கபீர், ஹகீம், ரிஷாட் முன்வரிசையில் | தினகரன்


கபீர், ஹகீம், ரிஷாட் முன்வரிசையில்

கபீர், ஹகீம், ரிஷாட் முன்வரிசையில்-Kabir Hakeem Rishad Front Seats

சிரேஷ்டத்துவம் அடிப்படையில் ஏனைய முஸ்லிம் எம்.பிக்கள் பின்வரிசைகளில்

அமைச்சு பதவிகளிலிருந்து இராஜினாமா செய்த முஸ்லிம் அமைச்சர்களுக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெனாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர்களான கபீர் ஹஷிம், ரஊப் ஹகீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் பிரதிநிதிகள், தமது அமைச்சு பதவிகளிலிருந்து விலகியமை தொடர்பான கடிதங்கள் சபாநாயகருக்கு கிடைத்துள்ளதை அடுத்து நாளைய (18) பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்றைய தினம் குறித்த பிரதிநிதிகளுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்சியின் தலைமை பொறுப்புகளில் வகிக்கின்றமை காரணத்தினால் ஐ.தே.க.வின் தவிசாளர் கபீர் ஹஷிம், ஶ்ரீ.ல.மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கான முன்வரிசை ஆசனங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு பின்வரிசைகளில் ஆசனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் அப்போதைய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை பதவி விலகுமாறு தெரிவித்து அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் மற்றும் பொது பல சேனா அமைப்பினர் கண்டியிலிருந்து மேற்கொண்ட பேரணி ஆகியன காரணமாக, நாட்டில் ஏற்பட்ட சிக்கலான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுகம் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமாக செய்வதாக அறிவித்தனர்.

கடந்த ஜூன் 03 ஆம் திகதி, அவர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்வதாக அலரி மாளிகையில் வைத்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...