Friday, March 29, 2024
Home » இன்று முதல் ரின் மீன் இறக்குமதிக்கு தற்காலிக தடை

இன்று முதல் ரின் மீன் இறக்குமதிக்கு தற்காலிக தடை

- தேசிய ரின் மீன் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு நடவடிக்கை

by Rizwan Segu Mohideen
January 11, 2024 6:19 pm 0 comment

தேசிய ரின் மீன் உற்பத்தி தொழிலைப் கட்டியெழுப்புவதற்காக வெளிநாடுகளிலிருந்து ரின் மீன் இறக்குமதி செய்வதற்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை இன்று முதல் (11) தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் இன்று (11) இலங்கை ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.

இதன் போது ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து பெருமளவு ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதன் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரின் மீன்களை சந்தைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இவ்வருடம் ஜனவரி 01ம் திகதி முதல் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரின் மீன்களுக்கு வற்வரி விதிக்கப்பட்டதால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ரின் மீன்களின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இலங்கை சந்தைக்கு தேவையான ரின் மீன்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென்ற போதும் கடந்த காலங்களில் பெருமளவு ரின் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் தற்போது அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள செஸ் மற்றும் வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின் மீன்களின் விலைக்கு தங்களது உற்பத்திகளை வழங்க முடியாதென்பதால் தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் பிரநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர், இன்று முதல் ரின் மீன் இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியதுடன் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரின் மீன்களுக்கு மேலதிக வரி ஒன்றை அறவிடுவதற்கு ஏதுவான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆராய்ந்து தமக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர் திருமதி குமாரி சோமரத்னவுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன் இலங்கையில் மீன்களின் விலைகள் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் மீன்களை இறக்குமதி செய்யும் போது தேசிய ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியதுடன் நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சந்தை விலை மற்றும் விநியோகம் தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இச் சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் குமாரி சோமரத்ன, பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர்களான திருமதி அனுஷா போகுல, தம்மிக ரணதுங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT