இந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை | தினகரன்

இந்தியா இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் 15பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ள போதிலும் அது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை என்று இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

தற்கொலை தாக்குதல் நடைபெற்றது முதல் இலங்கையின் கடல்வழி பாதுகாப்பு திட்டமிட்ட அடிப்படையில் மேலும் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கடற்படைத் தளங்களும் இது தொடர்பில் அறியப்படுத்தப்பட்டுள்ளதுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

இலங்கையிலிருந்து இந்தியாவின் லக்ஷதீப் தீவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் 15பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே நாங்கள் அறிந்தோம். எனினும் இது தொடர்பில்  சம்பந்தப்பட்ட தரப்பினர் மூலம் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கப் பெறவில்லை. என்றாலும் அந்த தகவலை நாம் தட்டிக்களிக்காமல் உறுதிப்படுத்தப்படாத உத்தியோகபற்றற்ற தகவலாக கருத்திற் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

நாடு முழுவதிலும் உள்ள கடற்படை தளங்களுக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.மேற்படி தகவல் தொடர்பில் ஏதாவது தெரிய வரும்பட்சத்தில் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதிலும் கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

(ஸாதிக் ஷிஹான்)


Add new comment

Or log in with...