நாளைய மலர்களை அரும்பில் கசக்கி அழிக்கும் கொடுமை! | தினகரன்

நாளைய மலர்களை அரும்பில் கசக்கி அழிக்கும் கொடுமை!

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று

சிறுவர்கள் சமூகத்தின் செல்வங்களாவர். எதிர்கால சமூகத்தை வலுவூட்டி வளர்க்கும் பொறுப்பு வளர்ந்தோர் மீது இருக்கின்றது. எனவேதான் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றைய தினம் உலகளாவியரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

'சிறுவர்களை வேலைத்தலங்களில் வேலைக்கு அமர்த்தாதீர்கள்.மாறாக, அவர்களின் எதிர்கால வாழ்வின் கனவுகள் நனவாக வழி விடுங்கள்' என்பது இவ்வாண்டுக்கான தொனிப்பொருளாக அமைந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ஆம் திகதி சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. குழந்தைத் தொழிலாளர் முறை முற்றாக ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

2002ஆம் ஆண்டு முதல் இத்தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.குழந்தைகள் உழைப்பது பாவச் செயல்,குழந்தைகளை வேலைக்கு அனுப்பவது மொட்டிலே பூ கருகுவதற்கு சமம். உலகில் எல்லா நாடுகளிலும் சிறுவர் உழைப்பு தடை செய்யப்பட்ட போதிலும் பல இடங்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களின் கல்வி, தனித்திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்காமல் அவர்களின் வளர்ச்சியை உறிஞ்சும் நிலை தொடர்ந்து நடக்கிறது.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாய இலவசக் கல்வி பெற வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறினாலும் சிறுவர்கள் கூலிக்கு அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கின்றது.

யுனிசெப் நிறுவனம் குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை மூன்று வகையாக பிரித்துள்ளது.

உடல் ரீதியானபாதிப்பு, உளவியல் ரீதியானபாதிப்பு, உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு என்பவையே அவையாகும்.

உடல் ரீதியான பாதிப்பு:

கொடிய வறுமை,ஊட்டச்சத்துக் குறைபாடு,கல்வியறிவு பெற முடியாத நிலை,உடல் நலனை பாதிக்கக் கூடிய ஆபத்தான சூழல்,காற்றோட்டம் இல்லாத குறுகிய அறை போன்றவை சிறார்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிப்பதால் ஆஸ்துமா,காசநோய் போன்றஆபத்தான நோய்களின் தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.

உளவியல் அல்லது

மனரீதியான பாதிப்பு:

மனரீதியான வளர்ச்சி என்பது எழுத்தறிவு,எண்ணறிவு மற்றும் நடைமுறை வாழ்க்கை முறையினைப் பற்றிய பொதுவான அறிவு போன்றவை உள்ளடங்கியதாகும். இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் சிறார்களை மிகவும் கடுமையாகப் பாதிக்கின்றன.

உணர்வு மற்றும்

சமூகரீதியான பாதிப்பு:

கல்வியறிவு பெறமுடியாமல் வறுமையை விரட்ட எண்ணி சிறுவயது முதல் குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் இவர்களால் சமுதாயத்தில் கடைசி வரை ஒரு நல்ல நிலைமையை அடைய முடியாமல் சமூகத்தால் புறக்கணிக்கப்படும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

கவனம் செலுத்தப்பட

வேண்டிய விடயங்கள்:

சிறார்கள் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். சிறுவர்களின் தொழில் திறமைகளைக் கண்டறிந்து அத்திறமைகளை வளர்க்க பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.பாடசாலைகளில் மற்றும் கல்வி நிறுவனங்களில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்களை நடத்தலாம்.

'குழந்தைகள் உங்களுக்கு பிறந்தவர்கள் தான்,ஆனால் உங்களுக்காக மட்டுமே பிறந்தவர்கள் அல்ல'என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்துவதனூடாக சிறுவர் தொழிலாளர்களை அதிலிருந்து விடுபடுவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் கல்வியானது எதிர்காலத்தில் சிறப்பான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான சாதனமாகும். அதன் அவசியத்தை அறியாத நிலையில் உள்ளவர்களாக பலர் காணப்படுகின்றார்கள். இன்றய சூழலின் கல்வியின் அவசியம் யாது? எதிர்காலத்தில் கல்வி அறிவு இன்மையால் எவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பதை உணராத நிலையில் உள்ள பெற்றோர் காணப்படுகின்றமையால் சிறுவர்களை கற்றலில் ஈடுபடச் செய்யாமல் சுயதேவையை பூர்த்தி செய்யும் வகையில் வேலைக்கு அனுப்புகின்ற நிலை காணப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு அரசகட்டமைப்பில் பல்வேறு காப்பீடுகள் காணப்படுகின்ற அதேவேளை தேசிய,சர்வதேச சிவில் அமைப்புக்களும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றன. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களாக கொலைச் சம்பவங்கள்,கடத்தல்கள்,சிறுவர்களை வேலைக்கமர்த்துதல்,பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் போன்றவை அதிகரித்துள்ளமை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களுக்கு குடும்பங்களின் பொருளாதாரப் பின்னடைவும்,வறுமையும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. பெருந்தோட்டங்கள்,கிராமங்களில் வாழும் பொருளாதார பின்னடைவுள்ள பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியை இடைநிறுத்தி விட்டு செல்வந்த வீடுகளுக்கும்,கடைகள்,ஹோட்டல்கள்,கராஜ்கள் போன்ற பல இடங்களுக்கும் வேலைக்கு அனுப்புகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே அரும்பாகி பருவகாலங்களில் மலர வேண்டிய மலர்களை அரும்பிலேயே கசக்கி கருக்கும் சிறுவர் தொழில் சுரண்டல் அடக்குமுறைக்கு எதிராக உலகளாவிய ரீதியில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். உலகெங்கும் வாழும் சிறுவர்கள் அனைவரும் கல்வி கற்கும் சூழலும், வறுமை இல்லாது வாழும் சூழலும் உருவாக மக்கள் ஒன்றுபட்டு உழைக்க ​வேண்டும்.


Add new comment

Or log in with...