குடிநீருக்கு கட்டண அதிகரிப்பை செய்யாமலேயே நீர் வழங்கல் திட்டங்களுக்கு முன்னுரிமை | தினகரன்

குடிநீருக்கு கட்டண அதிகரிப்பை செய்யாமலேயே நீர் வழங்கல் திட்டங்களுக்கு முன்னுரிமை

பதிலமைச்சர் லக்கி ஜயவர்தன

சுத்தமான குடிநீருக்கு கட்டண அதிகரிப்பை செய்யாமல் நீர் வழங்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையும் இப்பணியினை விரிவுபடுத்துகின்றது என நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி பதிலமைச்சர் லக்கி ஜயவர்தன தெரிவித்தார்.

மாத்தறை அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதியில் மாத்தறை குடிநீர் வழங்கல் திட்டத்தின் நான்காவது விரிவாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்து அங்கு  உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த விரிவாக்கல் திட்டத்தின் மூலம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களை சேர்ந்த 12 பிரதேச செயலகங்களிலுள்ள 372 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 3 இலட்சம் மக்கள் பயனடையவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி நோக்கான 2030 ஆம் ஆண்டில் சகலருக்கும் சுத்தமான குடிநீர் திட்டத்தை எமது நாட்டில் செயற்படுத்த அமைச்சர் ஹக்கீம் முன்வைத்த பிரேரணைக்கு அமைவாகவே இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதற்காக இலங்கை அரசாங்கம் 4200 மில்லியன் ரூபாய்களை முதலீடு செய்திருப்பதுடன் வெளிநாட்டு உதவியாக 14 ஆயிரம் மில்லியன் பெறப்பட்டுள்ளது.

இங்கு அமையவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 60 ஆயிரம் கனமீற்றர் நீரை சுத்திகரிக்க முடியும். மேலும் இத்திட்டத்தின் மூலம் மாலிம்பட, கல்கெடிய,யபுயன,தந்தெனிய, கொடிகஹகந்த முதலான பிரதேசங்களில் நிலக்கீழ் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன. இதன்மூலம் தற்போது நீரை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக நீரை பெற்றுக்கொள்ள முடியும்.

மலைப்பாங்கான மற்றும் குண்டும் குழியுமான பிரதேசங்களில் இலகுவாக நீரைப்பெற்றுக்கொள்ள வழியமைத்தல் மேலும் பழமையான குழாய்க்கட்டமைப்புக்களை பிரதியீடு செய்து நீர்விரயத்தை கட்டுப்படுத்தல் முதலான செயற்பாடுகளை முன்னெடுப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தற்போது செயற்பாட்டிலுள்ள மாத்தறை, மிரிஸ்ஸ ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தின் மூலம் அண்ணளவாக  சுமார் 3 இலட்சம்  மக்கள் பயனடையவுள்ளதுடன் இன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பூர்த்தியடையும் போது இப்பிரதேசத்திலுள்ள மேலும் 3 இலட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க முடியும். 2015 இல் 42 வீதமாக காணப்பட்ட தேசிய நீர்வழங்கல் செயற்பாட்டை 50 சதவிகிதத்திற்கு உயர்த்திருப்பதுடன் 2020 இல் இதனை 65 சதவிகிதமாக உயர்த்தி முக்கிய நீர்வழங்கல் திட்டங்களை உருவாக்கி எமது அமைச்சு செயற்பட்டு வருகின்றது. அதற்காக நான் இங்கு எமது முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்றார்.


There is 1 Comment

Bandarawela visaka Mawatthai maha nagarasabai pagudikku Thanner Pracchanai nenda natkalaga ulladu ida nal angu valum sumar 15 gudumbangal pala thanner prachanaikku alagi ullanar .

Add new comment

Or log in with...