வில்பத்து காடழிப்பு வழக்கு; ஜூலை 31இல் மீள் விசாரணை | தினகரன்

வில்பத்து காடழிப்பு வழக்கு; ஜூலை 31இல் மீள் விசாரணை

புதிய நீதிபதிகள் குழாமிடம் வழக்கு ஒப்படைப்பு

வில்பத்து தேசிய சரணாலயம் அழிக்கப்பட்டமை தொடர்பான வழக்கு மீண்டும் ஜூலை 31 ஆம் திகதி புதிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதுவரை இந்த வழக்கை விசாரணை செய்து வந்த நீதிபதி மஹிந்த சமயவர்தன இவ்வழக்கு தொடர்பில் தீர்ப்பொன்றை முன்வைக்காமல் சமயோசிதமாக விலகியதையடுத்து இவ்வழக்கு புதிய நீதிபதிகள் குழாமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான ஜனக் டி சில்வா மற்றும் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்குட்படுத்தி தீர்ப்பு வழங்கவுள்ளனர்.

வில்பத்து தேசிய சரணாலயம் அழிக்கப்பட்டு அங்கு வீடமைப்புத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் ரிட் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது. இதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தீர்ப்பை இவ்வருடம் ஓகஸ்ட் 06 ஆம் திகதி அறிவிப்பதாக நீதிபதி மஹிந்த சமயவர்தன கூறியிருந்தார்.

இந்த ரிட் வழக்கில், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பாதுகாவலர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனவிலங்குத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், காணி ஆணையாளர் நாயகம், தொல்லியல் திணைக்கள ஆணையாளர் நாயகம், மன்னார் மாவட்ட செயலாளர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன், சுற்றாடல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் சட்ட மாஅதிபர் ஆகியோர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வில்பத்து சரணாலயத்தின் சுமார் 2000 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டு, காணிகளாக பிரிக்கப்பட்டு, வீதிகள் அமைக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டதன் மூலம் சுற்றாடலுக்கும் இயற்கை உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சரணாலயத்துக்கு சொந்தமான மடு, பெரியமடு, சன்னார் ஆகிய பகுதிகளிலும் சுமார் 1000 ஹெக்டயர் காணி அழிக்கப்பட்டிருப்பதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி கானகம், மடு வீதி ஆகிய இடங்களிலும் சட்டவிரோத குடியேற்றங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளூர் இடம்பெயர்ந்தவர்களை இப்பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றியிருப்பதாகவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி ரவீந்திரநாத் தபார் ,நிர்மல் விக்கிரமசிங்க ஆகியோரும் சட்ட மாஅதிபர் சார்பில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர ஜயசிங்கவும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.


Add new comment

Or log in with...