அரசியலுக்காக ஒற்றுமை, சகவாழ்வை சீர்குலைக்க இடமளிக்க முடியாது | தினகரன்

அரசியலுக்காக ஒற்றுமை, சகவாழ்வை சீர்குலைக்க இடமளிக்க முடியாது

அரசியல்  நிகழ்ச்சி நிரலின் கீழோ அல்லது இனவாதத்தின் மூலமோ இனங்களுக்கு இடையிலான  ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் நாசமாக்க இடமளிக்க கூடாதென பிரதமர்  கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட  பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் நாட்டின் அனைத்து மக்களும்  ஒன்றிணைந்திருந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட சிலரின் அரசியல் நிகழ்ச்சி  நிரலின் கீழ் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதச் செயற்பாடுகளால் நாட்டின்  ஒருமைப்பாடும், இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையும், சகவாழ்வும்  சீர்குலைந்துள்ளது என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற  உறுப்பினர்களுடன் நேற்று  பாராளுமன்ற கட்டத்தொகுதியில்  அமைந்துள்ள பிரதமரின் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே  அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர், தாக்குதல்களின் பின்னர் சிங்கள மக்கள்  ஒன்றாக இணைந்தனர். தமிழ்,முஸ்லிம் மக்களும் அவர்களுடன் ஒன்றிணைந்தனர். அந்த  ஒற்றுமையை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான வேலைத்திட்டங்களை நாங்கள்  ஆரம்பித்தோம்.

ஆனால், கடந்தவாரம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட  உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் தலைத்தூக்கிய இனவாதச் செயற்பாடுகளால்  முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை கூட்டாக இராஜனாமாச் செய்தனர். முஸ்லிம்  மக்கள் விலகிச் செல்வது நாட்டுக்கு நல்லதல்ல என்பதை புரிந்துகொள்ள  வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள்,  சூழ்ச்சிக்காரர்கள் மற்றும் சந்தே நகர்களை துரிதகதியில் கைது செய்யும்  முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது. பாதுகாப்புக் காரணங்களைக்காட்டி  அந்தச் செயற்பாட்டை சிலர் சீர்குலைத்திருந்தனர். குளியாப்பிடியில்  நடத்தப்பட்டது திட்டமிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களாகும். அதேபோன்று  கடந்தவாரம் இடம்பெற்ற போராட்டங்களும் அரசியல் ரீதியான இனவாதச்  செயற்பாடாகும்.

வர்த்தக நிலையங்களை மூடுமாறு பணித்தனர்.  உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மூலம் இனவாத மோதல்கள் கட்டமைக்கப்பட்டது.  இந்த இனவாதப் பிரச்சினைகளை மகாநாயக்க தேரர்கள் ஏற்படுத்தவில்லை. அரசியல்  இலாபத்திற்காக அரசியல்வாதிகளே இவ்வாறு இனவாத முரண்பாடுகளை ஏற்படுத்தினர்.

நாட்டில்  சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுதலை மற்றும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை  வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்வதை அவர்கள் விருப்பமில்லை. அரசியல் இலாபம்  தேடுவதே இவர்களின் இலக்காகவிருந்தது.

இந்த விடயத்தில் மகாநாயக்கத்  தேரர்கள் வெளியிட்டுள்ள கூட்டு அறிப்புடன் நான் முழுமையாக இணங்குகின்றேன்.  இனங்களுக்கு இடையில் பிளவு ஏற்படுவது மோசமான சூழ்நிலைக்கு ஈட்டுச்செல்லும்.  ஒன்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் நடந்துக்கொள்ள வேண்டும்.

மூவின மக்களும் ஒன்றிணைந்து  இலங்கையர்கள் என்ற தனித்துவ அடையாளத்தை உருவாக்குவதே  சிங்கள மக்களுக்கு  இருக்கும் சிறந்த பாதுகாப்பும் என்பதை சுதாரித்துக்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில்  பரந்துப்பட்ட கலந்துரையாடலை நடத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். மல்வத்து  மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர்களை சந்திக்கவும்  தீர்மானித்துள்ளோம். அனைவரும் மீண்டும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்றார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...