அனுமதியின்றி கோயில்களில் கட்டணம் அறவிட தடை விதிப்பு | தினகரன்

அனுமதியின்றி கோயில்களில் கட்டணம் அறவிட தடை விதிப்பு

தமிழக கோவில்களில் உரிய அனுமதியின்றி நுழைவுக் கட்டணம், வாகனத் தரிப்பிடக் கட்டணம் உள்ளிட்டவற்றை அறவிடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனப் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அறங்காவலர்,தாக்கல் செய்த வழக்கை அடுத்தே,நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, அனுமதியின்றி கட்டணம் வசூலிக்க தடை விதித்துள்ளது. மேலும் தமிழக கோவில்களில் சட்டவிரோதமாக நுழைவுக் கட்டணம், வாகனக் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூலிப்பதை தடுக்க அனைத்து மாவட்ட ஆணையாளர்களுக்கும் 30 நாட்களுக்குள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் கோவில் நுழைவாயில்களில் அரசு அங்கீகாரம் மற்றும் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணங்கள் அப்பகுதி மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.


Add new comment

Or log in with...