எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரிழப்பு | தினகரன்

எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் பலர் உயிரிழப்பு

எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் சிகரத்தை அடைய முயற்சி செய்தோரில் உயிரிழந்தவர் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

இம்முறை எவரெஸ்ட் உச்சியில் ஏறும் முயற்சியில் உயிர்நீத்த ஒருவர் பிரிட்டனைச் சேர்ந்த ரொபின் ஹெய்ன்ஸ் பிஷர் ஆவார். 41 வயதான அந்த ஆடவர், வெற்றிகரமாக மலை உச்சியை அடைந்த பின்னர் திரும்பும் வேளையில் பிராணவாயு அதிகமில்லாத பகுதியில் உயிரிழந்தார்.

நேபாளத்திலிருந்து இமயமலையில் ஏறும் தற்போதைய பருவத்தில் உயிரிழந்த 18ஆவது நபர் பிஷர் ஆவார்.

சோர்வு, உடல் தளர்ச்சி, உச்சியிலிருக்கும் கூட்டத்தினால் ஏற்படும் நெரிசல் ஆகியவை பெரும்பாலான மரணங்களுக்குக் காரணம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பாலானோர் போதிய பயிற்சி பெறாதவர்கள் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

திபேத் வழியாகவும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறமுடியும். அந்தப் பாதையிலும் இந்தப் பருவத்தில் சிலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவரெஸ்ட் மலை ஏறுவதற்கு சாதனை எண்ணிக்கையாக 381 பேருக்கு அனுமதி அளித்திருப்பது குறித்து நேபாளம் மீது விமர்சனம் எழுந்துள்ளது. இவ்வாறு அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு தலா 11,000 டொலர்கள் அறவிடப்படுகிறது.

மலை உச்சிக்கு அருகில் அதிக நெரிசல் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

இந்தப் பருவம் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதால், எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சிப்பவர்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. முக்கியமாக, எவரெஸ்ட் சிகரத்தின் ‘மரணப் பகுதி’யில் மலையேற்ற வீரர்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போதிய பிராணவாயு கைவசம் இல்லாததால், பல மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.


Add new comment

Or log in with...