மொபைல், இணைய பயன்பாட்டில் அவதானம் தேவை | தினகரன்


மொபைல், இணைய பயன்பாட்டில் அவதானம் தேவை

தற்போதைய காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தள பாவனை அதிகரித்துக் காணப்படுவதோடு, சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருமே அவற்றை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இவற்றைத் தவிர்த்து விட்டு, நாம் எமது நாளாந்தக் கடமைகளை செய்ய முடியாதளவுக்கு,  இவை எமது வாழ்க்கையுடன், எமது நாளாந்தக் கடமைகளுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளன.

எது எவ்வாறாயினும், இச்சாதனங்களை தவறான வழிப் பிரயோகமின்றி  உரிய முறையில் பயன்படுத்துவதானது  எமது கைகளில் தான் தங்கியுள்ளது.

சிறுவர்களை பொறுத்தவரையில் எது நன்மை, எது தீமை என்பதை பற்றி தெரியாதவர்களாக உள்ளனர். அவர்கள் இச்சாதனங்களை கையாளும்போது, ஆரம்பத்திலேயே இதன் சாதக, பாதக விடயங்கள் தொடர்பாக உரிய முறையில் அவர்கள் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும்.

ஆகையால், அவர்களை வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு பெற்றோருக்கும், சமூகத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் உண்டு. இத்தகைய கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தளங்களை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பில் பெற்றோரும் பாடசாலைச் சமூகமும் உரிய முறையில் சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டியது அவசியமாகும்.

பரந்துபட்ட உலக அறிவை எமது கைகளுக்குள் கொண்டுவந்து தரும் கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தள பாவனையினால், அனைவரினதும் வாழ்வு இலகுபடுத்தும்.

இருந்தபோதிலும், இச்சாதனங்களின் பயன்பாட்டின் மூலம் நன்மையான சம்பவங்களை நாம் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, தீமையான சம்பவங்களையும் எதிர்நோக்க நேரிடுகின்றது. எது எவ்வாறாயினும், இவற்றை அணுகும் முறையில் எமது கவனம் தங்கியிருக்க வேண்டும்.

இவை பற்றி நாம் சற்று ஆராய்வோமானால்,

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணையத்தளங்களை தேவையற்ற முறையிலோ அல்லது தவறான முறையிலோ பயன்படுத்துதல் பொய், ஏமாற்றுதல், தற்கொலை போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகின்றன.

இவ்வாறான தேவையற்ற விடயங்களில் ஈடுபடும்போது எமது தொலைபேசியில் தேவையற்ற வகையில் இணைக்கப்படும் அல்லது இணையும் செயலிகள் மூலம், எமக்கும் தெரியாமலே, எமது தொலைபேசியிலுள்ள தகவல்கள் இணையத்தளத்தில் கலந்து விடுகின்றன. இதன் மூலம் எங்களது தொலைபேசியிலுள்ள தனிப்பட்ட தகவல்கள், தனிப்பட்ட படங்கள், காணொளிகள் மற்றும் கடவுச்சீட்டுக் குறியீடுகள் ஏனையோரால் திருடப்படுவதற்கு வழிவகுக்கன்றது. ஆகையால், இவ்வாறான விடயங்களை தொலைபேசியில் சேமிக்காதிருப்பது சிறந்தது ஆகும்.

மேலும், இணையத்தளம் மூலம் எங்களை எவராவது ஏமாற்றுவதற்கு முயற்சிக்கலாம். ஆகையால், எங்களிடமுள்ள தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் கடவுச் சொற்கள் போன்றவற்றை எவரிடத்தும் பகிர்ந்துகொள்ளாதிருத்தல் சிறந்தது.

சமூக வலைத்தளங்களை எடுத்து நோக்கினால், எமக்கு தெரிந்த அல்லது தெரியாத எவருடனும் தொடர்புகொள்ள முடியும் என்பதோடு, அவர்கள் பரிமாறும் தகவல்கள் உண்மையான, நன்மையான விடயங்கள் மாத்திரமின்றி பொய்யான, தீமையான விடயங்களும் இருக்கலாம். சிலவேளைகளில் இவற்றின் மூலம் எமக்கு பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

அத்தோடு சமூக வலைத்தளங்களின் மூலம் தொடர்புகொள்ளும் நபர்கள் தொடர்பாக நாம் கவனமாக இருக்க வேண்டும். மனிதர்களின் குணாதியங்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமானது. ஆகவே தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதிருத்தல் சிறந்தது. ஏனெனில் அவர்கள் யாராயினும் கீழ்த்தரமான நோக்கத்திற்காகவும் பணத்திற்காகவும் அவற்றை விற்பனை செய்யவும் நேரிடலாம்.

தனிப்பட்ட புகைப்படம், காணொளி, குரல் பதிவு எதையும் மின்னஞ்சலிலோ அல்லது ஏனையோர் இலகுவாக பெற்றுக்கொள்ளும் தளங்களிலோ பதிவிடுவது சிறந்தது அல்ல. ஏனெனில், அவற்றை திருடி எங்களிற்கு ஆபத்தும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைத்து பயன்படுத்தலாம். மேலும், அவற்றை வைத்துக்கொண்டு எங்களை அச்சம் ஊட்டி கப்பம் கேட்டு மிரட்டவும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இனந்தெரியாத தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மற்றும் மின்னஞ்சல் ஊடாக உதவி செய்தல், இலவசமாக ஏதாவதொன்றை பெற்றுக்கொடுத்தல், எமது வங்கிக் கணக்கில் வைப்பிலிடுதல், நீங்கள் பரிசு ஒன்றை பெற்றவர் என அறிவித்தல், வீட்டிலிருந்தே கணனி மூலம் பணம் சம்பாதிக்கலாம் போன்ற அறிவித்தல்களை நீங்கள் காணலாம். இவை அனைத்தும் போலியானவை என்பதோடு,  இவற்றை நம்பி எச்சந்தர்ப்பத்திலும் எமது  தனிப்பட்ட தகவல்களை எவரோடும் பரிமாறக் கூடாது.

கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தளம், சமூக வலைத்தளங்களை எவ்வாறு பயன்படுத்து என்பது தெரியாமலே அநேகமான சிறுவர்கள், சிக்கலில் மாட்டி விடுகின்றனர். ஆகையால், இவற்றின் சாதக, பாதக விளைவுகள் பற்றி ஆரம்பத்திலேயே சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவது அவசியமாகும். அது மாத்திரமன்றி, முதலில் சிறுவர்களை வழிநடத்தும் பெற்றோர் கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தளம் பாவனை தொடர்பாக தாங்களும் நன்கு கற்றறிந்துகொள்ள வேண்டும்.

கையடக்கத் தொலைபேசி, கணனி, இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் தொடர்பாக பெற்றோர் நன்கு தெரிந்துகொண்டால்,   தங்களது பிள்ளைகள் அவற்றை பயன்படுத்தும் முறை தொடர்பில் கண்காணிக்க முடியும் என்பதோடு, கண்காணிப்பதும் இலகுவாக இருக்கும். அதேவேளை, பாடசாலை சமூகமும் சிறுவர்களுக்கு இச்சாதனங்களை உரிய முறையில் பயன்படுத்துவது தொடர்பாக கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதோடு மாத்திரமின்றி நின்றுவிடாது,  இவற்றின் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாணவர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

விஞ்ஞானத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்பும் மனிதனின் நன்மைக்காகவே தவிர, தீய வழியில் பயன்படுத்துவதற்கு அல்ல.

ஆர்.சுகந்தினி

 

 


Add new comment

Or log in with...