Friday, March 29, 2024
Home » தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளை
ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான

தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் கொள்ளை

- கொழும்பு செட்டியார் தெருவில் அதிகாலை சம்பவம்

by gayan
January 13, 2024 12:08 pm 0 comment

சீ.ஐ.டி எனக் கூறி முச்சக்கரவண்டியில் கடை ஊழியரை கடத்திய கொள்ளையர்கள்

கொழும்பு செட்டியார் தெருவில் சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு கரண்சிகள் அடங்கிய பொதியை எடுத்துச் சென்ற நபரொருவரை முச்சக்கரவண்டியில் வந்த சிலர் கடத்திச் சென்று அந்த நபரிடமிருந்த பொதியை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று புறக்கோட்டை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் வைத்திருந்த பொதியில் 21 மற்றும் 22 கரட் 432 கிராம் தங்கம், 24 கரட் 92 கிராம் தங்கம் மற்றும் 19 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு செட்டியார் தெருவிலுள்ள நகைக் கடையொன்றின் உரிமையாளரான இவ் வர்த்தகருக்கு காத்தானகுடியிலும் மட்டக்களப்பிலும் இரண்டு நகைக் கடைகள் உள்ளதாகவும், அந்தக் கடைகளிலிருந்து உருகிய தங்க கட்டிகளை வாரத்தில் இரண்டு நாட்கள் காத்தான்குடியிலிருந்து கொழும்பு செட்டித் தெருவிலுள்ள நகைக் கடைக்கு வாரத்தில் இரண்டு முறை கொண்டு வருவதுண்டு. அவருக்கு நன்கு பரீட்சையமான பஸ் சாரதிகள் மூலம் இவற்றை அனுப்பி வைப்பதாகவும் பொலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் (11) அதிகாலை கொழும்பு வந்த தனியார் பஸ்சிலும் இவ்வாறு தங்கம் மற்றும் வெளிநாட்டு கரண்சிகள் அடங்கிய பொதி ஒன்று கொடுத்து அனுப்பப்பட்டுள்ளதுடன் பஸ் கொழும்பை வந்தடைந்த பின்னர் பஸ் சாரதி கடை ஊழியர் ஒருவருக்கு அதிகாலை 05 மணியளவில் தொலைபேசி மூலம் பொதியை பெற்றுக்கொள்ள வருமாறு தகவல் வழங்கியுள்ளார்.

பஸ் சாரதியிடமிருந்து அழைப்பு வந்தவுடன் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரண்சி அடங்கிய பொதியை பெற்றுக் கொள்வதற்காக நகைக்கடையிலுள்ள ஒரு ஊழியர் மற்றொரு ஊழியரை எழுப்பி புறக்கோட்டையில் ஐந்து லாம்புச் சந்திக்கு அனுப்பிவிட்டு அவர் பொதியுடன் வரும்வரை நகைக் கடையின் முன்பக்கமாக அமர்ந்து தான் அனுப்பிய ஊழியருக்காக கடையின் முன் படிக்கட்டில் அமர்ந்திருந்துள்ளார். பஸ்சிலிருந்து பொதியை வாங்கிய ஊழியர் அதனை தனது இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டு செட்டியார் தெருவில் நகைக்கடை அருகே வந்தவுடன் அவரை பின் தொடர்ந்து வந்த முச்சக்கரவண்டியிலிருந்து திடீரென இறங்கிய நபர் ஒருவர் நகைக்கடை ஊழியரின் கழுத்தை இறுகப்பிடித்து அழுத்தியபடி நாங்கள் சீ.ஐ.டி எனக் கூறி பலாத்காரமாக முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

அப்போது, ​​கடைக்கு முன்னால் அமர்ந்திருந்த மற்றைய ஊழியர் தடுக்க முற்பட்டபோது, ​​முச்சக்கரவண்டியிலிருந்த நபர் கூரிய கத்தியைக் காட்டி அச்சுறுத்திவிட்டு ஊழியரைக் கடத்திக் கொண்டு மிக வேகமாக செட்டித் தெரு ஊடாக கொச்சிக்கடை பிரதேசத்தை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊழியர் கடத்தப்பட்ட போது, ​​அவரது இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வெளிநாட்டு கரண்சிகள் அடங்கிய பொதியை கொள்ளையடித்த பின்னர் ஊழியரை கொச்சிக்கடை தேவாலயத்துக்கு முன்பாக இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலித் சிலோகமவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச்.கே அனுரஜித் உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT