சொற்களின் பிரதி சங்கிலியன் தரை | தினகரன்


சொற்களின் பிரதி சங்கிலியன் தரை

ஒரு வாசிப்பாளனுடைய வாசிப்பின் தன்மையினை அதிகரிப்பதற்கு தொடராக எழுதுகின்ற எழுத்தாளர்களின் படைப்புக்கள் மிக முக்கியமானதாக அமைவதினை மறுக்க முடியாது. அதற்கான காரணம் அவ் எழுத்தாளர்களின் தொடர்ச்சியான எழுத்து முறைமையாகும். தொடரான முறையில் எழுதுகின்றபோது அவ்வெழுத்துக்கள் தீர்க்கதரிசனமாக, சமூக அக்கறை கொண்ட படைப்பாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.  

அவ்வகையில் ஈழத்தின் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பல்துறையிலும் முன்னோடியாக இருந்து இலக்கியச் சூழலில் பெரும் அதிர்வினை ஏற்படுத்திய மு. பொன்னம்பலம் தமிழின் மீது மிகுந்த மரியாதை கொண்ட படைப்பாளியாவார்.

திறனாய்வின் புதிய திசைகள் என்ற இவரின் தொகுதியானது ஆய்வுக் கட்டுரைகளின் மீது பெரும் கட்டுடைப்பினை மேற் கொண்ட படைப்பிலக்கிய பிரதிகளாகும். அது, அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், காலி லீலை, நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், ஊஞ்சல் ஆடுவோம், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள் என பல்வேறுப்பட்ட படைப்புக்களை தமிழ்ச் சூழலின் முன் உரையாடலுக்கான தளமாக முன்வைத்தவர்களில் மு.பொ மிக முக்கியமானவர்.

மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ பின்னாளில் தனக்கென ஒரு பெருத்த அடையாளத்தினை தனது எழுத்துக்கள் மூலம் வகுத்துக் கொண்ட ஆளுமையாவார்.

1950களில் எழுதுவதற்கு ஆரம்பித்த மு.பொ 1968ல் தான் தனது முதல் தொகுதியினை வெளியிட்டு அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

இவரது சங்கிலியன் தரை முக்கியமான படைப்பாகும்.  

தன்னுடைய படைப்புக்களில் எழுகின்ற விமர்சனங்களுக்கு காத்திரமான எதிர்வினைகளை தெரிவிக்கும் பாங்கு மு.பொவிடம் அதிகமாகவே காணப்பட்டது. மலேசியாவில் தான் சிறி சோமசுந்தரம் கலை இலக்கிய அறவாரியம் இவரின் எழுத்தியக்க தொடர் செயற்பாட்டினை கரிசனத்தில் கொண்டு 2010, 2011ம் ஆண்டுகளுக்கான அனைத்துலகப் புத்தகங்களுக்கான இலக்கியப் பரிசாக பத்தாயிரம் அமெரிக்க டொலர்களை மு.பொவிற்கு பரிசாக வழங்கியது.

தனது கருத்தாடல்களின் மீது காத்திரமான உரையாடல்களைத் தொடங்குவதே தனது எழுத்தினது வெற்றியாகக் கருதிக் கொண்ட மு.பொ எழுத்தில் வாழ்ந்து எழுத்தாகிய படைப்பாளியாவார்...   


Add new comment

Or log in with...