மாற்றங்களைக் கொண்டு வரவே பெருமளவு முஸ்லிம்கள் விருப்பம் | தினகரன்

மாற்றங்களைக் கொண்டு வரவே பெருமளவு முஸ்லிம்கள் விருப்பம்

விவாகச் சட்டம், ஆடை விவகாரம்

"விவாகச் சட்டம், ஆடை போன்றன தொடர்பில் தற்போது பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் அவற்றை மாற்றுவதற்கு விருப்பத்துடன் இருக்கின்றார்கள்" என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். 

'வஹாபிசம்' தொடர்பிலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. தேசியத் தன்மைக்குப் பதிலாக அரேபிய தன்மையினைக் கொண்டு வருவதற்கு அநேகமானோர் எதிராக உள்ளனர். அரபி எழுத்துப் பாவனையை மாற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்" என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.  

கேள்வி: அண்மையில் நாட்டில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினுள் பல தடவைகள் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எனினும் இவற்றில் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றல் போதியளவில் இல்லை என மக்கள் கூறுகின்றனரே...  

பதில்: -இந்த விவாதங்களின் போது பங்குபற்றல் தொடர்பில் பிரச்சினை இருந்ததை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அந்த விவாதங்களின் போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான முன்மொழிவுகளை சபையில் முன்வைக்குமாறு நான் கூறினேன். எனினும் அங்கு இடம்பெற்றது ஒருவருக்கொருவர் சேற்றை வீசிக் கொண்டதாகும். அங்கு தேவையான விடயங்களை விட வேறு விடயங்கள் பேசப்பட்டமை தெரிந்ததுதான். எனினும் மொத்தத்தில் பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் குறைபாடுகள் உள்ளதாக நான் நினைக்கவில்லை.  

கேள்வி: -அந்த நடவடிக்கைகள் என்ன?  

பதில்: -பாராளுமன்றம் மிகவும் அமைதியாக முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. விஷேடமாக இது தொடர்பில் நியமிக்கப்பட்ட துறைசார்ந்த கண்காணிப்பு குழுவினால் பல்வேறு சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தமது சமயத்தை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றம் மிகவும் செயல்ரீதியாகச் செயற்படுகின்றது. சமயங்கள் இருப்பது மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கேயன்றி பிரித்து அழிப்பதற்கல்ல. எனவே நாம் இந்த தீவிரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும். இந்தச் சட்டங்களை உருவாக்கியதன் பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரமும் பாராளுமன்றத்திலேயே கிடைக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கட்சிகளது மக்கள் பிரதிநிதிகளும் தற்போது தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார்கள். எனவே வரும் காலத்தில் அது துரிதமாக செயற்படுத்தப்படும்.  

கேள்வி: -புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் பற்றி கூற முடியுமா?  

பதில்: -விஷேடமாக இன்று கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கும் விடயம் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமாகும். 12, -13வயதில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து வைப்பது நாட்டுச் சட்டத்திற்கு முரணானது. இது உலகமே ஏற்றுக் கொண்ட சிறுவர் உரிமைகளை மீறும் செயலாகும்.

இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இன்று முன்னேற்றமடையாத கோத்திர சமூகங்களிலும் கூட நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தடுப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.அதே போன்று மதரசா பாடசாலைகளை அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல், ஆள் அடையாளத்தை மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை நீக்குவது போன்று பொது சமூகத்தின் நலனுக்குரிய விடயங்கள் தொடர்பில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.  

கேள்வி: -இந்தச் சட்ட உருவாக்கத்தின் போது முஸ்லிம் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறிருந்தது?  

