Friday, March 29, 2024
Home » சுபிட்சம் நிறைந்த வாழ்வுக்கு தைத்திருநாள் வழிவகுக்கட்டும்!

சுபிட்சம் நிறைந்த வாழ்வுக்கு தைத்திருநாள் வழிவகுக்கட்டும்!

by damith
January 15, 2024 6:00 am 0 comment

உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள் தைப்பொங்கல் திருநாளை இன்று கொண்டாடுகின்றார்கள். உலகநாடுகளை இன்று எடுத்துக் கொண்டால், இந்துக்கள் வாழாத தேசமே இல்லை எனலாம். தமிழ் மக்கள்தான் தற்போது கூடுதலான நாடுகளில் வசித்து வருகின்றனர். அந்நாடுகள் அனைத்திலும் தைப்பொங்கல் பண்டிகை இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தைப்பொங்கல் என்பது இந்துக்களுக்கு மாத்திரம் உரிய பண்டிகையன்று, அது அனைத்து மக்களுக்குமான பொதுப்பண்டிகை என்று கருதுவோரும் உள்ளனர். விவசாயிகள் எங்கெல்லாம் வாழ்கின்றனரோ, அங்கெல்லாம் சூரியபகவானுக்கு நன்றி செலுத்துவதில் தவறில்லை என்பதுதான் பொதுவான கருத்தாகும்.

ஏனெனில் தைப்பொங்கல் என்பது உலகில் உயிரினங்களின் வாழ்வுக்குக் கைகொடுக்கின்ற கதிரவனுக்கு நன்றி செலுத்துவதற்கான தினம் ஆகும். விவசாயிகள் தங்களது உழவுத் தொழிலுக்கு உதவி புரிகின்ற கதிரவனுக்கு வருடத்தில் ஒரு நாளாவது நன்றி செலுத்த வேண்டுமென்ற கருத்தைப் புலப்படுத்துவதாக இப்பண்டிகை அமைகின்றது.

உலகின் பிரதான சக்தி முதல் சூரியன் ஆகும். சூரியன் இன்றேல் உலகில் மாறுபட்ட தட்பவெப்பமும் இல்லை, உயிரினங்களும் இல்லை, உணவு உற்பத்தியும் கிடையாது. அத்தனை உணவுப்பயிர்ச் செய்கைக்கும் கதிரவனே கைகொடுக்கின்றது என்ற உண்மையை எனது ஆன்றோர் அந்நாளிலேயே நன்கறிந்து வைத்துள்ளனர்.

அவ்வாறான கதிரவனை அவர்கள் கடவுளாகப் போற்றி வணங்கினர். அதற்கு நன்றியும் செலுத்திக் கொண்டனர். அப்பாரம்பரியத்தில் உருவானதே சூரியனுக்கு நன்றி செலுத்தும் தைத்திருநாள் ஆகும். கதிரவன் உதயமாகின்ற வேளையில், அதற்குப் பொங்கல் படையலிட்டு நன்றியும் வணக்கமும் செலுத்த வேண்டுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.

இன்றைய நாள் ‘உழவர்களின் பண்டிகை’ என்றும் அழைக்கப்படுவதனால், விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி சிந்திக்க வேண்டியதும் அவசியமாகின்றது.

எமது நாடு விவசாய பொருளாதாரத்தை முழுமையாகக் கொண்டிருந்த நாடாக முன்னொரு காலத்தில் திகழ்ந்தது. கிராமங்களை எடுத்துக் கொண்டால், அதிகளவு பரப்புள்ள காணிகளில் நெற்செய்கை மேற்கொண்டவர்களே அங்கு செல்வந்தர்களாகத் திகழ்ந்தனர். அவர்களே கிராமங்களில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் விளங்கினர்.

அந்நாளில் விவசாயம் என்பது கௌரவத்துக்குரிய தொழிலாக விளங்கியது. கிராமத்தின் முதற்பிரஜையாக அதிக நிலமுள்ள விவசாயியே திகழ்ந்தார். கிழக்கிலுள்ள கிராமங்களில் அவ்வாறானவர்கள் ‘போடியார்’ என்ற பெயரில் இன்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் காலம் செல்லச்செல்ல விவசாயிகள் எமது சமூகத்தில் முக்கியத்துவம் அற்றவர்களாக மாற்றமடைந்தனர். கடந்தகால அரசாங்கங்கள் விவசாயத்துக்கு முக்கியத்துவம் வழங்கத் தவறிவிட்டன. அரசாங்கத் தொழில்தான் முன்னுரிமைத் தொழிலாக மாற்றம் பெற்றது. விவசாயத்தில் ஈடுபடுவதென்பது அகௌரவத்துக்குரியதாக மாறிப் போனது. விவசாயிகள் பலர் தமது விவசாயத் தொழிலைக் கைவிட்டனர். அவர்களது பிள்ளைகள் விவசாயத்தைக் கைவிட்டு வேறு தொழில்களை நாடிச் சென்றனர்.

அதன் பலனையே நாம் இன்று அனுபவிக்கின்றோம். அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமைக்கு உள்ளாகியுள்ளோம். மரக்கறிகளை நாம் நெருங்க முடியாதபடி அவற்றின் விலை அதிகரித்துள்ளது. விவசாயத்தின் முக்கியத்துவம் அருகிச் சென்றதே இதற்கான காரணமாகும்.

விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உழவர் திருநாளை கொண்டாடிய சமூகத்தில், விவசாயம் புறக்கணிக்கப்பட்டது வேதனைக்குரியது. இன்றைய தைப்பொங்கல் நாளில் எமது பாரம்பரிய விவசாயம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.

ஆதவனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை இதுவென்பதால், இன்றைய பொங்கல் தினம் உலகுக்கே முக்கியத்துவம் வாய்ந்தாகும். ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்பது எமது ஆன்றோர் கூறிய வாக்கு ஆகும். தைப்பொங்கல் தினம்தான் தமிழர்களுக்கு புதிய ஆண்டின் முதல் தினமாகின்றது. எனவே புதிய நம்பிக்கைகளுடன் இன்றைய தினத்தை வரவேற்போம்.

இலங்கை மக்களுக்கு கடந்த இரண்டொரு வருடங்கள் சிறப்பான காலப்பகுதியாக அமையவில்லை. கொவிட் பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி, ஆட்சி மாற்றம், அரசியல் நெருக்கடி என்றெல்லாம் கடினமான பாதையை நாம் கடந்து வந்துள்ளோம். தற்போது நெருக்கடிகள் படிப்படியாக எம்மைவிட்டு நீங்கி வருகின்றன.

பொருளாதார நெருக்கடியிலிருந்து முற்றாக மீண்டெழுந்து விடலாமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நம்பிக்கையுடன் இன்றைய தைப்பொங்கல் பண்டிகையும் உதயமாகியுள்ளது.

இன்றைய தைத்திருநாள் பண்டிகையானது இலங்கை மக்கள் அனைவருக்கும் எதிர்கால சுபிட்சத்துக்கான உதயமாக அமையட்டுமென்று வாழ்த்துகின்றோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT