சுந்தரகாண்டம் காட்சிப் படலம் தரும் சுவை மிகு சிறப்பு சொற்பதங்கள் | தினகரன்


சுந்தரகாண்டம் காட்சிப் படலம் தரும் சுவை மிகு சிறப்பு சொற்பதங்கள்

"தவம் செய்த தவமாம் தையல்"

சோக வனத்தில் இருந்த சீதையை அழைத்து வருமாறு ராமன் விபீடணனிடம் கூறினான். ”வீடண, சென்றுதா நம தேவியைச் சீரொடும்“ என்பது கம்ப ராமாயண தொடர். 

வீடணன் சென்றான் சீதையை வணங்கினான் ”வெற்றி கைகூடிவிட்டது. ராமபிரான் நின்னைக் காண விரும்புகிறார். தேவர்களும் உன்னை வணங்கக் காத்திருக்கின்றனர். நீ கவலை ஒழிக. அலங்காரம் செய்துகொண்டு எழுந்தருள்க“ என்றான். 

அலங்கரித்துக் கொள்ள சீதை விரும்பவில்லை. ”நான் இங்கே இவ்விதம் இருந்த விதத்தைப் பெருமானும் இமையவர்களும் முனிவர்களும் கற்புடைய மகளிரும் காண்பதே பெருமை தருவது. வீரனே, நீ சொல்லியபடி அணி செய்து கொள்வது சிறப்புடையதன்று“ என்றாள். 

உடனே வீடணன் சீதையை நோக்கி, ”இராமபிரானது கட்டளையால் நான் இது கூறினேன்“ என்றான். பிராட்டி சம்மதம் தந்தாள். வேதங்களில் உள்ள சிக்கல் கண்டு நீக்கிடத் திருமால் வேதவியாசராக அவதரித்து வகை செய்தது போன்று சீதையின் கூந்தற் சடையை மெதுவாக முறைப்படி சீவிச் சிடுக்கு அறுத்து வகைப்படுத்தி வாரிவிடும் பணியை அரம்பை செய்தாள். மங்கல நீராட்டி ஒப்பனை செய்யப்பட்ட பிராட்டி ராமன் முன் வந்தாள். 

இராமன் சீதையை நோக்கினான் கடிந்து பேசத் தொடங்கினான். ஏழு செய்யுள்களில் அவனது சீற்றம் காட்டப்படுகிறது. "நீ அறுசுவை உணவு உண்டுவாழ்ந்தாய். நான் ஏற்றுக் கொள்வேன் என நினைந்து வந்தாயோ? உன்னை மீட்பது எனது நோக்கம் இல்லை. மனைவியைக் கவர்ந்து சென்றவனை ராமன் கொல்லவில்லை என்னும் பழி என்னைச் சேராதிருக்கவே அது செய்தேன். உன் நற்குணங்கள் ஒழிந்துவிட்டன. நீ ஒருத்தி தோன்றியதால் பெண்மைக் குணங்கள் கேடு அடைந்துவிட்டன. உயர்குலத்து மகளிர் தம் கணவரைப் பிரிந்த காலத்தில் தம்முடைய புலன்களை அடக்கி வைப்பர் தலை மயிரைச் சீவி முடிக்கமாட்டார் சடைத் தொகுதியுடன் பெருந்தவம் செய்தவராய் இருப்பர் இடையே ஒரு பழி நேர்ந்தால் உயிர் விடுவர். நீ அங்ஙனம் இல்லையே. நீ இறந்து போ" என்றான். 

”நம தேவியைச் சீரொடும் தா" எனச் சற்றுமுன் கூறியவன்தானே இவன். சீதை ஒப்பனை புனைந்து வந்தவுடன் இப்படிப் பேசுகிறானே? ”தேவியை அடைந்த பின்னும் திகைத்தனன் போலும் செய்கை" என்று தானே நினைக்கத் தோன்றுகிறது. 

உலகத்திற்காக அண்ணலும் அவளும் நடத்திய நாடகக் காட்சி எனச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடலாமா? உண்மை வேறாக இருக்குமோ? ஐயம் என்னும் ஆழ நெடுந்திரை ஆறு கடந்திட வழியுண்டா? 

