Friday, March 29, 2024
Home » IMF பாராட்டு: பொருளாதார மறுசீரமைப்பில் இலங்கை குறிப்பிடும்படியான முன்னேற்றம்

IMF பாராட்டு: பொருளாதார மறுசீரமைப்பில் இலங்கை குறிப்பிடும்படியான முன்னேற்றம்

- சவாலுக்கு மத்தியில் முதல் மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவு

by Rizwan Segu Mohideen
January 13, 2024 9:34 am 0 comment

– ஆசியாவிலேயே முதன்முறையாக ஆட்சியைக் கண்டறியும் அறிக்கை (Governance Diagnostic Report
– கடன் வழங்குநர்களிடையே நம்பிக்கை அதிகரிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான முதலாவது மீளாய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட சவாலான பொருளாதார சீர்திருத்தங்களைப் பாராட்டியது.

ஆசியாவின் முன்னோடி முயற்சியான ஆட்சியைக் கண்டறியும் அறிக்கையை (Governance Diagnostic Report) வெளியிடுவதில் இலங்கையின் முயற்சிளை இதன்போது பாராட்டினர்.

குறிப்பாக, கொள்கை சார்ந்த விடயங்கள் மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மை ஆகியவை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்றுமுன்தினம் (11) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலப்பகுதியில் பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின்படி இலங்கை நம்பிக்கையுடன் அரசாங்க வருமானத்தை உயர்த்தியுள்ளதாக சமீபத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளதாகவும், அதன் மூலம் சர்வதேச சமூகம், உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்கள் மற்றும் தனியார் கடன்வழங்குநர்களின் நம்பிக்கை அதிகரிக்க காரணமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பணவீக்கத்தை கணிசமாகக் குறைப்பதில் இலங்கையின் வெற்றியை, பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும், நிதியியல் கொள்கை மற்றும் செலவுகளைக் குறைக்கும் இலங்கை அரசின் கொள்கைகளே அதற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு அதிகரிப்பு போன்ற சாதகமான முடிவுகள் தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ளது.

குறிப்பாக மூலதனம் மற்றும் பொறிமுறை உருவாக்கம் ,மூன்றாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும், தற்போதுள்ள ஆட்சிப் பொறிமுறையின் சீர்திருத்தங்களில் இது சாதகமான குறிகாட்டிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

IMF அதன் வரவிருக்கும் முறையான மறு ஆய்வு மற்றும் கட்டுரை 04 ஆலோசனையைத் திட்டமிட்டுள்ள நிலையில், புதிய அரச நிதி மேலாண்மைச் சட்டம், அரச-தனியார் கூட்டிணைவு தொடர்பான சட்டத்துடன் ஏற்படக்கூடிய முரண்பாடுகள், மின்சாரக் கட்டணங்கள் மற்றும் சொத்து வரிவிதிப்பு ஆகியன இலங்கை கவனம் செலுத்த வேண்டிய முக்கிய பகுதிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், தற்போதைய சீர்திருத்தங்கள், நிதி சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் நிர்வாக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

வங்கிச் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் வங்கித் துறையின் மறுமூலதனமாக்கல் உள்ளிட்ட நிதி விடயங்களில் துரித கவனம் செலுத்த வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

ஆட்சிப் பொறிமுறையில் கவனம் செலுத்துதல், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவை அமுல்படுத்துதல் மற்றும் அது தொடர்பான செயல் திட்டங்களை வெளியிடுதல் மற்றும் அதன் ஆணையாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைப் புரிந்துகொள்வதற்காக அரசியலமைப்பு பேரவையுடனான சந்திப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களில் வெற்றியை அடைவதற்கு அரச ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, திறன் அபிவிருத்தியில் இலங்கையின் பங்காளித்துவமும் சர்வதேச நாணய நிதியத்தால் மதிப்பீடு செய்யப்பட்டது.

சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் முக்கியமான அரச சேவையின் திறனை வளர்ப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கமைய, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் வாரங்களில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்த முக்கிய பகுதிகள் குறித்து ஆழமாக கண்டறியும் எதிர்பார்ப்பில், இலங்கை அதிகாரிகளுடன் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளனர். மேலும் இது தொடர்பான விரிவான பகுப்பாய்வு மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார சீர்திருத்த செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, உள்ளிட்ட அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT