Friday, March 29, 2024
Home » தொழுகையில் இறையச்சம்

தொழுகையில் இறையச்சம்

by sachintha
January 12, 2024 8:34 am 0 comment

‘திண்ணமாக இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை (தக்வாவை) மேற்கொள்கின்றார்கள்’

(ஸூரா முஃமினூன் 1-2)

ஃபலாஹ் என்ற சொல் வெற்றி, வளம், செழிப்பு ஆகியவற்றை இது குறிக்கும். ‘அஃப்லஹர் ரஜல்’ என்பதற்கு வெற்றி பெற்ற மனிதர், நாடியதைப் பெற்றுவிட்ட மனிதர், மன நிறைவும் வளமும் பெற்ற மனிதர், முயன்றதைச் சாதித்துவிட்ட மனிதர், நல்ல நிலைமையில் இருக்கின்ற மனிதர் என்றெல்லாம் பொருள்கள் உண்டு. ‘கத்அப்லஹ’ – ‘திண்ணமாக வெற்றி பெற்று விட்டார்கள்’ என்ற வசனம் உலகிலும் மறுமையிலும் முடிவே இல்லாத நிலையான வளங்களை ஈட்டிக்கொள்ள வழிகாட்டுகிறது. சத்தியத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் உண்மையான வெற்றியைப் பெறமுடிகிறது.

‘குஷூஃஉ’ என்ற சொல் குனிதல், அடங்கிப் போதல், அடக்கத்தையும், பணிவையும் வெளிப்படுத்துதல் என்ற பொருளைத் தரக்கூடியதாகும்.

பொதுவாக பேராற்றலும் சர்வ வல்லமையும் பெற்ற வல்ல அல்லாஹ்வின் முன்பாக நிற்கும் போது மனிதன் விக்கித்துப் போகிறான். தலையை தாழ்த்திக் கொள்கிறான். கைகால்கள் தளர்ந்து விடுகின்றன. பார்வை ஒடுங்கி விடுகின்றது. குரல் அமுங்கிப் போகின்றது.

ஒருமுறை ஒரு ஸஹாபி தாடியை நீவி விட்டவாறு தொழுது கொண்டிருப்பதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ‘அவருடைய உள்ளத்தில் ‘குஷூஃஉ’ இருந்திருக்குமானால் அவருடைய உடலையும் குஷூஃஉ கவ்விக் கொண்டிருக்கும் என்றார்கள்.

உள்ளத்துடன் தொடர்புடையதுதான் ‘குஷூஃஉ’ எனில் அதன் இயல்பான தாக்கம் உடலையும் பாதிக்கும் என்பது மேலே சொல்லப்பட்ட நபி மொழி மூலம் அறிந்துகொள்ளலாம்.

உள்ளத்தில் ‘குஷூஃஉ’வின் தன்மை ஒரே சீராக இருப்பதில்லை. சில சமயம் உச்ச கட்டத்தை அடைந்துவிடும். சில சமயம் வீழ்ச்சியடைந்துவிடும். இந்நிலையில் குறைந்த பட்சம் தொழுகையின் வெளிப்படையான வடிவில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு குஷூஃஉ மேற்கொள்ளப்படுவதற்கு ஷரீஆத் வரையறுத்துள்ள ஒழுக்கநெறிகள் துணை நிற்கின்றன.

தொழுகையின் போது ஒருவர் இடது பக்கமோ, வலது பக்கமோ திரும்பிப் பார்த்தல் கூடாது. தலையை உயர்த்தி மேலேயும் பார்க்கக் கூடாது. ஸஜ்தா செய்கின்ற இடத்திலிருந்து பார்வை இங்கும் அங்கும் அகலக் கூடாது. தொழுகையின் போது அசைவதும் வெவ்வேறு திசைகளில் குனிவதும் தடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தாம் அணிந்திருக்கின்ற ஆடைகளைத் திரும்பத் திரும்ப மடிப்பதும் அவற்றை மீண்டும் மீண்டும் சீர்செய்வதும் அவற்றைக் கொண்டு விளையாடுவதும் தடுக்கப்பட்டுள்ளது.

உரத்த குரலில் கர்ஜிக்கின்ற தொனியில் குர்ஆன் ஒதுவதையும் ராகத்துடன் பாடுகின்ற விதத்தில் ஓதுவதையும், பெரும் ஓசையுடன் ஏப்பமிடுவதும், சத்தமாக கொட்டாவி விடுவதும், விரைவாகத் தொழுகையை நிறைவேற்ற முற்படுவதும் குஷூஃஉவுக்கு மாறானவைகளாகும்.

தொழுகையில், மனத்தை இங்கும் அங்கும் அலைபாய விடாமல் ஒருமுகப்படுத்தி வைத்திருப்பதும் அவசியமாகும். வேண்டுமென்றே தொழுகைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை யோசிப்பதிலிருந்தும் விலகி இருத்தல் வேண்டும். நம்மை அறியாமல் எண்ணங்கள், அலைமோதலாம். இது மனித இயல்பு. மனிதனின் பலவீனம் என்றாலும் தொழுகையின் போது மனத்தையும் சிந்தனையையும் அல்லாஹ்வுடன் தனித்திருப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படும் போது அவை உள்ளத்தின் ஆழத்திலிருந்து மொழியப்படுகின்றவையாகபரிணமிக்க வேண்டும். அந்த உன்னத நிலையை அடைவதற்காக முயலவேண்டும். அப்படியும் தன்னையும் மீறி வேறு எண்ணங்கள் அலை மோதினால் உடனே அக்கணத்திலேயே அவற்றிலிருந்து கவனத்தை திருப்பி தொழுகையின் பக்கம் கவனத்தை குவித்து விட முயல்வது அவசியம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT