Tuesday, April 16, 2024
Home » இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய யாப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய யாப்பு

by damith
January 9, 2024 7:00 am 0 comment

இ.போ.சபைக்கு நிலையான புதிய யாப்பு அறிமுகப்படுத்தப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துலகுணவர்தன தெரிவித்தார்.

போக்குவரத்து சபையின் 66வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மதவாச்சி பிராந்திய வேலைத்தளத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

“மகிந்த தேரர் வருகையுடன், நாட்டின் மாற்றம் வரலாற்று தலைநகரான ரஜரட்டயில் ஆரம்பமானது. அந்த வரலாற்றின் தனித்துவமான சகாப்தமொன்று 1956 இல் தொடங்கியது. அந்நேரத்தில், இரண்டு முக்கிய பொருளாதார அமைப்புகள் உலகில் இயங்கின, சந்தை முதலாளித்துவ பொருளாதார அமைப்பு மற்றும் மத்திய திட்டமிடப்பட்ட சோசலிச பொருளாதார முறை என்பனவே அவையாகும்.

அதன்வழி சென்று பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை தனியார் துறையை விட சிறந்த பொது சேவைகளை வழங்குவதற்காக ஜனசது சேவா அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அந்த யுகத்தில் பாரிய பணியாற்றிய ரஜரட்டயில் உதித்த மைத்திரிபால சேனநாயக்க போக்குவரத்து துறை அமைச்சராக மேற்கொண்ட பணியை நாம் அனைவரும் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

அவரை கௌரவப்படுத்தும் முகமாக மதவாச்சி வேலைத்தளம் “மைத்திரிபால சேனாநாயக்க பொறியியல் உற்பத்தி தொழிற்சாலை” என பெயர் மாற்றப்பட்டு முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக மாற்றப்படும்.

அரச சேவையில் அதியுயர் அனுபவமுள்ள அதிகாரியான தற்போதைய தலைவரிடம் இந்த நிறுவனத்தை புனரமைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி நீண்டகாலமாக நிலவி வரும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பணி இதன் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றுக்கு முறையான சேவை யாப்பை தயாரிப்பதில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, இன்னும் சில பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதனை நிறைவு செய்வதன் மூலம் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் சேவை யாப்பை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இதன்படி அமைச்சர்கள், அரசாங்கங்கள் மாறினாலும் மாறாத சேவை யாப்பை மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்.முன்மாதிரியான பணிகளைச் செய்வதன் மூலம், 2024 ஆம் ஆண்டை ஒரு முன்மாதிரியான நிறுவனமாக இ.போ.ச.வை மாற்ற நிறுவனத்தில் உள்ள அனைவரும் பாடுபட வேண்டும். கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல டிப்போக்களுக்கும் ஐந்நூறு புதிய பஸ்கள் வழங்கப்பட்டன. இதேபோன்று இவ்வாண்டும் ஆயிரம் புதிய பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி மற்றும் ஊழலைத் தடுக்கும் வகையில் இ-–டிக்கெட் திட்டத்தை அடுத்த சில மாதங்களில் தொடங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT