விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் அவயவம் முகம் | தினகரன்

விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும் அவயவம் முகம்

சீராக்கல் சிகிச்சை செலவு மிக அதிகம்

மனிதனுக்கு அழகு முகமும் வாயும் தான். இந்த இரண்டும் சீரில்லாமல் முழு உடலும் சீராக இருந்தாலும் அவன் பெறுமதி மிக்கவனாகப் பார்க்கப்படுவதில்லை. அதேநேரம் மனித உடலில் முகமும், வாயும் மிக முக்கிய அவயவங்களாக விளங்குகின்றன. அத்தோடு மனிதனின் அதி முக்கிய பல உடல் உள்ளுறுப்புக்களும் இப்பகுதியில் தான் அமைவுற்றுள்ளன.  

இவ்வாறு அதி முக்கியத்துவம் பெற்று விளங்கும் இந்த அவயவங்கள் திறந்தபடி காணப்படுவதால் அவை அதிக அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கின்றன. அதிலும் உலகில் கைத்தொழில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் இந்த அச்சுறுத்தல் பெரிதும் அதிகரித்துள்ளது. குறிப்பாக வாகனங்களின் அதிகரிப்பு இந்த அச்சுறுத்தலில் பிரதான பங்கு வகிக்கின்றது. அதனால் இந்த நூற்றாண்டில் வீதி விபத்துக்கள் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது  

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவிப்பின் படி வீதி விபத்துக்கள் காரணமாக வருடமொன்றுக்கு 1.25மில்லியன் பேர் உயிரிழக்கின்றனர். அத்தோடு 20 – 50மில்லியன் பேர் வீதி விபத்துக் காயங்களுக்கு உள்ளாகின்றனர். அதிலும் 15வயதுக்கும் 29வயதுக்கும் இடைப்பட்டோர் அதிகளவில் உயிரிழக்க வீதி விபத்துக்களே மூல காரணியாக உள்ளது.  

இருந்த போதிலும் அண்மைக் காலமாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வீதி விபத்துகளுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வருடா வருடம் குறைவடைந்து வருகின்ற போதிலும், வளர்முக நாடுகளில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவது பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது.  

அந்தவகையில் வளர்முக நாடான இலங்கையில் வருடமொன்றுக்கு ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் இவ்விபத்துக்களால் சுமார் 2500பேர் உயிரிழப்பதாகவும், சுமார் 7000பேர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாவதாகவும் போக்குவரத்து பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.  

இதேவேளை இலங்கை பல் வைத்திய நிலையம் விபத்துக்கள் காரணமாக வாய் மற்றும் முகம் தொடர்பான பாதிப்புக்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற வருபவர்கள் மத்தியில் 2014மற்றும் 2015வருடங்களில் ஆய்வொன்றை நடாத்தியது. இந்த ஆய்வில் இந்நாட்டில் இடம்பெறும் விபத்துக்களில் 60வீதமானவற்றிற்கு மோட்டார் பைசிகிள்களே காரணம் என்பதும், மோட்டார் பைசிகிள் விபத்துக்கள் காரணமாகவே முகமும் வாயும் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்தது.

அதிலும் தாடை எலும்புகளும், கன்ன எலும்புகளும் சிதைவடைவதற்கு மோட்டார் பைசிகிள் விபத்துக்களே காரணம் என்பதும் கண்டறியப்பட்டது. இதன்படி வீதி விபத்துக்களால் முகமும் வாயும் தான் அதிகம் பாதிக்கப்படுவது நன்கு தெளிவாகிறது.  

பொதுவாக விபத்துக்களை எடுத்து பார்த்தால் அவற்றால் பெரும்பாலும் பற்கள் நொருங்குவதும், அவை அமைவுற்று இருக்கும் கீழ் மற்றும் மேல் தாடை எலும்புகளும் கன்ன எலும்புகளும் நொருங்கி சிதைவடையும் அல்லது அவ்வெலும்புகள் முறிவடையும். ஆனால் விபத்துக்களால் சேதமடையும் பற்களையும் எலும்புகளையும் இலகுவாக சீரமைக்க முடியாது. அதற்கான சிகிச்சை செலவுகளும் மிக அதிகமாகும்.  

அதேநேரம் விபத்துக்களின் போது முகமும் பற்களும் பாதிக்கப்படுமாயின் அதன் காரணத்தினால் பலவிதப் பாதிப்புக்களும் ஏற்படும். குறிப்பாக பற்கள் சிதையுமாயின் உணவு உண்பதில் சிரமத்திற்கு முகம் கொடுக்க நேரிடும். அதேவேளை பற்கள் அமைவுற்று இருக்கும் கீழ் மற்றும் மேல் தாடை எலும்புகளோ அல்லது கன்ன எலும்புகளோ சேதமடையுமாயின் முகத்தின் இயல்பான தோற்றத்தில் வித்தியாசங்கள் ஏற்படும். அத்தோடு உணவு உண்பதிலும் சிரமங்கள் ஏற்படும். கண் பார்வையும் பாதிக்கப்படும். வாயை வழமை போன்று திறக்க முடியாத நிலைமை கூட ஏற்படலாம். இவற்றின் விளைவாக மன அழுத்தம் கூட எற்பட முடியும்.  

இதன் காரணத்தினால் தான் வீதி விபத்துக்களைத் தவிர்த்து கொள்வதிலும் அவற்றால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்வதிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

இதனடிப்படையில் தான் தலையை முழுமையாக மறைத்த தலைக்கவசமும், வாகனங்களில் பயணிப்போருக்கு சீட் பெல்ட்களும் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இதனைப் பெரும்பாலானவர்கள் தமக்கு ஒரு அழுத்தமாகவே பார்க்கின்றனர். அனேகர் பொலிஸாரைக் கண்டதும் தலைக் கவசம் அணிகின்றனர்.

சீட் பெல்ட்டை பாவிக்கின்றனர். இது தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ளும் நடவடிக்கையாகும்.  

ஆனால் முகம் மற்றும் வாயில்அமைவுற்று இருக்கும் என்புகளினதும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தான் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளன.

இதனை ஒவ்வொருவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயற்பட வேண்டும். அப்போது வீதி விபத்துக்களால் ஏற்படும் உபாதைகளையும் பாதிப்புகளையும் பெரிதும் குறைத்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அது உடல் உள ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை சேர்க்கும்.

அதனால் விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்வதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்தத் தவறக் கூடாது. 


Add new comment

Or log in with...