உலகிலேயே இலங்கையில் மட்டுமே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனிவீடு | தினகரன்

உலகிலேயே இலங்கையில் மட்டுமே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனிவீடு

மனித வள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி

உலகிலேயே இலங்கையில் மட்டுமே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடும், சொந்த நிலமும் இருக்கின்றது. இலங்கையில் எங்கெல்லாம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கு தனி வீடுகளை அமைத்துக்கொடுத்து வருகின்றோம். கடந்த மூன்று வருடங்களில் 6600 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என மனித வள நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில் தலவாக்கலை கிறேட்வேஸ்டன் தோட்டத்தில் 20 வீடுகளை கொண்ட கிராமம் மக்களின் பாவனைக்கு அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 200 வருடங்கள் வரலாறு கொண்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்தமான நிலத்தில் தனி வீடுகளில் வாழ்வதற்கு உரிமை தந்தவர் அமைச்சர் பழனி திகாம்பரம். அவருக்கு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்.

அமைச்சர் திகாம்பரத்தின் முயற்சியால் 10000 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளது.

அதனூடாக சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். மேலும் அந்த நிதியினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள் பி.ரவிச்சந்திரன், எம்.கல்யாணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலவாக்கலை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...