முதற்காலாண்டில் செலிங்கோ லைஃப் வருமானம் 7.2 பில்லியன் ரூபா | தினகரன்

முதற்காலாண்டில் செலிங்கோ லைஃப் வருமானம் 7.2 பில்லியன் ரூபா

ஆயுள் காப்புறுதி வணிகத்தில் ஏற்பட்ட திடமான வளர்ச்சி, முதலீட்டில் ஏற்பட்ட பலமான முன்னேற்றங்கள் ஆகியன, 2019ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.17 பில்லியன் ரூபாய் என்ற மொத்த வருமானத்தை ஈட்டிக்கொள்ள செலிங்கோ லைஃப் நிறுவனத்துக்கு வழிவகுத்துள்ளன. கடந்தாண்டின் முதல் 3 மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்நிலைமை 10.7 சதவீதம் என்ற ஆரோக்கியமான வளர்ச்சியாகும். 

மீளாய்வு செய்யப்பட்ட மூன்று மாதகாலத்தில் காப்புறுதி வருமானமானது 7 சதவீதத்தால் உயர்ந்து 4.276 பில்லியன் ரூபாயாகவும், முதலீட்டு வருமானமானது 16.4 சதவீதத்தால் உயர்ந்து 2.897 பில்லியன் ரூபாயாகவும் காணப்பட்டது என, காப்புறுதித்துறையின் முன்னோடியான செலிங்கோ லைஃப் தெரிவித்தது. நிகர வருமானமான 7.041 பில்லியன் ரூபாய், 10.7 சதவீத வளர்ச்சியை வெளிப்படுத்தியது. 

டிசெம்பர் 31, 2018இல் காணப்பட்ட மொத்தச் சொத்துகள் 9.512 பில்லியன் ரூபாயால் அல்லது 8 சதவீதத்தால் அதிகரித்து, மார்ச் 31, 2019இல் 127.571 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டதுடன், நிறுவனத்தின் ஆயுள் நிதியம் 1.33 பில்லியன் ரூபாயால் இந்த மூன்று மாதங்களில் வளர்ந்து 89.379 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்டது. 

செலிங்கோ லைஃப் நிறுவனமானது காப்புறுதிக் கோரிக்கைகளுக்காக நிகரத் தொகையாக 2.389 பில்லியன் ரூபாயை மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டில் செலுத்தியிருந்தது. இது, 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று ஆண்டுகளில் செலுத்தப்பட்ட 2.076 பில்லியன் ரூபாயோடு ஒப்பிடும் போது 15.1 சதவீத வளர்ச்சியாகும். 

இந்த மூன்று மாதங்களில், வரிக்கு முன்னரான இலாபமாக நிறுவனத்துக்கு 1.85 பில்லியன் ரூபாயும், நிகர இலாபமாக 1.363 பில்லியன் ரூபாயும் காணப்பட்டது. இதற்கு முன்னைய முதலாவது காலாண்டுடன் ஒப்பிடும் போது இது முறையே 38 சதவீதம், 52 சதவீதம் குறைவான நிலையாகும். 

இவ்வாண்டின் முதற்காலாண்டுக்காகப் பங்குதாரர்களுக்கான இலாபப் பரிமாற்றம் 1.1 பில்லியன் ரூபாயாக அமைந்தது என நிறுவனம் வெளிப்படுத்தியது. 

கடந்தாண்டின் முதலாவது காலாண்டில் செலுத்தப்பட்ட வருமான வரியான 169.9 மில்லியன் ரூபாய், மீளாய்வு செய்யப்பட்ட காலாண்டில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருந்து, 487.4 மில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், அக்காலப்பகுதிக்கான நிகர இலாபமானது பாதிக்கப்பட்டிருந்தது. குறித்த வரி அதிகரிப்பானது 317.5 மில்லியன் ரூபாய் அல்லது 186 சதவீத அதிகரிப்பாகும். கடந்தாண்டு ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்த புதிய வரிச் சட்டம் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டிருந்தது. 

'வரிச் சட்டங்கள், கணக்கீட்டுச் செயற்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களைப் புறக்கணிக்கும் போது, ஆண்டின் முதலாவது காலாண்டு, திடமான செயற்பாட்டு வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இது ஊக்கத்தைத் தரும் ஒன்றாகும்என, செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துஷார ரணசிங்க தெரிவித்தார்.     


Add new comment

Or log in with...