‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’ | தினகரன்

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’

‘ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்’-Release-Ananda-Sudhakaran-Rishad-Letter to President
  • ஜனாதிபதியிடம், அமைச்சர் ரிஷாட் உருக்கமான வேண்டுகோள்!
  • நாடு முழுவதும் பொது மன்னிப்பு கோரி கையெழுத்து வேட்டை

தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியவுடன், அவரை சந்தித்து இதுதொடர்பில் அமைச்சர் பேசவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,

கடந்த யுத்த காலத்தின் போது, அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள் மாத்திரமின்றி, அப்பாவித் தமிழர்களும் சிற்சில காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திட்டமிட்டு தவறு செய்தவர்களும், எதுவுமே அறியாமல் தப்பு செய்தவர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகின்றனர்.

யுத்த முடிவுக்குப் பின்னரான சமாதானம் ஏற்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் அநேகருக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்கி, புனர்வாழ்வளித்து விடுதலை செய்தது. அவர்கள் தற்போது தமது இயல்பு வாழ்க்கையை ஆரம்பித்து, சமூகத்தின் பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனும், ஏதோ காரணங்களுக்காக கடந்த பத்து வருடங்களாக சிறையில் வாடுகின்றார். அவரது மனைவியும் தற்போது இறந்துவிட்ட நிலையில், எதுவும் அறியாத 09 வயதுடைய ஆண் பிள்ளையும், 11 வயதான பெண் பிள்ளையும் தாயும், தந்தையுமின்றி அனாதைகளாக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர்.

எனவே, இந்தக் குழந்தைகளின் துயர் கருதி, அவர்களது தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று அமைச்சர் ரிஷாட், ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.


ஆனந்தசுதாகரனுக்கு பொது மன்னிப்பு கோரி கையெழுத்து வேட்டை

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனுக்கு பொதுமன்னிப்பு கோரி களுவாஞ்சிகுடியில் கையெழுத்து பெறும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

நாடுபூராகவும் இடம்பெற்று வரும் குறித்த நடவடிக்கையைத் தொடர்ந்து இன்று (25) களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற கையெழுத்துச் சமரில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளிட்ட பலரும் ஆர்வதுடன் கலந்து கொண்டு கையெழுத்துகளை இட்டனர்.

சுதாகரனின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்கி பரவலாக  பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியிலும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு மக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய கடித்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக இதன் ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.

(பெரியபோரதீவு தினகரன் நிருபர் - வ. சக்திவேல்)

 


There is 1 Comment

Add new comment

Or log in with...