சினிமா புகழ் கிரேஸி மோகன் காலமானார் | தினகரன்

சினிமா புகழ் கிரேஸி மோகன் காலமானார்

தென்னிந்திய பிரபல நடிகர் கிரேஸி மோகன் நேற்று (10) தனது 67 ஆவது வயதில் காலமானார்.

இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரியாகும். மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடிய இவரது திறமையே நாடகங்கள் மற்றும் சினிமாவில் இவரை எழுத வைத்தது.

கே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமான இவர், கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைத்ததும் அவரின் பல படங்களுக்கு கதை வசனங்கள் எழுத ஆரம்பித்தார். கமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவரே வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

“அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” ஆகிய படங்களில் இவரின் நகைச்சுவை மறக்க முடியாதது. குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றிருந்தன.

தன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களையும் இவர் இயற்றியிருந்தார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, "மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா" போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறியது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 நாடகங்களை இவர் மேடையேற்றி உள்ளார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதிய பெருமையும் இவரைச் சேரும்.


Add new comment

Or log in with...