பதில்: -அவர்களுள் அநேமானோர் இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். இதனை எதிர்ப்பதாயின் அந்த தீவிரவாத கருத்துக்களையுடைய மிகச் சிறிய தரப்பினரே எதிர்பார்ப்பார்கள் என நான் நினைக்கின்றேன். அநேகமானோர் இந்தப் பிரச்சினையினால் விரக்கியுற்றிருந்தார்கள். இந்தப் பிரச்சினையினால் அவர்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அதே போன்று இதில் நான் கண்ட ஒரு விடயம் என்னவெனில் அவர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அடிபடிந்து செயற்படுவதற்கு காட்டும் ஆர்வமாகும். அதனடிப்படையிலேயே நாம் இப்போது இந்த சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றோம். இந்தச் சட்டங்களை நாம் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரவில்லை. சாதாரண சட்டத்தின் கீழேயே கொண்டு வருகின்றோம். இதனடிப்படையில் திருமணச் சட்டம், ஆடை போன்றன தொடர்பில் தற்போது பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் அவற்றை மாற்றுவதற்கு விருப்பத்துடன் இருக்கின்றார்கள்.அதே போன்று வஹாபிசம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. தேசிய தன்மைக்கு பதிலாக அரேபிய தன்மையினைக் கொண்டு வருவதற்கு அநேகமானோர் எதிராக உள்ளனர். அரபி எழுத்துப் பாவனையை மாற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். நாம் இந்தக் குழுவின் மூலம் துரிதமாகவே இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கே முயற்சிக்கின்றோம். இந்த நாட்டை எதிர்காலத்திற்காக மீதப்படுத்துவதே எம்மனைவரதும் விருப்பமாகும். இந்த நாட்டை தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் கீழ்பட்ட நாடாகப் பார்ப்பதற்கு எம்மில் எவருக்கும் விருப்பமில்லை.  

கேள்வி: -எனினும் மக்களுக்கு இந்த தெரிவுக் குழுக்களால் பயன் உள்ளது என்ற நம்பிக்கை இருக்கின்றதா?  

பதில்: -சமய மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான நிலையான தெரிவுக் குழு என்றொரு தெரிவுக் குழு பாராளுமன்றத்தில் உள்ளது. உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த வருடம் திகனையில் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னர் சமய மற்றம் சமூகத் தலைவர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. அங்கு தெளிவாகக் காணப்பட்ட விடயம் என்னவென்றால் இவை அனைத்தும் போதிய புரிந்துணர்வு இல்லாமையினால் இடம்பெற்றவை என்ற விடயமாகும்.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது 15, -18வயதுகளையுடைய தரப்பினராவர். அவர்கள் குறைந்தது யுத்தத்தின் கொடிய அனுபவங்களைக் கூட அனுபவிக்காதவர்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தீவிரவாதத்தின் பின்னால் சென்றவர்கள். நாம் இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கு சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை இந்த தெரிவுக் குழுவின் மூலம் மேற்கொண்டோம்.

அதே போன்று கடந்த ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னர் கூடிய இந்தத் தெரிவுக் குழு பத்து பிரதான முன்மொழிவுகள் மற்றும் அதற்குத் துணையான 24விடயங்களை 'தியவன்னா அறிக்கை' என வெளியிட்டோம்.

துரதிர்ஷ்டவசமாக இதற்கு ஊடகங்களின் கவனம் அதிகம் கிடைக்கவில்லை. எனினும் நாட்டின் நிலையான அமைதிக்கு வெற்றிகரமான பிரவேசமாக அது அமையும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

அதே போன்று இந்த துறைசார்ந்த தெரிவுக் குழுவிலிருந்து வரும்காலங்களில் வரும் புதிய சட்டங்களை நாம் கூடிய சீக்கிரத்தில் நடைமுறைப்படுத்துவற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.  

கேள்வி: -இந்தச் சந்தர்ப்பத்தில் தற்போது இடம்பெறும் விசாரணை நடவடிக்கைகளின் போது தீவிரவாதத் தொடர்புகள் இல்லாத சாதாரண முஸ்லிம் மக்களும் எதிர்பாராத அனுபவங்களுக்கு முகங்கொடுப்பதை நாம் காண்கின்றோம். ஒருபுறத்தில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள், மறுபுறத்தில் ஊடகங்ளும் சமூக வலைத்தளங்களும். இது தொடர்பில் உங்களது கருத்து என்ன?  

பதில்: -ஆம். உண்மையிலேயே இது கவலைக்குரிய விடயமாகும். சிறிய ஒரு தீவிரவாதத் தரப்பினரால் இன்று மொத்த முஸ்லிம் மக்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது. சில விடயங்கள் புரிந்துணர்வு இன்மையால் இடம்பெறுகின்றன. அண்மையில் மஹியங்கனை பிரதேசத்தில் பெண் ஒருவரின் ஆடையில் கப்பல் சுக்கானின் படம் இருந்தது.அதனை தர்மசக்கரமாக தவறாகப் புரிந்து கொண்டு,அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை நான் கண்டேன். அப்பெண்ணுக்கு இரண்டாவது தடவையாகவும் பிணை வழங்கப்படவில்லை. அதே போன்று சிலர் உறுதியான குற்றவாளிகளாவதற்கு முன்னர், குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட முன்னர் ஊடகங்கள் மூலம் தேவையற்ற பிரசாரங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதற்கு முன்னரும் வெளிநாட்டு பௌத்த பெண் ஒருவர் தனது பக்தி மேலீட்டினால் புத்த பெருமானின் படத்தை கையில் பச்சை குத்தியிருந்தார் என அவளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு நஷ்டஈடு செலுத்தவும் நேர்ந்தது. நானும் அப்பெண்ணின் முகரியைத் தேடிக் கொள்வதற்க முயன்றேன். குறைந்தது அவரது வீட்டுக்குச் சென்றாவது மன்னிப்புக் கேட்க வேண்டும் என நினைத்தேன். நாம் இவ்வாறான நிலைகள் தொடர்பில் இந்த வாரம் பேசினோம். பதில் பொலிஸ் மா அதிபருக்கும் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். நாம் இவ்வாறான நிலைகளைக் குறைத்துக் கொள்வதற்கு கூடியளவில் நடவடிக்கை மேற்கொள்வோம்.  

கேள்வி: -ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பாவனைகள் தொடர்பில் உங்கள் கருத்து...  

பதில்: -சமூக வலைத்தளங்கள் மூலம் எம்மால் எந்தளவு மக்களை ஒன்றுதிரட்ட முடியும்? அமைதி, நல்லிணக்க வளர்ச்சியை செய்ய முடியும்? அதனை குரோதத்தைப் பரப்புவதற்கும், நாட்டில் தீயை மூட்டுவதற்கும் பயன்படுத்தினால் அதற்கு எதிராக போராட வேண்டும். ஊடகவியலாளர்களுக்கும், ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோருக்கும் பொறுப்புக்களும், மனச்சாட்சியும் இருக்க வேண்டும்.  

கேள்வி: -இலங்கையின் சபாநாயகரைப் பற்றி எமது நாட்டினைப் போன்று உலகிலும் அதிகமாகப் பேசப்பட்டது கடந்த ஒக்டோபர் 26ம் திகதியின் பின்னரான 52நாட்கள் காலத்திலாகும். அந்தக் காலத்தை எவ்வாறு கழித்தீர்கள் என எமக்குக் கூற முடியுமா?  

பதில்: -அதன் போது என்னால் மிகச் சிறியதொரு விடயத்தையே செய்ய வேண்டியிருந்தது. அது பெரும்பான்மையினரின் எண்ணத்திற்கு செவிசாய்த்தலாகும். அதனடிப்படையில் நான் தேவையானவற்றைச் செய்தேன். எனது எண்ணத்திற்கு இணங்கி, மனச்சாட்சிக்கு இணங்கி செய்ய வேண்டியதை நான் செய்தேன். பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே எனது தேவையாக இருந்தது. அதன் போது நான் தீர்மானிக்க வேண்டியிருந்தது எண்பது பேர் இருந்த தரப்பினருக்கு பாராளுமன்ற அதிகாரத்தை வழங்குவதா அல்லது பெரும்பான்மை இருக்கும் கட்சிக்கு பாராளுமன்ற அதிகாரத்தை வழங்குவதா என்ற விடயத்தையேயாகும். பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு அமைய பெரும்பான்மை உள்ள தரப்பினருக்கே அதனை வழங்க வேண்டும். நான் அந்த நிலைப்பாட்டில் இருந்து கொண்டு அந்தச் செயற்பாட்டில் ஆரம்பத்திலிருந்தே செயற்பட்டேன். அவ்வாறு நடந்திருக்காவிட்டால் ஜனநாயகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டிருக்கும். நான் அந்நேரம் அந்தச் செயற்பாட்டை எடுப்பேன் என ஜனாதிபதிக்கும் கூட தெரிவித்திருந்தேன். பாராளுமன்றத்தில் பெருன்பான்மையை உறுதியான தினத்தினுள் காட்டுமாறு நான் அவருக்கும் அறிவித்தேன். அந்நேரத்தில் நியமிக்கப்பட்டிருந்த பிரதமருக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பாராளுமன்ற செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தாலும் எனது நிலைப்பாடாக இருந்தது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை காட்டும் வரை அதனை வழங்க முடியாது என்பதாகும். அதுவரை நான் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்தேன். அது பின்னர் நீதிமன்றத்திலும் உறுதியானது. அந்நேரத்தில் எப்படியாவது ஜனநாயகத்திற்காக நான் முன்நிற்கின்றேன் என்ற பலம் எனக்கிருந்தது.  