சுந்தரகாண்டம் காட்சிப் படலம். சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற அனுமன் ஊரெங்கும் தேடினான். அசோகவனத்தில் கண்டான்் "இப்பிராட்டி பிறந்ததால் உயர்குலப் பிறப்பு தவம் செய்ததாயிற்று. வெட்கம் என்னும் பண்பானது தவம் செய்து உயர்நிலை அடைந்தது. அருமையே அருமையே யார் இது ஆற்றுவார்! கற்பினைக் காத்தலாகிய தவத்தினைச் செய்து இங்கு இவள் இருக்கும் தன்மையை ராமபிரான் காணத் தவம் செய்யவில்லை“ எனப் பலப்பல எண்ணிப் போற்றினான்.  

சீதையிடம் கணையாழி தந்து அவளிடமிருந்து சூடாமணி பெற்றுத் திரும்பிய அனுமன் சீதையின் பெருமையைச் சாற்றினான். தவம் செய்த தவமாம் தையல், உன் தம்பி இலக்குவன் அமைத்திருந்த அதே பர்ணசாலையில் உள்ளாள் என்றான். 

”தவம் செய்த தவமாம் தையல்“ என்று அனுமன் கூறிய  

வாசகம் ராமபிரான் செவியில் புகுந்து சிந்தையுள் சென்றது  

நின்றது. பிராட்டியின் தவக்கோலத்தைக் காண வேண்டும் எனப் பெருமானும் ஆசைப்பட்டான். என் செப்ப? ராமன் தன் கமலக்கண்களால் காண நோற்றிலன் என்பதே இன்றுவரை நின்றிருக்கும் குறை. 

”சீரொடும் தா“ என ராமன் கூறியது இந்தக் கருத்தில்தான். வீடணன் தான் சீர் என்பதற்குச் சிறப்பு எனப் பொருள் கொண்டுவிட்டான். ”ஜனகன் செல்வியாகிய சீதையை நீராட்டி, மணம்மிக்க வண்ணப்பூச்சுகளாலும் சிறந்த அணிகலன்களாலும் அலங்காரம் செய்வித்து, விரைவில் இங்கே அழைத்து வருவாயாக“ (வான்மீகம் 6:111:7) இது ராமன் கூற்று. 

கம்பரின் ராமன் ”தவம்“ என்னும் பொருளில் ”சீர்“ என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறான். "சீர்" என்பதற்குத் தவம் எனப் பொருள்கொள்ளச் சான்று உண்டா? 

”இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் 

சிறந்தமைந்த சீரார் செறின்“ (குறள்-900) 

மிகவும் சிறப்புடைய தவத்தினை உடையவர் சினம் கொள்வாரானால் எத்தனை படை வலிமை கொண்ட வேந்தராயினும் தப்பிப் பிழைத்தல் இயலாது. இது கருத்து. "சீரார்" என்பதற்குப் பரிமேலழகரும், பாவாணரும் ”தவம் உடையவர்“ என உரை கூறியுள்ளனர். ”சீர்-சிறப்பு தவத்துக்குப் பண்பாகு பெயர்“ என்பார் வை.மு.கோ. 

"தவ வேடத்தோடு" என ராமன் நினைத்துக்கூற "அலங்காரத்தோடு" என வீடணன் கருதும்படியான சொல்லாட்சியைக் கம்பர் அமைத்தது ஏன்? 

ராமனது எண்ணத்துக்கு இசைய வீடணன் சீதையை அழைத்து வந்திருந்தால் அக்கினிப் பிரவேசத்துக்கு இடமில்லை. கற்பின் கனலியைக் கனலில் இறங்குமாறு செய்யக் கம்பருக்குச் சம்மதமில்லை. எனினும், மூல நூலோடு இசைந்தே முடிக்க வேண்டும். தானும் இமையவர் முதலானவரும் தவ வேடத்தைக் காண இயலாத சூழல் நேர்ந்துவிட்டதால் சீதையின் தவத்தினுடைய ஆற்றலை அனைவரும் உணருமாறு செய்ய வேண்டிய கடப்பாடு ராமனுக்கு முன் நிற்கிறது. அக்கினிப் பிரவேசம் சாட்சியாகிறது. -  

 

இரா. மாது


Add new comment

Or log in with...