உளப்பாதிப்பு இப்போதைக்கு நீங்கி விடப் போவதில்லை | தினகரன்


உளப்பாதிப்பு இப்போதைக்கு நீங்கி விடப் போவதில்லை

 

குண்டுவெடிப்பு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடத்தைகளை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும். அவர்களிடம் மாற்றம் தென்பட்டால் விசேட வைத்திய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்

தற்போது பிள்ளைகளின் விளையாட்டு ஏனைய நாட்களை விட வித்தியாசமாகவுள்ளது.மரணமடைந்து விழுவது போல் பாசாங்கு செய்து அவர்கள் விளையாடுகின்றார்கள்.

பாடசாலைக்கு செல்வது பற்றி சிறிது பயத்துடன் காணப்படுகின்றார்கள்.

“அப்பா என்ன நடக்கும்? குண்டை கட்டிக் கொண்டு திடீரென வருவார்களா?" என்று பயம் கலந்த தொனியில் அவர்கள் கேட்கிறார்கள்.

மேலே கூறப்பட்டவை ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறு தினத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை ஆகும்.தங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கை பற்றி மேல் மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்த பெற்றோர் இன்றைய அச்சத்தை இவ்வாறு விபரிக்கிறார்கள்.

“ஐ.எஸ் என்றால் என்ன ரீச்சர்? அவர்கள் ஏன் தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றார்கள்” என தன்னிடம் வினவுவதாக ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஒருவர் குறிப்பிட்டார். அதேவேளை, கலவன் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் பிள்ளைகளை ஒதுக்கி வைப்பது (Discrimination), சந்தேகத்துடன் நோக்குவது போன்ற விடயங்களும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன.

எண்பதுகள் மற்றும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பிறந்த இலங்கை சிறுவர் பரம்பரையினர் முப்பது வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தில் கோரத்தை தம் கண்களால் கண்டவர்களாவர்.

அவர்களில் அநேகமானோர் மனதால் காயப்பட்டவர்கள். வடக்கிலும் தெற்கிலும் இளைஞர் சமுதாயத்தினர் ஒருவருக்கொருவர் பயத்துடனும் சந்தேகத்துடனுமே வாழ்ந்தார்கள்.

2004 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினர் எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பினை யுத்த ரீதியாக தோல்வியடையச் செய்தாலும் அதனால் ஏற்பட்ட மனப்பாதிப்பு முற்றாக களையப்பட்டுள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு உட்படாவிட்டாலும் அவர்கள் தொலைக்காட்சிகளில் இறந்த உடல்களைக் கண்டார்கள். தாக்குதல் நடத்தியவர்களை சீ.சீ.ரி.வி மூலம் கண்டார்கள். தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னரான பதிவுசெய்யப்பட்ட காட்சிகள், அது மாத்திரமல்ல ஆயுதங்கள் மற்றும் அந்த சமூகம் பற்றிய கோபாவேசமான விமர்சனங்கள் என்பவற்றையே கண்டார்கள்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் காரணமாக 40 இற்கும் அதிகமான பிள்ளைகள் மரணமடைந்ததாக யுனிசெப் நிறுவனம் கூறுகின்றது. தாக்குதலுக்குள்ளான சிறுவர்களின் உடல் நிலை தேறியிருந்தாலும் அவர்களின் மனப் பாதிப்பு நீங்க நீண்ட காலம் எடுக்கும். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை இழந்தவர்களும் மனதால் பாதிக்கப்பட்டவர்களே.

அதேபோல் மரணமடைந்த தாக்குதல்தாரிகள், அதனுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களின் பிள்ளைகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் பாதுகாப்புப் பிரிவினரின் சுற்றிவளைப்பின் போது சிலர் குண்டை வெடிக்கச் செய்து தமது பிள்ளைகளுடனேயே மரணமடைந்தார்கள். அதில் உயிர் பிழைத்த சிறுமி மற்றும் தேவாலயங்கள், உல்லாசப் பயண ஹோட்டல்களில் நடந்த தாக்குதல்களை தம் கண்களால் கண்ட சிறுவர்களின் நிலைமை என்ன? இவர்கள் அனைவரும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் நேரடியாக பாதிப்படைந்தவர்கள்.

சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான உளவியல் நிபுணர் டொக்டர் அபேக்ஷா ஹேவாஹீகன அவ்வாறான நிலைமைகளுக்கு முகங்கொடுத்த சிறுவர்களிடையே காணப்படும் அறிகுறிகள் பற்றி பின்வருமாறு விளக்கமளித்தார்.

* நித்திரை மற்றும் சாப்பாட்டின் மீதான தாக்கம் (நித்திரையில் பயப்படுதல்)

* விளையாடும் விதத்தில் மாற்றம்

* பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க விரும்பாமை

* தனிமையில் இருக்க விரும்புதல்

* எரிச்சல்படல்

பிள்ளைகளிடம் இவ்வாறான அறிகுறிகளைக் கண்டால் பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

விசேட வைத்தியரின்

ஆலோசனைகள் வருமாறு:

* இரண்டு வயதோ அதைவிட குறைவான வயதோ உடைய பிள்ளைகள் தற்போதைய நிலைமை தொடர்பாக அறிய மாட்டார்கள். ஆனாலும் பெற்றோர்கள் பதற்றம், அமைதியின்மை, பயம் என்பவற்றிற்கு உட்பட்டிருந்தால் அவர்களும் அதனை உணர்வார்கள். தாயார் அமைதியின்றி இருந்தால் குழந்தையும் அமைதியின்றி இருக்கும். ஆகவே குழந்தையின் அருகில் அமைதியை பேண வேண்டும்.

* முன்பள்ளி மாணவர்கள் தமது சூழலில் நடப்பவற்றை அறிய ஆவலாக இருப்பார்கள். ஆகவே ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அவர்கள் பார்ப்பதை தவிர்க்கலாம்.

* நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக பிள்ளைகளின் முன்னால் கருத்து தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது. அதேபோல் அது தொடர்பாக அவர்கள் பேச விரும்பினால் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.

* ஏற்கனவே குழந்தை அது தொடர்பான காட்சிகளைக் கண்டிருந்தால் அது தொடர்பாக கேள்வி கேட்டால் வயதுக்கு ஏற்றவாறு சரியான பதிலை வழங்குங்கள். விரிவான பதிலாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

* அத்துடன் தாய், தந்தை, பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கும் உணர்வை பிள்ளைகளிடத்தே ஏற்படுத்துங்கள்.

* ஆரம்பப் பாடசாலை வயதிலுள்ள மாணவர்கள் அவர்களுடன் கருத்து பரிமாறிக் கொள்ளல், அதற்காக அவர்களை தூண்டுதல், தற்போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக எவ்வளவு அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். இவர்களும் செய்திகளை பார்ப்பது நல்லதல்ல.

* நட்புடன் பழகுவதும் செவிமடுப்பதும் அத்தியாவசியமாகும்.

* இளைஞர்கள் சம்பவங்களை அறிந்திருந்தாலும் பிழையான தகவல்களை அவர்கள் அறிந்திருக்கலாம். சமூக வலைத்தளங்களின் பாவனையில் பரஸ்பர விரோதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம்.

* அதிர்ச்சியடையக் கூடிய செய்திகள், அதிக சோகமான செய்திகளை அறியும் வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் சரியான முறையில் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும்.

* ஊடகங்களில் காட்டப்படும் காட்சிகளுக்கு அப்பால் சென்று சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக அவர்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்துவது பெற்றோர்களின் முக்கிய பொறுப்பாகும்.

இதேவேளை முன்பள்ளி பாடசாலை வயதில் உள்ளவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைத்து வயது பிள்ளைகளைக் கருத்தில் எடுத்துக் கொண்டால் இலங்கையர்கள் மூன்று பிரதான விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான உளவியல் விசேட வைத்திய நிபுணர் அபேக்ஷா ஹேவாக்கன சுட்டிக்காட்டியுள்ளார்.

1. வெறுப்பு – ஏதேனும் ஒரு அணியின் மீதோ பிரிவினர் தொடர்பாகவோ வெறுப்பான கருத்து உருவாகும் வகையிலான உணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தாமை முக்கிய விடயமாகும்.

2. வீரம்_ இதுவரை நடைபெற்ற சம்பவங்கள் வீரச் செயல்கள் அல்ல என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.

3. எதிர்மறையான எதிர்பார்ப்புகள் துயரமான சம்பவங்களின் இறுதியில் தனது குடும்பமும் நாடும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர முடியும் என்ற எண்ணத்தை, புரிந்துணர்வை, எதிர்பார்ப்பை சிறுவர்களின் மனதில் ஏற்படுத்துதல்.

 

சுனேத் பெரேரா ...

(ரெஸ)


Add new comment

Or log in with...