Friday, March 29, 2024
Home » தைபிறந்தால் வழிபிறக்குமென்பது தமிழர்களின் உறுதியான நம்பிக்கை

தைபிறந்தால் வழிபிறக்குமென்பது தமிழர்களின் உறுதியான நம்பிக்கை

by damith
January 15, 2024 10:08 am 0 comment

உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் தமது வேளாண்மைச் செய்கைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படும் விழா தைப்பொங்கல் ஆகும். விளைநிலத்தில் விதை விதைத்து, பாத்திக்கட்டி, நீர் விட்டு, நெற்பயிரை வளர்த்து பிறகு அறுவடை செய்து, அதன் பின்னே கிடைக்கும் புதிய நெல்லைக் கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, அந்த இனிப்பை அனைவரும் பகிர்ந்து உண்டு மகிழும் விழா தைத்திருநாள் பண்டிகை ஆகும்.

கதிரவனுக்கு நன்றி சொல்லும் மதசார்பற்ற விழாவாக பொங்கல்திருநாள் கருதப்படுகின்றது. நம் முன்னோர் இதனை மிகச்சிறப்பாக மூன்று நாட்களாகப் பிரித்து கொண்டாடி இருக்கிறார்கள்.

முதல் நாள் வேளாண்மைக்குத் தகுந்தாற்போல், வேண்டியபோது வெயிலையும், வேண்டிய போது மழையையும் தந்து உதவிய ஆதவனுக்கு நன்றி சொல்லுதல், இரண்டாம் நாள் வேளாண்மைக்கு உதவிய கால்நடையான நம் வீட்டு விலங்கான மாடுகளுக்கு நன்றி சொல்லுதல், மூன்றாம் நாள் இயற்கையை கண்டுகளித்து மகிழவும், பாரம்பரிய விளையாட்டுகள் என கொண்டாடியும் மகிழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்.

காலங்காலமாக கிராமங்களில் மட்டும் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தமிழர்களின் பண்பாடு விழாவான தைத்திருநாள் நகரங்களில் கூட விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பாடசாலைகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் என எங்கும் பொங்கல்விழா கொண்டாடப்படுகிறது.

பாரம்பரிய இனிப்புப்பொங்கல், கரும்புடன் சேர்த்து, பாரம்பரிய உடை அணிந்து, புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறார்கள்.

சங்க இலக்கியங்களில் தைப்பொங்கல் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ என்று நற்றிணை கூறுகின்றது.

‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ என்று குறுந்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ என்று புறநானூறு சொல்கின்றது.

‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ என்று ஐங்குறுநூறில் எழுதப்பட்டுள்ளது.

‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ என்கிறது கலித்தொகை.

இம்மாதம் (ஜனவரி) முதலாம் திகதியன்று மலர்ந்த 2024 ஆம் வருடம் உலக மக்கள் அனைவராலும் சிறப்பாக வரவேற்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தைத்திங்கள் இன்று உதயமாகியுள்ளது.

தைமாதம் பல்வேறு வகையிலான சிறப்புகளையும், தனித்துவத்தையும் கொண்டது. சூரிய பகவானின் இராசி மண்டல சஞ்சாரத்திற்கு அமையவே ஒவ்வொரு தமிழ் மாதமும் உதயமாகிறது. அந்த வகையில் மகர இராசியில் சூரியன் பிரவேசம் செய்யும்போது தைமாதம் பிறக்கிறது.

தைமாதப் பிறப்பின் சிறப்புக்கு மற்றுமொரு காரணமும் உண்டு. பூவுல மக்களுக்குரிய ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒருநாளாக அமைந்துள்ளது. தைமாதம் முதல் ஆனி மாதம் வரையிலான ஆறுமாத காலம் பகற்பொழுதாகும். இது உத்தராயணம் எனப்படுகிறது.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறுமாத காலம் இரவுப் பொழுதாகும். இது தட்சணாயணம் எனப்படுகிறது. தேவர்களுக்குரிய பகற்பொழுதின் ஆரம்பமே தைமாதப் பிறப்பாகும். எனவேதான் இந்நாள் பூவுல மக்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.

தைத்திங்கள் பிறப்புடன் இணைந்ததாகவே தைப்பொங்கல் திருநாளும் அமைந்திருப்பது மேலும் சிறப்புக்குரியது. இயற்கைத் தெய்வமாகிய சூரியனின் இயக்கம் செம்மையாக அமையப் பெற்றால்தான் உலகில் மனிதகுலம் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளும், தாவரங்களும் உயிர்வாழக் கூடியதாக இருக்கும். அதாவது உலகம் முழுவதும் உயிர்ப்புடனும், சக்தியுடனும் இயங்குவதற்கு அடிப்படைக் காரணமாகவும், ஆதாரமாகவும் திகழ்வது சூரிய சக்தியாகும்.

உழவுத் தொழிலுக்கு துணையாக அமைந்துள்ள நிலம், நீர், ஆகாயம் எனும் இயற்கைச் சக்திகளின் செயற்பாடுகளுக்கு பேருதவியாக இருக்கும் மிகப் பெரும் சக்தியாகவும், கண்கண்ட தெய்வமாகவும் விளங்கும் சூரிய பகவானை போற்றித் துதிக்கும் வகையில் வருடந்தோறும் நடத்தும் ஒரு வழிபாட்டு நிகழ்வாகவே தைப்பொங்கல் அமைந்துள்ளது.

இன்னொரு வகையில் சொல்வதானால் நன்றி மறவாமையின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் பெருவிழாவாகவும் தைப்பொங்கல் சிறப்புப் பெறுகிறது. பயனை அனுபவிக்கும் போது, அந்தப் பயனைப் பெறுவதற்கு உதவிய எவரையும் எதனையும் மறந்து விடலாகாது என்ற உயர்ந்த பண்பையும் தைப்பொங்கல் எடுத்துச் சொல்கிறது.

உழவர் பெருமக்கள், தங்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் விவசாய செயற்பாடுகளின் போது நிலத்தில் விதைத்து அறுவடை செய்த நெல்லிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட புத்தரிசியைப் பயன்படுத்தி சூரிய பகவானுக்குப் பொங்கிப் படைத்து தைமாதப் பிறப்பைக் கொண்டாடுவதே தைப்பொங்கல் வரலாற்றின் ஆரம்பமாக அமைந்திருந்தது. இதன் காரணமாகவே உழவர் திருநாள் என்ற பெயரிலும் தைப்பொங்கல் அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் இது இந்து மக்களது பண்டிகைகளுள் ஒன்றாக மாறியதால், உழவர் பெருமக்கள் மட்டுமல்ல, அனைத்து இந்து மக்களும் தைமாதம் பிறக்கும் நாளில் சூரிய பகவானுக்கு பொங்கிப் படைத்து வழிபாடு செய்வது வழக்கமாகி விட்டது.

இந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முற்றத்திலேயே பொங்கல் பாரம்பரியங்களை செய்வது வழக்கம். பொங்கி முடித்த பின்னர், அதே இடத்திலேயே தலைவாழை இலையில் பொங்கல் படைத்து வழிபாடு செய்யும் நிகழ்வானது தெய்வ வழிபாட்டின் உன்னத செயற்பாடாகவே அமைந்துள்ளது. இந்த வகையில் பொங்கல் சூரிய பகவானுக்குரிய நைவேத்தியப் பொருளாக சிறப்புப் பெறுவதுடன், அவரது அருளால் பெற்றதை அவருக்கே நன்றியுடன் நிவேதனம் செய்யப்படுவதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

பொதுவாக, மக்கள் அனைவரும் புதிய நம்பிக்கைகளையும், புதிய எதிர்பார்ப்புகளையும் வைத்து புதுவருடப் பிறப்பை வரவேற்பதுபோலவே, இந்து மக்களும் தைமாதப் பிறப்புக்காக ஆவலுடன் காத்திருப்பது வழக்கமாகும். ‘தை பிறந்தால் வழி பிறக்கும், தரணி எங்கும் வளம் செழிக்கும்’ என்று பலநூறு வருடங்களுக்கு முன்பதாக நம் முன்னோர் சொல்லி வைத்திருப்பதை இந்து மக்கள் பெரிதும் மதித்துப் போற்றி வருகிறார்கள்.

இந்த வகையில் தங்கள் குடும்பத்தில் இன்பம் பொங்க வேண்டும், செல்வம் செழிப்புற வேண்டும், நோயற்ற வாழ்க்கை அமைய வேண்டும், வாழ்வில் நிம்மதி வேண்டும் என்றெல்லாம் பலவித நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் வைத்து தைத்திங்களை வரவேற்று சூரிய வழிபாடு செய்வது என்பது ஒரு பாரம்பரிய வழக்கமாகவே நடந்தேறி வருகிறது.

திருமணம், புதுமனை பிரவேசம், புதிய கல்வி நிறுவனங்கள், புது விற்பனை நிலையங்கள், பயிர்ச்செய்கை உற்பத்தி போன்ற பல்வேறுபட்ட சுபகருமங்களை தைமாதத்திலேயே மேற்கொள்வார்கள். தை மாதத்தில் ஆரம்பிக்கும் கருமங்கள் பெரும் வெற்றியையும் சிறப்பையும் கொடுக்கும் என்பதில் இந்து மக்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

நம் அத்தனை நெருக்கடிகளும் நீங்கி, எதிர்காலத்தில் அனைவரும் எதுவித நோய் நொடியுமின்றி, மகிழ்ச்சிகரமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு உதயமாகும் தைத்திருநாளிலே இறையருளை வேண்டிப் பிரார்த்திப்போமாக!

எஸ்.சேந்தன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT