சமூகங்களை ஒன்றிணைத்தால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும் | தினகரன்

சமூகங்களை ஒன்றிணைத்தால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியும்

ஈஸ்டர் தினத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையும், அதற்குப் பின்னர் குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களையும் வன்மையாகக் கண்டிப்பதாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா கிளை தலைவர் அஷ்-ஷெய்க் பி.ஏ.எஸ் சுபியான் தெரிவித்தார். 

யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் ஊடகவியலாளர் மாநாடு மானிப்பாய்  வீதியில் அமைந்துள்ள மொஹிதீன் ஜும்மா பள்ளிவாசலில் சனிக்கிழமை (25)  நடைபெற்றது. இதில் அவர் தெரிவித்ததாவது,  நாட்டில் சாந்தி, சமாதானத்தை ஏற்படுத்த சகல இனத்தவரும் ஒன்றிணைய வேண்டும். சமூகங்க ளுக்கு மத்தியில் உறவை ஏற்படுத்துவதில் ஊடகங்களுப் பிரதான பங்குள்ளன.

தென்னிலங்கையிலுள்ள சில ஊடகங்கள் சமூக விரிசலை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிடுவதும், ஒரு சில தமிழ் ஊடகங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களை பயங்கரவாதத்துடன் இணைத்துச் செய்திகளை வெளியிடுவதும் சமூக உறவுகளை ஏற்படுத்துவதில் பெரும் தடையாகவுள்ளன. ஒஸ்மானியா கல்லூரி வீதி / ஆசாத் வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பில் வர்த்தகம் செய்யும் ஒருவரின்  வீட்டில் காணப்பட்ட நிலக்கீழ் அறை தொடர்பில் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியிருந்தன. உண்மையில் அவ்வீட்டின் உரிமையாளர்  2014 இல் அந்த வீட்டைக் கொள்வனவு செய்ததாகவும் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகாலத்தில் பாதுகாப்புக்கருதி அந்தப் பதுங்கு குழி அமைக்கப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பில் தான், கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலக்கீழ் அறை தொடர்பில் வழக்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இவ்வாறான செய்திகளுடாக சமூகங்களைப் பிரிக்காது பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க சகல சமூகங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

(புங்குடுதீவு குறுப் நிருபர்) 


Add new comment

Or log in with...