவும் அதிகம் ஏற்படும். அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் அவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பான வேகத்தில் செல்லவும், வீதி ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடிக்கவும், விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்புகள் தொடர்பில் எடுத்துக்கூறி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  

இதேவேளை, பதின்ம பருவத்தினர் மத்தியில் பரவலாகக் காணப்படும் பிரச்சினைகளில் ஒன்றுதான், `சாப்பிடுவதில் குறைபாடு’ (Eating Disorder) ஆகும். இதில் இரண்டு வகை உண்டு. தன்னை ஒல்லியாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் வேளா வேளைக்கு உணவைச் சாப்பிடாமல் தவிர்த்துக்கொள்ளுதலாகும். இதன் விளைவாக உடல் எடை குறைந்து, மெலிந்து காணப்படுவார்கள். சிலர் தமக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், நடிகர்கள்போலத் தாங்களும் இருக்க வேண்டும் என்பதற்காக முறையற்ற உணவுமுறைகளைப் பின்பற்றுவார்கள். இதனால் உடல் பருமன் ஏற்படும். மன அழுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காகச் சிலர் அதிகமாக உணவு உட்கொள்வார்கள். சிலர் மரபணு பிரச்சினையாலும் பதின்ம பருவத்தில் உணவு உட்கொள்வதில் ஆர்வமில்லாமல் இருப்பர். சாப்பிடுவதைத் தவிர்த்தல், வழக்கத்துக்கு மாறாக அதிகம் சாப்பிடுதல், தன்னைப் பற்றியே அதிகம் நினைத்து குறைபட்டுக்கொள்ளுதல் என்பன சாப்பிடுதல் குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகளைக் கொண்டிப்பவர்களுக்கும் மனநல ஆலோசகர் அல்லது மருத்துவரின் ஆலோசனைகள் மிகவும் அவசியமானது.  

இவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்க்க குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதும், மிகக் குறைவாகச் சாப்பிடுதல் அல்லது அளவுக்கு அதிகமாக உண்ணல் என்பனவும் உதவ முடியும். இது தொடர்பில் பதின்ம பருவத்தினரைப் பழக்கப்படுத்த வேண்டும். `ஒவ்வொருவரின் உடலமைப்பும் வெவ்வேறானது. அவரவர் உடலமைப்புக்கு ஏற்பவே உடல் எடையும் உயரமும் இருக்கும்’ என்பதைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லி புரியவைப்பதும் பெற்றோரின் பொறுப்பாகும்.  

மேலும் தம் தோற்றம் குறித்து பதின்ம பருவத்தினர் அதிகமாக யோசிப்பர். யாராவது அவர்களின் நிறம், உயரம், தோற்றம் குறித்து விமர்சித்தால், மனதளவில் பெரிதும் கவலை கொள்வார்கள். இதை நேர்மறையாக அணுக பெற்றோர் அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். வெளிப்புறத் தோற்றத்துக்கும் ஒரு மனிதனின் குணநலன்களுக்கும் தொடர்பில்லை என்பதை உணர்த்த வேண்டும். ‘பிறரின் தோற்றத்தை விமர்சிக்கக் கூடாது’ என்பதையும் அழுத்தமாகப் பதியவைக்க வேண்டும்.  

பதின்ம பருவத்திலிருப்பவர்களை ஒப்பிட்டு  பெற்றோரே விமர்சிக்கக் கூடாது. இது அவர்களது தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும். மாறாக, பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதுபோன்று பேசினால், நேர்மறையான எண்ணங்கள் தோன்றும். தங்களின் உடலமைப்பு குறித்து யோசிப்பதைத் தவிர்த்துவிட்டு படிப்பின் மீது கவனம் குவிப்பார்கள். பிறரின் உடலமைப்பைக் கேலி செய்யாமலிருக்கவும், தங்கள் உடல் தொடர்பான தெளிவையும் பெறுவார்கள்.  

இன்றைய காலகட்டத்தில் பதின்ம பருவத்தினர் பெரும்பாலான நேரத்தைச் சமூக வலைதளங்களில் தாம் செலவிடுகின்றனர். இவ்வயதிலிருப்போரை தவறான பாதையில் இட்டுச்செல்ல போலிக் கணக்குகளில் பலர் வலம் வருகிறார்கள். 50வயதுள்ளவர் தன்னை 15வயதுக்காரராகக் காட்டிக்கொள்வதும் நடக்கிறது. அதனால் இணையத்தை எப்படிப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பது அவசியம். இணையத்தில் எதைச் செய்தாலும் அதைப் பொது வெளியிலுள்ளவர்களால் பார்க்கவும் கண்காணிக்கவும் முடியும் என்பதை பதின்ம பருவத்தினருக்கு உணர்த்த வேண்டும்.  

இப் பருவத்தினரை வளர்ப்பதே ஒரு கலை. அதைப் பெற்றோர் கற்றுக்கொள்வதில் தவறில்லை. குழந்தைகள் வளர வளர, பெற்றோரிடமிருந்து தள்ளிச் சென்றுவிடுகிறார்கள். பதின்ம பருவத்தை நெருங்கியதும், அவ்விடைவெளி மேலும் அதிகரித்துவிடும். இவ்வயதிலுள்ளவர்களின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது. அதேபோன்று அதிகமாகத் திட்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக, பொறுமையாக அணுகும்போது பெற்றோர் - - பதின்ம பருவப் பிள்ளைகள் இடையேயான உறவு பலப்படும். `உன்மேல் அன்பாக இருக்கிறேன்’ என்பதை அவர்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அவர்களிடமிருக்கும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைக்கூட மனம் திறந்து பாராட்ட வேண்டும். அவ்வயதுக் குழந்தைகள் எதையாவது கூற வந்தால், காது கொடுத்துக் கேட்கவேண்டும். ஏனெனில் அவர்கள் விரும்புவதே உங்கள் அரவணைப்பைத்தான்! 


Add new comment

Or log in with...