கவிதைகளின் உலகம் பாப்லோ நெருடா | தினகரன்


கவிதைகளின் உலகம் பாப்லோ நெருடா

மிகப் பெரும் கவிதைப் பரப்பினுள் தனக்கான ஒரு இடத்தினை வகுத்துக் கொண்டு கவிதைகளின் மூலமாக பல் வேறு அரசியல் நிலைப்பாடுகளையும், மக்களின் வாழ்வியலையும் தனது படைப்பின் ஊடாக உலக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மிகப் பெரும் கவிஞனே மகாகவி பாப்லோ நெருடா. 1904ல் சிலியின் (Parral) நகரத்தில் பிறந்து பிறகு தென் பகுதியின் டிமுகோ (Temuco) நகரத்தில் வளர்ந்த பாப்லோ நெருடா தன் வாழ்வியல் நிலையின் உணர்ச்சிகளைக் கொண்டு கவிஞனாக உயிர்ப் பெற்றவர். பல நாடுகளுக்கும் பல் வகையான அரசியல் தலையிடிக்கும் மத்தியில் தன்னுடைய பயணத்தினை நகர்த்திய இப் பெரும் கவிஞன் 1971ம் ஆண்டு நோபல் பரிசின் சொந்தக்காரன் ஆனார்...  

சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக கவிதைக்காகவே வாழ்ந்த பாப்லோ நெருடா 1923ம் ஆண்டு வெளியான Crepusculario கவிதையின் மூலமாகவும் 1924 Twenty Love Poems and a Song of Despair ல் வெளியான கவிதையின் மூலமாகவும் உலக இலக்கிய தளத்தினுள் தனக்கான இருப்பினை தக்க வைத்துக் கொண்டார். சாதாரண பாடு பொருளினை தன்னுடைய இலக்கியமாகக் கொள்ளாமல் காற்று, மழை, காடுகள், மலைகள் என்பதினூடாக அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அவர்களின் இன்னல்களையும், துன்பியல் நிகழ்வுகளையும் தன் கவிதைகளில் வெளிப்படுத்திய பாப்லோ நெருடா மக்கள் மனதினில் சலனமற்ற இடத்தினை பெற்றிருந்த கவிஞன் என்பது குறிப்பிடத்தக்கது...  

நெருடாவின் நினைவலைகள் பற்றிய கட்டுரையானது வி.கே. பாலகிருஷ்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அக்கட்டுரை பின்வருமாறு தன்னுடைய அழகியலை கொண்டிருப்பதினை நாம் அவதானிக்கலாம்... இந்த யுகத்தின் கவிஞனின் முக்கிய பொறுப்பு மக்களுடன் இயல்பான சூழ்நிலையில் இரண்டறக் கலப்பதுதான். அந்த உணர்வு என்னுடைய வாழ்க்கையை பெருக்கியது. சிலியன் சமவெளியில் மோதிச் சிதரும் அலைத் தொடர்களின் போர் முரசை நான் அடையாளம் கண்டு கொண்டேன். மணல் வெளியிடுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் உப்பு நீரில் கரைந்து கொண்டிருக்கும் மாமலையும், சமுத்திர வாழ்க்கையின் பல் வேறு விசித்திரங்களும், பறவைகள், பாதசாரிகள் கூட்டமும் உப்பு நீரின் துவர்ப்பும் என்னைத் திண்மைப்படுத்தியது. ஆனால் இவை எல்லாவற்றையும் விட வாழ்க்கையின் தகிப்பும் துன்பமும் மிக்க அலையேற்றத்திலிருந்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். அத்துடன் என்னை உற்று நோக்கும் நூற்றுக்கணக்கான கண்கள். அந்தக் கண்களில் நான் அன்பின் மென்மையை உணர்கிறேன். ஒரு வேளை எல்லாக் கவிஞர்களாலும் இதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கலாம்.

ஆனால் இந்த அதிஷ்டம் வாய்ந்தவர்கள் யாரோ அவர்கள் இதை இதயத்துக்குள் வைத்து தாலாட்டவே செய்வார்கள்.

அவர்களின் ஒவ்வொரு படைப்பிலும் இதன் பிரதிபலிப்பு இருக்கும்.  

இவ்வாறான உரையாடல் கவிஞர்களின் மத்தியில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியது. ஒரு கவிஞனின் எண்ணம், சிந்தனை, செயற்பாடு என்பன சமூகம் சார்ந்த நீட்சியான ஒழுக்கவியல் அடிப்படையினில் இயங்குகின்ற போதே அது காத்திரமான படைப்பாகவும், மக்களின் பிரச்சினைகளை பேசுகின்ற படைப்பாகவும், வாசகர்களின் மனதினில் நீங்காத இடத்தினை பெறுகின்ற படைப்பாகவும் இருக்கும் என்பதினை தனது கவிதைகளின் மூலமாகவும், அதன் பாடு பொருளின் மூலமாகவும் உலகிற்குச் சொன்னவன் பாப்லோ நெருடா எனும் மகா கவியாவான். இதுவே சிறந்த கவிதைக்கும், கவிஞனுக்குமான அடையாளமாகும்.   


Add new comment

Or log in with...