அமைதியாகவிருந்து பெண்களை தாக்கும் மாரடைப்பு | தினகரன்

அமைதியாகவிருந்து பெண்களை தாக்கும் மாரடைப்பு

பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் போது அதற்கான அறிகுறிகள் பெரிய அளவில் தெரிய வருவதில்லை என்று ஆய்வொன்று தெரிவித்துள்ளது. அதன் காரணத்தினால் பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு தொடர்பிலும் அதற்கான அறிகுறிகள் மற்றும் அவற்றை தவிர்த்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் அறிந்து கொள்வது அவசியமானது.  

பொதுவாக ஆண்களை விடவும் பெண்களுக்கு இதய துடிப்பு அதிகமாகக் காணப்படும். அதாவது எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பும் மெதுவாகக் காணப்படும். குறிப்பாகச் சொல்வதாயின் யானைக்கு நிமிடத்திற்கு 20, -30ஆகவும், சிறிய உயிரினங்களின் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். உதாரணத்திற்கு எலிக்கு நிமிடத்திற்கு 500, -600ஆகவும் காணப்படும். மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களை விட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.  

அதேநேரம் பல் ஈறுகளில் நோய்தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். அந்த வகையில் அமெரிக்காவின் வொஷிங்டனில் நடாத்தப்பட்ட மருத்துவ ஆய்வொன்றில், 'ஆண்களை விடவும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது பெரும்பாலான சந்தரப்பங்களில் தெரிவருவதில்லை' என்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இந்த மாரடைப்பானது மிகத் தீவிர கட்டத்தை அடையும் போது, அது மாரடைப்புதான் என அறிந்து கொண்டால் மாத்திரம் தான் அதற்குரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளப்படுகின்றது. ஆனால் நோயாளர்களின் அறிகுறிகளை அடிப்படையாக வைத்து தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பர். இவ்வாறான நிலையில் பெண்களுக்கு மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரிய வராமல் போய் விடுவதால் உரிய நேர காலத்தில் சிகிச்சை அளிக்க முடியா நிலைமை ஏற்படுகின்றது.  

என்றாலும் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் அறிகுறிகளாக முதுகின் மேல்புறம் வலி, வாந்தி, சுவாசிப்பதில் சிரமம், மூக்கடைப்பு, அஜீரணம் போன்றன ஏற்படலாம் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

பெண்களுக்கு மத்தியில் மாரடைப்பு வீதம் குறைவாகக் காணப்பட்டாலும் அதற்காக வெளிப்படும் அறிகுறிகளும் வெளியே தெரிய வருவதில்லை. அதன் விளைவாகவே சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படுகின்றது. இது பெண்களுக்கு திடீர் மரணம் ஏற்பட வழிவகுக்கின்றன.  

மேலும் ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்படுமாயின் அதற்கான அறிகுறிகள் வெகுநேர காலத்திற்கு முன்பாகவே வெளிப்பட முடியும். அதனால் மாரடைப்பு என்பதை அறிந்து கொண்டதும் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைக்கு செல்வதே நல்லது. அப்போது தான் உயிராபத்திலிருந்து பெண்ணைக் காப்பாற்றக்கூடியதாக இருக்கும்.  

இருப்பினும் பெண்களும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களும் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது மாரடைப்பு தான் என்பதை அறிந்து கொள்ளத் தாமதமாவதால் தான் சில நேரங்களில் உயிராபத்து அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றன.  

அதன் காரணத்தினால் மாரடைப்பு ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகளைக் கொண்டிருப்பவர்கள் பின்வரும் தவிர்ப்பு முறைமைகளை தவறாது கடைப்பிடிப்பது அவசியமானது. அப்போது மாரடைப்பு ஏற்படுவத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம்.  

அதாவது உண்ணும் உணவு வகைகள் ஆரோக்கியமானதாகவும், உப்பு, - கொழுப்பு என்பன குறைவானதாகவும், கார்போஹைதரேட், நார்ச்சத்துகள் அதிகமானதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், அளவுக்கு மீறிய உடல் பருமனைக் கொண்டவர்கள் உடல் எடையைக் குறைத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும், குறிப்பாக உடற்பயிற்சிகளை வழக்கமாகிக் கொள்ள வேண்டும், புகைப்பிடித்தல் பழக்கத்தை முழுவதுமாக தவிர்த்துக் கொள்வதோடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரோல் பிரச்சினையைக் கொண்டிருப்பவர்கள் மருந்துகளை முறையாகப் பாவிக்க வேண்டும். அதன் ஊடாக உடல்நிலையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். இவற்றின் மூலம் பெண்கள் மரடைப்பை பெரிதும் தவிர்த்துக் கொள்ள முடியும். இது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாக உள்ளது.  

ஆகவே பெண்கள் மாரடைப்பு தொடர்பில் கவனயீமாக நடந்து கொள்ளக்கூடாது. இவ்விடயத்தில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவர்களது பொறுப்பாகும்.  


Add new comment

Or log in with...