உயிர் காக்கும் ட்ரோன்கள் | தினகரன்

உயிர் காக்கும் ட்ரோன்கள்

அண்மையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் பற்றி மக்கள் அதிகம் பேசிய விடயம் தீவிரவாதம், தீவிரவாதிகள், அவசரகால சட்டம், இன முறுகல் போன்ற விடயங்களே இவற்றையெல்லாம் கடந்து மனித நேயம், மனித ஒற்றுமை, மனித உயிரின் பெறுமதி போன்றவை தொடர்பில் மிகச் சிலரே பேசினர். இன்று நாம் அது பற்றி பேசுவோம்.

இப்பிராந்தியத்தில் மிகச் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயர் பெற்று விளங்குகின்றது.

ஆயினும், இவ்வாறான அவசர நிலமைகளின்போது, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான மருத்துவ உதவிகள், மருந்து வகைகள், உயிர் காக்கும் இரத்த தேவை போன்றவற்றை அவசரமாக விநியோகிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்ற நிலையில், சுகாதார சேவை வசதிகளில் பாரிய இடைவெளி காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத வகையில், சம காலத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள், இதன் காரணமாக பாதிக்கப்பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாக தங்களது உயிருக்கு போராடிய மக்களுக்கு அதன்போது மிகவும் அவசியமாக இருந்தது, இனப்பிரச்சினையோ, மதக் கலவரமோ அன்றி…. இன, மத, சாதி இன்றிய இரத்தம், குருதியே அவர்களுக்கு அன்று அவசியமாய் இருந்தது.

நாட்டின் பல பிரதேசங்களில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட குருதி தட்டுப்பாடு… அதனை ஈடு செய்ய, நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து குருதியைப் பெற்றுக் கொண்டு வருவதற்கு வைத்தியசாலைகள் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்தது. அவசர குருதித் தேவையை பூர்த்தி செய்வதற்கு நாட்டில் போதுமான குருதி கையிருப்பில் இருந்த போதிலும், அதனை தேவையான இடத்திற்கு விரைவாக கொண்டு செல்வது எவ்வாறு எனும் திடீரென ஏற்பட்ட நடைமுறை சிக்கலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது சுகாதார துறை எதிர்நோக்கிய சொல்லொணா பிரச்சினையாக இருந்தது.

நாடுகள் மருத்துவ வசதியை வழங்கும் ஆற்றல் தொடர்பில் உலக வங்கி நடாத்திய ஆய்வில், பட்டியலின் அடியிலிருந்து அரைவாசியில் இலங்கை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான சவாலாக, மருந்து வகை மற்றும் மருத்துவ சேவைகளை இலகுவில் பெற்றுக்கொள்ள முடியாமை இனங்காணப்பட்டுள்ளது.

அதிநவீன மருத்துவ வசதிகள் தொடர்பில் அரசாங்கம் பாரிய முதலீடுகளை மேற்கொண்ட போதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது, சுகாதார சேவையின் மற்றுமொரு புள்ளியை அடையாளப்படுதியுள்ளது.

அவசர மருத்துவ நிலைமை, அத்தியாவசிய மருந்து வகைகளின் உடனடித் தேவை போன்ற வசதிகளின் மேம்பாட்டை அது சுகாதார சேவைக்கு ஆழமாக உணர்த்தியுள்ளது.

இத்தேவைகளை பூர்த்தி செய்வதில், முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உணர்த்தப்பட்டுள்ளது. இந்நெருக்கடியை தீர்க்கும் நடவடிக்கையை தாமதப்படுத்துவது பல்லாயிரக்கணக்கானோரின் அவசர மருத்துவ தேவைகளுக்கு ஓர் அச்சுறுத்தல் என்றே கூற வேண்டும்.

இது மற்றுமொரு தீவிரவாத தாக்குதலை மையப்படுத்தியதா என நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக அவ்வாறான ஒன்றுதான் இடம்பெற வேண்டும் என்றல்ல, அனர்த்தங்களும், ஆபத்துகளும் வருகின்ற வடிவங்கள் வேறாக இருக்கலாம். உணர்த்தப்பட்டுள்ள தேவை, மனித உயிரின் முக்கியத்துவம் ஆகிய இரு விடயங்கள் இதற்கு போதுமல்லவா. வரு முன் காப்பதானது, செலவுகளை மாத்திரமன்றி மனித உயிரின் இழப்புகளையும் குறைக்கும் ஏன் இல்லாதொழிக்கும் என்றே கூறலாம்.

எனவே இது தொடர்பில் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டிய காலம் இதுவே என மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அவசர மருந்து தேவை, அத்தியவசிய குருதித் தேவை போன்ற விநியோக நடவடிக்கைகளில் ட்ரோன் சாதனத்தை மகத்தான அதன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது காலத்தின் தேவை என வல்லுனர்கள் நம்புவதோடு, அதுவே எதிர்காலமாக அமையப்போகிறது என்பதில் ஐயமில்லை.

வளர்ச்சி கண்டு வருகின்ற பல நாடுகள் மருத்துவ சவால்கள் மற்றும் உயிர்களைப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் காணப்படும் விநியோக நடவடிக்கைகளில் ட்ரோன் சாதனத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. அவ்வாறு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளமையே அந்நாடுகள் அதில் வெற்றி கண்டுள்ளமைக்கு சான்றாகும்.

ஒரு சில மருந்துகள், உபகரணங்கள் மாத்திரமன்றி, குருதி சேமிக்கப்படுவதானது, விசேட கவனத்தின் அடிப்படையில், அதற்கான விசேட அமைப்புகள் மற்றும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட தொகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறான தொகுதிகளை நாடு முழுவதும் பல நூறு இடங்களில் அமைப்பதானது, பாரிய பொருள் செலவு, மனித வலு, அதனை பேணி பராமரிப்பதிலான செலவு என பல்வேறு செலவுகளை ஏற்படுத்துகின்றன.

எனவே இலங்கை போன்ற சிறிய நாட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவ்வசதிகளை ஏற்படுத்துவது போதுமானதாகும். ஆயினும் அவ்வசதியை தேவைக்கு ஏற்ப தேவை ஏற்படும் நேரத்தில் நாடு முழுவதும், குறிப்பாக தொலைதூர இடங்கள், கஷ்டப் பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் இருக்கும் சிக்கலை தீர்ப்பதே தற்போதைய சவாலாக காணப்படுகின்றது. அதிலும் உரிய நேரத்தில் இவ்வதிகள் கிடைக்காமல் போவதன் காரணமாக இழக்கப்படும் உயிர்கள் அதிமாகும்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் இச்சவால் இலங்கைக்கும் மாத்திரம் பொதுவானதல்ல. ஆயினும் இச்சவாலை தீர்ப்பதன் மூலம், காப்பாற்றப்படக்கூடிய உயிர்களை குறிப்பாக அநியாகமாக இழக்கப்படும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் உயிர்களை காப்பாற்றலாம்.

கொழும்பை மையமாக கொண்ட இவ்வாறான பல சேவைகள், அம்பியூலன்ஸ் மூலம் மாத்திரம் பெற்றுக் கொள்வதென்பது, உரிய நேரத்தில் அதன் தேவை சென்றடையாகமை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட நடைமுறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிடச் செய்கின்றது.

ட்ரோன் சாதனங்கள் ஊடகத்துறையில் மாத்திரமன்றி, வர்த்தகம், கைத்தொழில், இராணுவ துறைகளில் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மருத்துவத் துறையிலும் ட்ரோன் சாதனங்களின் பயன்படுத்துவதை விஸ்தரிப்பது, உலகில் பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கும் என்பதோடு, தற்போதைய தேவையும் அதுவாகும் என்றால் மிகையாகாது.

பல நாடுகளில் இதன் பயன்பாடும் அதன் மூலமான சிறந்த பலனும் கிட்டியுள்ளது. ஒரு புதிய தொழில்நுட்பமாக மருத்துவ ரீதியான ட்ரோன் மூலமான விநியோக சேவை காணப்படுகின்றது. நேரத்தை மீதப்படுத்தி அவசர தேவயின்போது, குருதி முதல் உயிர் காப்பு மருந்து வகைகளை வழங்கக்கூடிய மருத்துவ ட்ரோன் விநியோக சேவையானது புரட்சிகரமான ஒரு புதிய சேவையாக அமைந்துள்ளது. ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட விநியோக மையங்களில் மருத்துவ விநியோக நடவடிக்கைகளை திறன்பட, உரிய நேரத்தில் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு பல ட்ரோன் சாதனங்களை பயன்படுத்தி, கால நேரம் இன்றி இச்சேவையை 24 மணி நேரமும் வழங்க முடியும்.

வசதிகள் குறைவாக காணப்படும் ஆபிரிக்க நாடுகளான கானா மற்றும் ருவண்டாவில் பல்லாயிரக்கணக்கான வைத்தியசாலைகளுக்கு மருத்துவ ட்ரோன் சாதனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, அவசர தேவைக்கு மாத்திரமன்றி சாதாரண தேவைகளின்போதும் 22 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் மருந்து வகைகளை உடனடியாக விநியோகித்து வருகின்றது.

இச்சேவையின் மூலம் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் பல மில்லியன் உயிர்களை காக்கும் பணி தொடருகின்றது.

இவ்வாறான ட்ரோன் சேவை மூலம், மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு அல்லது காலவதியான மருத்துவ பொருட்கள் எனும் பேச்சுக்கே இடமில்லை எனும் கருத்தை இன்று உலகில் உரத்துக்கூறக்கூடிய ஒரேயொரு நாடாக ருவண்டா தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.

எனவே முறையாக பராமரிக்கப்படும் மத்திய களஞ்சிம் ஒன்று அமைந்துள்ள நிலையில், உரிய நேரத்தில் விநியோக நடவடிக்கையை மேற்கொள்வதே இலங்கையின் அவசர மருத்துவ தேவைக்கு சரியான தீர்வாக அமையும் என்பதோடு, அது மருத்துவத் துறையின் வளர்ச்சிக்கான பாதையும் ஆகும்.

இச்சேவை மூலம், ஒரு குறுந்தகவல் மூலம் தங்களது அவசர தேவையை தெரியப்படுத்தும் மருத்துவ குழு, ஒரு குறுகிய நேரத்தில் அல்லது சில வேளைகளில் ஒரு மணித்தியாலத்திற்குள் அவை பெறப்படுகின்றன. எவ்விதமான மேலதிக உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு,

சுமார் 2 கிலோ வரையான பொருட்களை சுமந்து செல்லும் ட்ரோன் சாதனங்கள் தன்னியக்க முறையில் பறப்பதுடன், விநியோக மையங்களிலிருந்து தன்னியக்க முறையில் வெளிக்கிளம்பி, GPS உதவியுடன் குறித்த இடத்தை அடைந்து, தரைமட்டத்திற்கு மேல் சுமார் 30 அடி பாதுகாப்பான உயரத்திலிருந்து, பராசூட் மூலம் மருந்துப் பெட்டியை பாதுகாப்பாக விநியோக்கின்றன.

மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கும் ட்ரோன்கள், விநியோக மையத்திலிருந்த, பல்லாயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் பிரதேசத்திற்கான விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

இத்தொழில்நுட்பம் மூலம், கையிருப்பிலுள்ள மருந்துப் பொருட்கள் தீர்ந்து போதல், குளிரூட்டி உடைந்து போதல், அளவுக்கதிகமான கையிருப்பு, தேவைகளை சரியாக எதிர்வுகூற முடியாமை, மருந்துகள் காலாவதியாதல் போன்ற நாட்டிலுள்ள அனைத்து மருத்துவ சிகிச்சை மையங்களிலும் எதிர்கொள்ளும் நிலைமைகளைப் போக்கவும் இது உதவுகின்றது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது போன்ற நிலைமைகளில் அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்தவும் இத்தொழில்நுட்பம் உதவுகின்றது.

குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சமயத்தில் கொழும்பிலுள்ள மூன்று வைத்தியசாலைகளிலும் குருதிப் பற்றாக்குறை ஏற்பட்டது, நாட்டின் ஏனைய பாகங்களில் போதுமான அளவு குருதி கையிருப்பில் இருந்தது. ஆயினும் அதனை அவசரமாக கொழும்பிற்கு எடுத்துவர வேண்டிய தேவை காணப்பட்டது. கிடைக்கப்பெறும் குருதியின் ஒட்டுமொத்த தரமும் இதன் மூலமாக மேம்படுத்தப்படும். குருதி கிடைக்கப்பெறுவதை மேம்படுத்துவதற்கு பல்வேறு இரத்த வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள போதிலும், குருதியின் தரம் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. இத்தொழில்நுட்பமானது குருதிப் பரிசோதனை மற்றும் விநியோக நடவடிக்கைளை மத்திய தொழிற்பாடாக மாற்றியமைத்து, கிடைக்கப்பெறுகின்ற வழிமுறைகளை மேம்படுத்தி குருதி விநியோக சேவைக்கு இடமளிக்கின்றது.  

இருதய நோயாளிகளுக்கும் இத்தொழில்நுட்பம் பேருதவியாக அமையும். கிராமப்புற வைத்தியசாலையிலுள்ள நோயாளர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகின்ற சமயத்தில் முடிந்த வரை விரைவாக அவருக்குரிய சிகிச்சை நடவடிக்கைளை முன்னெடுத்தல் வேண்டும். அந்த நோயாளரின் உயிரைக் காப்பதில் முதல் ஒரு அல்லது இரு மணி நேரம் மிகவும் முக்கியமானது. எனினும் தேவையான மருந்து கையிருப்பில் இல்லாமல், கொழும்பிலிருந்தே அதனை தருவிக்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்ற போது, அதனை விரைவாக தரை வழியாக பெற்றுக்கொள்ள முடியாது. ஆகவே, அந்த நோயாளரின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முடிந்த வரை விரைவாக வைத்தியசாலைக்கு மருந்தை தருவிப்பதற்கு மிகவும் உகந்த தீர்வாக ட்ரோன்கள் காணப்படுகின்றன.

telemedical communication எனப்படும் தொலைதூர மருத்துவ தொடர்பாடலுக்கும் ட்ரோன் சாதனங்களை பயன்படுத்தலாம். குறிப்பாக அனர்த்தமொன்று இடம்பெற்றுள்ள இடத்திற்கு மருத்துவ நிபுணர்கள், விசேட தொடர்பாடல் உபகரணத்தை அனுப்பி வைத்து, தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக மத்திய நிலையத்திற்கும், அனர்த்தம் இடம்பெற்றுள்ள இடத்திற்கும் இடையில் தொடர்பாடல் இணைப்பொன்றை ஸ்தாபித்துக் கொள்ள முடியும்.

மருத்துவ தேவைகளுக்கு அப்பால், காடழிப்பு, பல்வேறு செயற்திட்டங்களின் மூலம் சூழலுக்கு ஏற்படும் தாக்கம், இலங்கையில் மனிதனுக்கும்-யானைக்கும் இடையிலான பிணக்கு போன்ற விலங்குகளின் நடமாட்டங்கள் போன்ற விடயங்களுக்கும் கண்காணிப்பு சாதனமாக டிரோன் சாதனங்களை உபயோகிக்க முடியும். மதிப்பீடுகள் மற்றும் உரிய தீர்வுகளை மனிதர்கள் நேரே சென்று மேற்கொள்ள முடியாத வகையில் தொழிற்சாலை கசிவுகள் மற்றும் வெடிப்பு சம்பவங்கள் போன்ற இரசாயன அல்லது உயிரியல் அனர்த்தங்களுக்கும் இவற்றை உபயோகிக்க முடியும்.

சனத்தொகை அதிகரித்துச் செல்லும் நிலையில் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் அரசாங்கங்களின் மீதான அழுத்தமும் அதிகரிக்கின்ற நிலையில் விரையத்தை குறைத்து, உயிர்களைக் காப்பாற்றுவதற்கு நோயாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் புதிய மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் மீது முதலீடு செய்யும் முயற்சிகள் சிறு அளவிலேயே காணப்படுகின்றன.

எனவே நாட்டின் சுகாதார சேவையில் விநியோகச் சங்கிலியை சிறப்பாக மாற்றியமைப்பதற்கு உதவும் மருத்துவ ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் பல இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

வரும் முன் காப்போம். உரிய நேரத்தில் (இரத்தம்) விநியோகிப்போம் உயிர் காப்போம்.


Add new comment

Or log in with...