முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் | தினகரன்

முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்

விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதில்லை

மட்டு. பேராயர் வண. ஜோசப் பொன்னையா ஆண்டகை

விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போனதாக சரித்திரங்களேதுமில்லை, முஸ்லிம்கள் தங்களில் ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க வேண்டும். சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் அடம்பிடிக்கும் குணங்களை, மனோபாவத்தை தவிர்க்க  வேண்டுமென  மட்டு பேராயர் வண. ஜோசப் பொன்னையா ஆண்டகை  தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது,

மன்னிப்பது, மறப்பது, சகிப்பது, விட்டுக் கொடுப்பது என்பவைகளை கிறிஸ்தவம் மிக ஆளமாக கூறுகிறது. மற்றைய மதங்களும் இவைகளை வற்புறுத்தியுள்ளதை நாம் அறிந்திருக்கிறோம்.

இந்த நாட்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களும் மக்களுக்கு தாங்க முடியாத வலியைச் சுமக்கவைத்துள்ளது.

அதனோடு தொடர்புடைய புலனாய்வுப் பணிகள் இடைவிடாது தொடர்கின்றன. இவை இந்த நாட்டின் உச்ச அந்தஸ்தில் இருந்த முஸ்லிம்களுக்கு அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படத்திவிட்டது. இதற்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் காரணகர்த்தாக்கள் அல்ல. குற்றத்தை ஏற்படுத்தியவர்கள் முஸ்லிம்களின் ஒரு பகுதியினர் என்றே கூறமுடியும். அதற்காக எல்லோரையும் பழிவாங்கவோ தண்டனைக்குட்படுத்தவோ கூடாது.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை எந்த வொரு முஸ்லிமும் இதனால் பாதிக்கப்படவோ, பழிவாங்கப்படவோ, இம்சிக்கப்படவோயில்லை. நாம் எல்லோரும் நம் தேசத்தை காக்கவும், நேசிக்கவும் வேண்டும். நம்நாட்டுக்கு ”தேசத் துரோகச் செயல்களை” செய்துவிடக் கூடாது.

நம் தேசத்தின் சட்டதிட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் பணிந்து போக வேண்டும். அதற்கு மாறாக நடப்பவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுவர். அப்படியானவர்களுக்கு துணைபோவதும் பக்கபலமாயிருப்பதும் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை மறைப்பதும் குற்றச் செயல்களாகும்.

சட்டம் காற்றிலும் வேகமானது, அது களத்திலும்பாயும் விண்ணிலும் பாயும். இதை உணர்ந்து நமது பிரஜைகள் செயற்பட வேண்டும். நம்மால் நம் சமூகத்திற்கு களங்கமேதும் வராமல் பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்கள் தங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் அடம்பிடிக்கும் குணங்களை, மனோபாவத்தை தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறேன், வேண்டிக் கொள்கிறேன். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை அன்போடு அரவணைக்க வேண்டுமென ஆலோசனை கூறிவருகிறேன்.

(புளியந்தீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...