புதிய தொழில்நுட்பப் போர் | தினகரன்

புதிய தொழில்நுட்பப் போர்

எதிர்கால ஹுவாவி வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. யூடியுப், ஜிமெயில், கூகுள் மெப்ஸ் போன்ற முக்கிய செயலிகள் இல்லாத கைபேசி என்பது கல்தோன்றா காலத்து கைபேசி என்று உலகம் நினைக்கும் நேரத்தில் ஹுவாவி அதனை எப்படிச்

சமாளிக்கப்போகிறது?

கடந்த 30ஆண்டுகளுக்குள் ஹுவாவி எட்டிய உச்சம் அமெரிக்கா அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு வானை முட்டுகிறது. இன்றைய தேதியில் சீனாவைச் சேர்ந்த மிக வெற்றிகரமான சர்வதேச வர்த்தகக் குறியீடு ஹுவாவிதான்.  

ஹுவாவியின் ஸ்மார்ட் போர்ன், ஆப்பிளின் ஐபோனை விடவும் அதிக பிரபலம். அதன் விற்பனை வேகம் சம்சுங்கை விடவும் அதிகம். அடுத்த ஆண்டில் சம்சுங்கை பின்தள்ளி உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போனாக வருவதற்கு ஹுவாவி திட்டமிட்டிருப்பதற்கான சூழல் சாதகமாகவே இருந்தது. 

மறுபக்கம் உலகின் தொலைத்தொடர்பு வழங்குநர்களில் ஹுவாவியை மிஞ்ச ஆளில்லை. அதன் அடுத்த தலைமுறை அதிவேக 5ஜி வயர்லஸ் வலையமைப்புக்கு முன்னால் யாருக்கும் கிட்டவும் நெருங்க முடியாது.  

எனவே, அமெரிக்கா வயிற்றெரிச்சல் படுவது நியாயமானதுதான். வர்த்தகம் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் பற்றிய அமெரிக்காவின் போரில் அதன் முதல் எதிராளி ஹுவாவியாகத்தான் இருக்க முடியும். 

ஓர் ஆண்டுக்கு மேலாக பரஸ்பரம் வரிகள் விதித்து அமெரிக்காவும் சீனாவும் பிடிக்கும் வர்த்தகப் போரில் ஹுவாவி இடையில் மாட்டிக்கொண்டிருக்கிறது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹுவாவி மீது ஏற்றுமதி தடையை விதித்தது. அதாவது, அனுமதி இன்றி ஹுவாவிக்கு அமெரிக்க நிறுவனங்களால் எந்த உபகரணங்கள் மற்றும் மென்பொருட்களையும் விற்க முடியாது. இதனால் கூகுள் தனது ஆண்ட்ரொய்ட் இயங்குதள உரிமம் வழங்குவது அதேபோன்று செயலிகள் மற்றும் சேவைகளை வழங்குவதை நிறுத்திக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள ஹுவாவி கைபேசிகளுக்கு இது பொருந்தாது என்பது உலக வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் செய்தி.  

ஆனால், எதிர்கால ஹுவாவி வர்த்தகம் எப்படி இருக்கும் என்பது பெரும் கேள்வியாக இருக்கிறது. யூடியுப், ஜிமெயில், கூகுள் மெப்ஸ் போன்ற முக்கிய செயலிகள் இல்லாத கைபேசி என்பது கல்தோன்றா காலத்து கைபேசி என்று உலகம் நினைக்கும் நேரத்தில் ஹுவாவி அதனை எப்படிச் சமாளிக்கப்போகிறது? 

சீன அரசுடன் நெருங்கிப் பழகுவதுதான் ஹுவாவி மீது அமெரிக்காவுக்கு இருக்கும் கோபத்திற்குக் காரணம். ஹுவாவி உபகரணங்கள் மூலம் சீனா உளவு பார்க்கக் கூடும் என்று அமெரிக்கா பயப்படுகிறது. உண்மையில் இந்தப் பயம் அனுபவம் சார்ந்தது. கடந்த காலங்களில் மைக்ரோசொப்ட் போன்ற தனது நாட்டு நிறுவனங்களின் சாதனங்களை அமெரிக்கா உளவு வேலைக்கு பயன்படுத்தியது அம்பலத்திற்கு வந்திருந்தது. 

அதே வேலையை சீனா செய்யும் என்று அமெரிக்கா உலகெல்லாம் எச்சரிக்கிறது. இது அபத்தமான குற்றச்சாட்டு என்று ஹுவாவி வாய் கிழிய கூறிவந்தாலும் அமெரிக்கா கேட்கவா போகிறது. இதனாலேயே 2012ஆம் ஆண்டு ஹுவாவி வலையமைப்பு உபகரணங்களை பயன்படுத்த அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  

ஆனால் கடந்த ஒருசில மாதங்களில் ஹுவாவி மீதான அமெரிக்காவின் கோபம் உச்சத்தில் இருந்தது. கடந்த டிசம்பர் முதலாம் திகதி ஹுவாவி நிறுவனர் ரென் செங்பிய்யின் மகள் மெங் வென்சுவை அமெரிக்கா கேட்டதன்படி கனடா கைது செய்தது. தடையை மீறி அமெரிக்காவுடன் வர்த்தகம், நிதி மோசடிகள் என்று பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.  

ஹுவாவியின் 5ஜி தொழில்நுட்பத்தை வாங்க வேண்டாம் என்று ஆரம்பத்தில் உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்ட டிரம்ப் இப்போதெல்லாம் எச்சரிக்கை விடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் மேற்கத்தேய நாடுகள் ஹுவாவியோடு உறவாடுவதில் சற்று தயக்கம் காட்டி வருகிறது.  