கேள்வி: -எனினும் நீங்கள் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே அவ்வாறு செயற்பட்டீர்கள். பெரும் விமர்சனங்கள் அந்நேரத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் சுமத்தப்பட்டதே...  

பதில்: -ஆம். விமர்சனங்கள் மாத்திரமல்ல,என்னைக் கொலை செய்ய, என் மீது அசிட் வீசவும் கூட திட்டங்கள் இருந்ததாக அறியக் கிடைத்தது. என்னைக் கொலை செய்தால் 25மில்லியன் ரூபா தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அறிந்து கொண்டேன். நான் இதனை இதுவரையில் யாரிடமும் கூறவில்லை.

எனக்கு மிகவும் நம்பிக்கையான தரப்பிலிருந்தே இந்த தகவல்கள் எனக்குக் கிடைத்தன. எனினும் அவை உண்மையா, இல்லையா என்பதை அந்நேரம் நான் ஆராயச் செல்லவில்லை. பொலிஸாரிடம் சொல்லவுமில்லை. நான் அவைகளுக்குப் பயப்படவுமில்லை. அதே போன்று நாடு முழுவதிலும் எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட போது எனக்கிருந்த தோஷங்கள் கழிக்கப்பட்டதாகவே நான் நினைத்தேன்.  

கேள்வி: -ஒரு நாள் உங்களுக்கு பெரும் அழுத்தம் வந்தது. சபாநாயகர் கதிரையில் அமர முடியாதளவு நிலைமை மோசமடைந்தது. அந்நேரத்தில் என்ன நினைத்தீர்கள்?  

பதில்: -நான் சில காலம் இராணுவத்தில் பணியாற்றியிருக்கின்றேன். அந்தக் காலத்தில் நான் துப்பாக்கியைப் பாவித்திருக்கின்றேன். சாதாரண வாழ்வில் நான் சில் துணியைப் பாவித்த ஒருவன். எதற்கு பயப்பட வேண்டும் என நினைத்தேன்.

அந்நாட்களில் எல்லா நேரமும் எனது உடம்பில் இருந்தது, இது ஜனநாயக விரோதமானது, இதற்கு இடமளிக்கக் கூடாது என்ற எண்ணமாகும். எனது உடம்பும் எல்லா நேரத்திலும் செயற்பட்டது. இந்தச் சிக்கலை தீர்த்துக் கொள்ள முடியாது போனால் அது முழு உலகத்திற்கும் ஜனநாயகத்திற்குச் செய்யும் கரும்புள்ளியாகும். இதனால்தானோ என்னவோ அச்சந்தர்ப்பத்தில் எனக்கு எந்தப் பயமும் தோன்றவில்லை.  

கேள்வி: -அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அபேட்சகராக உங்களது பெயரும் உள்ளதே...  

பதில்:- எனக்கு அன்றிலிருந்து இன்று வரைக்கும் கிடைத்த அனைத்துமே நான் கேட்டுப் பெற்றவை அல்ல. நான் ஒரு போதும் பதவிகளுக்குப் பின்னால் சென்றவன் இல்லை. நான் சின்ன வயதாக இருக்கும் போது எனது தந்தையுடன் சென்று அடிக்கடி சந்தித்த ஒருவர்தான் டீ.எஸ். சேனநாயக்க அவர்கள்.

அவரும் என்னைப் பழக்கியது பதவிகளுக்காக போராடுவதற்கு அல்ல. எனது கட்சி ஏகமானதாகத் தீர்மானிக்குமாயின், மக்கள் என்னைக் கேட்பார்களாயின் அந்தச் சவாலுக்கு முகங்கொடுக்க நான் தயார்.  

சாமிந்த வாரியகொட
தமிழில்: -எம்.எஸ்.முஸப்பிர் 
(புத்தளம் விஷேட நிருபர்)  


Add new comment

Or log in with...