சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் | தினகரன்

சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் இலங்கை சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க இலங்கை அரசும் சுற்றுலா தொடர்புடைய நிறுவனங்களும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுற்றுலாத்துறையின் பங்கு 5%. கடந்த ஏப்ரல் 21-ந் திகதி ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் சுற்றுலாத் துறையை பாதிக்க வைத்து விட்டன.

ஈஸ்டர் நாள் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் 40-க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதனையடுத்து இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை செல்வதற்கு தடை விதித்து அறிக்கைகள் வெளியிட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. சுற்றுலா பயணிகளுக்காக காத்திருந்த கடற்கரை விடுதிகள் வெறிச்சோடிக் கிடந்தன.

ஹோட்டல்களில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவு எண்ணிக்கையில் அவற்றை ரத்து செய்தனர். இதனால் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டது இலங்கை சுற்றுலாத்துறை. தற்போது சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க கவர்ச்சிகரமான அறிவிப்புகள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுலாத் துறையை மேம்படுத்த அடுத்த 6 மாத காலத்தை பிரசார காலமாக மாற்ற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை அரசின் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவையும் பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல உல்லாச விடுதிகளில் அறைகளின் கட்டணங்கள் 50% குறைக்கப்பட்டுள்ளன. மேலும் இலவச ஆயுர்வேத சிகிச்சை, இலவச காலை உணவு, இலவச வாகன ஏற்பாடுகள் என பல்வேறு அறிவிப்புகளை இலங்கை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.


Add new comment

Or log in with...