தன்னிடம் போட்டிபோட முடியாததால் தோல்வியடைந்தவன் போல் அமெரிக்கா நடந்து கொள்வதாகக் கூட ஹுவாவி திட்டியது அதன் கோபத்தின் உச்சம்.  

1980களில் மலிவான தொலைபேசி சுவிட்ச்களை விற்பனை செய்வதன் மூலம் தனது தொழிலை ஆரம்பித்த ஹுவாவி, 1990களில் கைபேசிகள் விற்பனையை சீனாவுக்குள் ஆரம்பித்தது. 2000ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் புரட்சியின்போது அதன் திசையே மாறியது. ஐரோப்பாவுக்குக் கூட கைபேசி ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தது.  

இன்று ஹுவாவி இரண்டாவது மிகப்பெரிய கைபேசி உற்பத்தி நிறுவனம். குறைந்த விலையில் உயர் தர கெமரா மற்றும் பல அம்சங்களைக் கொண்டது.  

2018ஆம் ஆண்டு ஆப்பிளை பின்தள்ளிய ஹுவாவி, சம்சுங்கை எட்டிப்பிடிக்கும் தூரத்தில் இருக்கிறது. இந்த ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சம்சுங் 72மில்லியன் கைபேசிகளை ஏற்றுமதி செய்ததோடு ஹுவாவி 59மில்லியன் மற்றும் ஆப்பிள் 40மில்லியன்களை விற்றிருக்கிறது. ஒப்பீட்டளவில் ஹுவாவி விற்கும் வேகம் அதிகம்.  

ஹுவாவி மீது பாதுகாப்பு, புலமைச்சொத்து திருட்டு, தடைகளை மீறியது, நிதி மோசடி என்று அமெரிக்கா ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியபோதும் இவைகளுக்கு அப்பால் ஹுவாவியின் தொழில்நுட்ப வளர்ச்சி அமெரிக்காவுக்கு பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு பெரும் போட்டியானது.  

அதன் 5ஜி தொழில்நுட்பத்திற்கு நிகராக வேறு எந்த நிறுவனமும் இல்லை. சீனாவின் பின்தங்கிய பகுதிகளுக்கு முக்கிய தொலைபேசி சேவையை வழங்கவும் தனக்கு சொந்தமாக தொழில்நுட்பத்தை கட்டி எழுப்பவும் ஹுவாவி ஒருகாலத்தில் போராடியது என்பது உண்மைதான். ஆனால் இன்று உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு உற்பத்தியாளராகவும் அடுத்த தலை முறை மொபைல் வலையமைப்பின் முன்னணியாளராகவும் ஹுவாவி மாறிவிட்டது.  

ஹுவாவியின் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளில் 25ஐரோப்பிய நாடுகள் மற்றும் 10மத்திய கிழக்கு நாடுகள் இருக்கின்றன. என்றாலும் அமெரிக்கா பக்கமாக தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது ஹுவாவிக்கு தீர்க்கமான ஒன்று. 

ஹுவாவி அண்மைக்காலத்தில் தனது கைபேசிகளில் ஆப் ஸ்டோர் உட்பட சொந்தமான சேவைகளை வழங்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அந்த நிறுவனத்தின் சிக்கலான வலையமைப்பை வழங்கும் முயற்சி அதிகம் வெற்றி அளிக்கவில்லை.  

கூகுள் கொடுத்திருக்கும் இப்போதைய நெருக்கடி ஹுவாவியின் சீனா வாடிக்கையாளர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது. ஏனென்றால் அங்கு ஏற்கனவே கூகுளின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை இருக்கிறது. ஆனால் வெளிச் சந்தையில் அது பெரும் தாக்கம் செலுத்தும்.  

ஆண்ட்ரோயிட்டை தவிர்த்து உலகை எதிர்கொள்வது அத்தனை இலகுவானதல்ல. நொக்கியா, பிளக்பெர்ரி, சம்சுங் எல்லாம் முயற்சித்துப் பார்த்து தோல்வியடைந்து விட்டன.  

தென் கொரிய நிறுவனமான சம்சுங் கெலக்சி ஆப்பை தந்தாலும் அதன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கூகுள் பிளேயைத் தான் பயன்படுத்துகின்றனர்.  

ஹுவாவிக்கு தனது தொழில்நுட்பத்தை விற்க கூகுள் அனுமதி பெறாவிட்டால் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் ஹுவாவி அறிமுகப்படுத்தவிருக்கும் புதிய வடிவங்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். அதாவது ஹுவாவியின் புதிய கைபேசிகள் கூகுள் சேவை நிறுத்தப்பட்டு வேறு ஆப்களை தளமாகக் கொண்டு இயங்க வேண்டி இருக்கும். அங்கே கூகுள் மெப் போன்ற வசதிகள் இருக்காது.  

எனவே, ஹுவாவியின் எதிர்காலம் என்பது அதன் தீர்க்கமான புதுப்பயணம் அல்லது அரசியல் திருப்பங்களிலேயே தங்கியிருக்கிறது. தனது இருப்புக்காக எதனையும் செய்யும் போராட்ட குணமே ஹுவாவி எல்லாவற்றையும் பின்தள்ளி இத்தனை உச்சத்திற்கு வரக் காரணமாகி இருக்கிறது. அதன் எதிர்காலம் கூட அப்படித்தான் இருக்கும்.

எஸ். பிர்தெளஸ்


Add new comment

Or log in with...