தாய்லாந்து சுற்றுலா பயணிகள் வருகை நம்பிக்கையளிக்கிறது | தினகரன்

தாய்லாந்து சுற்றுலா பயணிகள் வருகை நம்பிக்கையளிக்கிறது

சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதம் காலம் நிறைவடைந்த நிலையில், மகேயொங் மடாலய தலைமை குரு பார பவனஹேமக்கும் தலைமையில் தாய்லாந்தை சேர்ந்த 80 சுற்றுலாப் பயணிகள் மே மாதம் 21ஆம் திகதி இலங்கையை வந்தடைந்தனர். ஆன்மீக மற்றும் கலாச்சார சுற்றுலாவை மேற்கொண்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தவர்களை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியக அதிகாரிகள் வரவேற்றனர். 

கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும் புறநகரங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் பின்னர், இப்படியான சுற்றுலா குழுவினர் வருகை தந்தது இதுவே முதல் முறையாகும். சம்பவத்தின் பின்னர் பயண ஒழுங்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையிலும், இவர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தியதுடன், இலங்கை மற்றும் சுற்றுலாத்துறை மீண்டும் பழைய நிலைமைக்கு வருவதற்கான தன்மை ஏற்படுத்துவதற்கான வாழ்த்தினை வெளிப்படுத்தினர். 

இந்த பௌத்த குழுவினருக்கு தலைமை தாங்கியவர் தாய்லாந்து ராச்சியத்தில் உள்ள மகேயொங் மடாலய தலைமை குருவான வணக்கத்திற்குரிய பார பவனஹேமக்கும் ஆவர். அவருடன் மேலும் ஐந்து சீடர்கள் மற்றும் டேயேற்கி குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் 70 பேரும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.  

இவர்களின் விஜயம் குறித்து, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கிஷ_ கோமஸ் குறிப்பிடுகையில்,  

“பௌத்த மதத்தையும் கலாச்சாரத்தையும் கொண்ட பௌத்த நாடான இலங்கைக்கு மடாலய தலைமை குரு வணக்கத்திற்கு உரிய பார பவனஹேமக்கும் தலைமையில் பல பௌத்த குருமார் உட்பட மிகப்பெரிய குழுவுடன் இலங்கைக்கு இந்த தருணத்தில் வருகை தந்துள்ளமை வரவேற்கப்பட வேண்டிய செயலாகும்.

இதன் மூலம் வெளி உலகத்திற்கு இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக பௌத்த சுற்றுலாத்துறை வளர்ச்சியை அடைந்து வருகின்றது. இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் தவிர்ந்து மேற்குலக நாடுகளை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் பௌத்த தத்துவம் மற்றும் தியானம் போன்றவற்றை கற்கும் நோக்கில் இலங்கை வருகின்றனர்” என்றார்.  

களனி மாபிமவில் உள்ள தாய்லாந்து விகாரைக்கு புத்த பெருமானின் சிலை ஒன்றினை அன்பளிப்பு செய்யும் மங்களகரமான நிகழ்விலும் இந்த குழுவினர் பங்கு கொண்டனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கிஷ_ கோமஸ் மற்றும் பேர்ணாட் டுவர்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உட்பட SLTPB யை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கு கொண்டனர்.     


Add new comment

Or log in with...