அலுகோசு தொழிலுக்காக இருவர் தெரிவு | தினகரன்


அலுகோசு தொழிலுக்காக இருவர் தெரிவு

அலுகோசு தொழிலுக்காக இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

இது தொடர்பில் கடந்த மார்ச் 27 ஆம் 28 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வின்போது, 26 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். 

அலுகோசு பதவிக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த 11 ஆம் திகதி  தொழில்முறை விழிப்புணர்வு பயிற்சிப் பட்டறை,சிறைச்சாலைகள் பயிற்சிப் பாடசாலையில் நடத்தப்பட்டது.

இதில் கூடிய புள்ளிகளை பெற்ற இருவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் பணிக்கு அமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுகோசு பதவிக்காக  அமெரிக்க பிரஜை ஒருவர் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட102 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 79 பேர் நேர்முகத் தேர்விற்காக தோற்றிய நிலையில், 26 பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இப்பதவிக்கு இலங்கை பிரஜைகளிடமிருந்து மாத்திரம் விண்ணப்பங்கள் கோரப்பட்ட நிலையில், அமெரிக்க பிரஜையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதோடு, இப்பதவிக்கு ஆண்கள் மாத்திரம் இணைக்கப்படுவதன் காரணமாக பெண்கள் இருவரினது விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற கையெழுத்திட்டுவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுமுன்தினம்  (26)  ஊடகப் பிரதானிகளுடான சந்திப்பில் தெரிவித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலையின் தூக்குமேடையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட 18 பேர்  மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதியாக கடந்த 43 வருடங்களுக்கு முன்னர் திஸ்ஸமஹாராமையை சேர்ந்த ‘ஹொந்த பப்புவா’  என அழைக்கப்பட்ட எச்.கே. சந்திரதாச என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

 


Add new comment

Or log in with...