அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் 64 மருந்துகளுக்கான விலைகளில் மாற்றம் | தினகரன்

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் 64 மருந்துகளுக்கான விலைகளில் மாற்றம்

அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்ததைத் தொடர்ந்தே 64மருந்துப் பொருட்களுக்கான விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

2016ஆம் ஆண்டு மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் 73மருந்துப் பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டன. 100  -ற்கு 200வீதத்திலிருந்து 800வீதம் வரை விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளன.  

2018ஆம் ஆண்டு அமெரிக்க டொலரின் விலை அதிகரித்த நிலையில்   ஐந்து வீதம் மருந்துப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. இம்முறை அமெரிக்க டொலரின் பெறுமதி 183ரூபாவாக அதிகரித்துள்ள நிலையில் 64மருந்துப்பொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும்   14வீதமான அதிகரிப்பே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

மருந்துப் பொருட்களின் நிறுவனங்கள் இதற்கு முன்னர் பெற்றுக்கொண்ட வருமானம் பிபிலே மருந்து கொள்கைக்கு இணங்க மருந்துகளின் விலைகளை குறைப்பதனூடாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கிணங்க உற்பத்தி விலையிலிருந்து சிறியளவு இலாபமொன்றே பெறப்பட்டுவருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் விலைகள் தொடர்பான விலைப்பட்டியல் சகல ஒசுசல மருந்தகங்கள் மற்றும் ஏனைய மருந்தககங்களிலும் காட்சிப்படுத்துவது அவசியமென்றும் பரிசோதனை அதிகாரிகள் இது தொடர்பான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சேனக்க பிபிலே மருந்துக்கொள்கைக்கிணங்க 2016ஆம் ஆண்டு 48மருந்துகளுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது.

இருதய நோய், நீரிழிவு நோய், கொலஸ்ட்ரோல் உட்பட முக்கியமான மருந்துகள் இதன்போது விலைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய விலைத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேசிய மருந்துப் பொருட்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...