ஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல் | தினகரன்

ஈரானின் அச்சுறுத்தல்: சவூதிக்கு 8 பில். டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல்

ஈரானின் அச்சுறுத்தலை காரணம் காட்டி சவூதி அரேபியாவுக்கு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

பெடரல் சட்டத்தின் மிக அரிதாக பயன்படுத்தும் அம்சம் ஒன்றை கொண்டே, அமெரிக்க கொங்கிரஸை மீறி 8 பில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்க டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரானுடனான தற்போதைய பதற்ற சூழலை ஒரு தேசிய அவசர நிலையாகவும் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த ஆயுதங்கள் சவூதி தலைமையிலான கூட்டணி மூலம் யெமன் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சும் தரப்புகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கோபத்தை வெளியிட்டுள்ளன.

துல்லியமான வழிகாட்டி குண்டுகள் உட்பட இந்த ஆயுதங்களை விற்பதற்கு கொங்கிரஸ் கடுமையாக எதிர்ப்பதாலேயே கொங்கிரஸை மீறி ஜனாதிபதி செயற்பட்டிருப்பதாக சில ஜனநாயக கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஜோர்தான் நாடுகளுக்கும் ஆயுதங்கள் விற்கப்படவுள்ளன.

யெமன் யுத்தத்தில் சவூதியின் செயற்பாடுகள் தொடர்பில் அந்நாட்டின் மனித உரிமை பதிவுகள் பற்றியும் இஸ்தன்பூலில் சவூதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலை தொடர்பிலும் அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்கள் சவூதி மீது கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். ஆயுதங்கள் விற்கும் முடிவு பற்றி இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கொங்கிரஸை கடந்த வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினர். அவர் எழுதிய கடிதத்தில், “ஈரானின் தீய நடவடிக்கைகள்” இந்த ஆயுதங்களை அவசரமாக விற்கக் காரணமானதாக குறிப்பிட்டுள்ளார்.

“(ஈரானின்) செயற்பாடுகள் மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மை மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அமெரிக்க பாதுகாப்பிற்கு அடிப்படையான அச்சுறுத்தலாக உள்ளது” என்று அவர் எழுதிய கடிதத்தில் குறிப்படப்பட்டுள்ளது. இதனிடையே 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் கூறி உள்ளார். மேலும் அவர் போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்பப்படவிருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால், இவை குறைந்த அளவிலான படைகளே என்று ட்ரம்ப் கூறினார்.

எண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக ஈரானை குற்றஞ்சாட்டி வருகின்றனர். மர்மமான குண்டுகள் வெடித்ததில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் சேதமாகின.


Add new comment

Or log in with...