நாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு | தினகரன்


நாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு

நாசர் - பாக்யராஜ் அணிகள் வாக்கு சேகரிப்பு-Bhagyaraj Nasser-Nadigar Sangam-

எதிர்வரும் 23 ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இடம்பெறவுள்ளது.

இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில்தான் இரு அணிகளிலிருந்தும் தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள், தமிழகம் முழுவதும் உள்ள நாடகக் கலைஞர்களைச் சந்தித்துத் தங்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

நடிகர் சங்கத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் நடிகர் உதயா, கணேஷ் மற்றும் நடிகை ஆர்த்தி உள்ளிட்டோர் புதுக்கோட்டையில் உள்ள நாடகக் கலைஞர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

பின்னர் அவர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

இதன்போது, "ஒரு வார காலத்துக்குள்தான் சுவாமி சங்கரதாஸ் அணி உருவாகியுள்ளது. நாடகக் கலைஞர்களுக்கும் திரைக் கலைஞர்களுக்கும் இடையே இந்த அணி ஒரு பாலமாக இருக்கும்.
எங்களுக்குத் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எதுவும் கிடையாது. பாண்டவர் அணியில் தப்பு நடக்கிறது என்று தெரிந்தவுடன் அதிலிருந்து வெளியே வருவதுதான் சரியாக இருக்கும். அப்படித்தான் பலரும் வெளிவந்தார்கள். அந்த அணியின் பொதுச் செயலாளரான விஷால் தன் இமேஜை வளர்த்துக்கொள்வதற்காக மட்டுமே செயல்படுகிறார். விஷாலின் தன்னிச்சையான செயல்பாடுகள் உறுப்பினர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.

பாண்டவர் அணியில் எங்களுக்கு சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் அணிக்குத்தான் வாக்களிப்பார்கள். அவர்களே அதைத் தெரிவித்துள்ளனர். நடிகர் ராதாரவி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது. ஐசரி கணேஷ் சங்கப் பொறுப்பில் இல்லாத சமயத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். ஆனால், பணத்தைக் கொடுத்து நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எங்கள் மீது பாண்டவர் அணி பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அது உண்மை இல்லை. மறைந்த நடிகர் ரித்தீஷின் ஆத்மா எங்கள் அணியை நல்வழியில் இயக்குகிறது.

எந்த நிதியும் திரட்டாமல் ஆறு மாதத்துக்குள் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். மேலும், டாக்டர் எம்.ஜி.ஆர் - செவாலியே சிவாஜி ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்த உள்ளோம். ஒவ்வொரு மாதமும் சங்க மூத்த கலைஞர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். இதுபோன்ற பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம். எங்கள் பின்னால் பல நல்லவர்கள் இருக்கின்றனர்" என்றனர்.


Add new comment

Or log in with...