ஸஹ்ரானை கைதுசெய்யுமாறு பல தடவை கோரி வந்தோம் | தினகரன்

ஸஹ்ரானை கைதுசெய்யுமாறு பல தடவை கோரி வந்தோம்

அளுத்கமை தாக்குதலின் பின்பே ஐ.எஸ் உணர்வு பரவ ஆரம்பித்தது ஜிஹாத் தொடர்பில் சம்பிக்க தவறான கருத்து

அளுத்கமை தாக்குதலின் பின்னரே ஐ.எஸ் கருத்துணர்வுகள் இலங்கையில் பரவ ஆரம்பித்ததோடு,சில இளைஞர்கள் ஐ.எஸ் குறித்து பேச ஆரம்பித்தார்கள். ஆனால், ஐ.எஸ்சுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்பதை 2014 இல் இருந்து உலமா சபை வலியுறுத்தி வந்ததாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.

ஸஹ்ரான் தொடர்பாக ஆரம்பம் முதல் பாதுகாப்பு

தரப்பிற்கு நாம் தகவல் வழங்கியதோடு அவரை கைது செய்யுமாறும் கோரியிருந்தோம். இருந்தும் அவர் கைதாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆராயும் விசேட பாராளுமன்ற குழு நேற்று பாராளுமன்ற குழு அறையில் கூடியது. இதில் சாட்சியமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குழுவின் பதில் தலைவர் ஜெயம்பத்தி விக்ரமரட்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த சாட்சி விசாரணையில் குழு உறுப்பினர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

மகரகமவில் பொதுபலசேனா அமைப்பு வெறுப்பூட்டும் பேச்சுக்களை முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பியது. பின்னர் அளுத்கம சம்பவம் நடந்தது. சில இளைஞர்கள் ஐ.எஸ் குறித்து பேச ஆரம்பித்தார்கள். ஆதில் என்பவரே ஐ.எஸ்சுக்கு பின்புலமாக இருந்தார்.இவர் என்னை காபிர் என்றார்.தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன. சகிக்க முடியாத விதத்தில் சம்பவங்கள் நடந்தன. இறைவனை கீழ்த்தரமாக விமர்சித்தார்கள். அண்மையில் ஆதில் என்பவர் கைதானார்.

2014 ஆம் ஆண்டு ஐ.எஸ்சுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை அறிவித்தோம். 2015 இல் நிலாம் என்பவர் ஐ.எஸ்சில் இணைய சிரியா சென்றார்.ஐ.எஸ்ஸிற்கு ஆதரவு வழங்கிய ஒருவர் இறந்ததையடுத்து எமக்கும் ஐ.எஸ்ஸிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை கூட்டறிக்கையாக வெளியிட்டு அறிவித்தோம்.12 நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதில் கையொப்பமிட்டிருந்தன. அதில் அ.இ.தௌஹித் ஜமாஅத்தும் அடங்கும்.

இஸ்லாத்திற்கும் ஸஹ்ரானுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. பாதுகாப்புத் துறையில் இது பற்றிக் கூறியிருந்தோம்.

2017 இருந்து ஸஹ்ரான் தொடர்பில் செயற்பட்டோம்.ஸஹ்ரான் கைது செய்யப்பட வேண்டும் எனப் பல நடவடிக்கை எடுத்தோம். அவரின் கொள்கைகள் இஸ்லாத்துடன் தொடர்புடையவையல்ல. இவ்வாறான சம்பவம் நடக்கும் என கனவிலும் நினைக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலை ஜனவரி மாதம் சஹ்ரான் பற்றிய தகவல்கள் அடங்கிய இறுவட்டொன்றைப் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கினோம். அவர் ஒருபோதும் எம்முடன் இணைந்து செயற்படவில்லை.

ஜிஹாத் பற்றித் தவறான கருத்து பரப்பப்படுகிறது. இவர்கள் ஜிஹாத் செய்து மரணிக்கவில்லை. ஜிஹாத் பற்றி புனையப்பட்ட கருத்தொன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். இறைவனை வணங்காத அனைவரையும் கொல்லுவதே ஜிஹாத் என அவர் கூறியுள்ளார். இது ஒரு மதத்தை அவமதிப்பதாகும். ஜிஹாத் பற்றி அவருக்கு மட்டுமன்றி பிக்குமாருக்கும் அறிவூட்டியிருக்கிறோம். தாய் நாட்டைக் காப்பாற்ற போராடுவதும் ஜிஹாத் தான்.பரந்த அர்த்தம் கொண்ட ஜிஹாதிற்கு அவர் தவாறான விளக்கம் கூறியுள்ளார்.

21 தாக்குதலை கண்டிக்கிறோம். இந்தச் சம்பவத்தின் பின்னர் அப்பாவிகள் கூடப் பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு நடந்தால் அடிப்படைவாதத்தின் பக்கம் அவர்கள் தள்ளப்படலாம் என்றார்.(பா)

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

 

 


Add new comment

Or log in with...