Home » அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பேத்தாழை பொதுநூலகம்

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற பேத்தாழை பொதுநூலகம்

by damith
January 9, 2024 9:09 am 0 comment

இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால், ஒக்டோபர் மாதமானது தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரை பொதுநூலகங்களில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவது வழக்கம்.

அவ்வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வாசிப்பு மாதத்தில் சிறப்பாக செயற்பட்ட பொதுநூலகங்கள், பாடசாலை நூலகங்கள், விசேட நூலகங்கள் போன்றவவை ஒவ்வொரு வகையின் கீழ் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்டு நூலகங்களுக்கு வருடந்தோறும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றது.

அவ்வகையில் ‘அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு’ எனும் தொனிப்பொருளில் நடத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியாக மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றிருந்தது.

இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற தரம்-2 நூலகமான பேத்தாழை பொது நூலகமானது பிரதேச சபைகளின் கீழ் இயங்குகின்ற பொது நூலகங்களில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்திற்கான விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன், தேவபுரம் பொதுநூலகமும் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டமைக்காக சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

பேத்தாழை பொதுநூலகமானது, கடந்த 2011ஆம் வருடம் டிசம்பர்-10ஆம் திகதி அப்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நூலகத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு வருடமும் புத்தகங்களையும் தேவையான பௌதீக, தொழினுட்ப வளங்களையும் பெற்றுக் கொடுத்து நூலகத்தினை உருவாக்கியதோடு விட்டு விடாமல் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அனைத்துப் பணிகளையும் அவர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அவரால் உருவாக்கப்பட்ட பேத்தாழை பொதுநூலகமானது இலங்கையில் இயங்குகின்ற பொதுநூலகங்களுள் நவீன தொழினுட்ப வசதிக் கட்டைமைப்புகள் கொண்டதாகவும், 20ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல் ஆவணங்களைக் கொண்டதாகவும் விளங்குகின்றது. தனியான சிறுவர் பகுதி, இரவல்பகுதி, உசாத்துணைப் பகுதி, பத்திரிகை சஞ்சிகைப் பகுதி, கணினிப் பகுதி, விபுலம் ஆவணக்காப்பகம் எனப் பல்வேறு கட்டமைப்புக்களுடன் விளங்கும் பேத்தாழை பொதுநூலகத்தின் நூலகப் பொறுப்பாளராக தற்பொழுது மரகதம் பிரகாஷ் பணிபுரிந்து வருகின்றார். இவரின் கீழ் இன்னும் 05 நூலக உத்தியோகத்தர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஹொகா நூலக முகாமைத்துவ மென்பொருள் மூலம் நூலகத்தின் இரவல் சேவை மற்றும் நூலக தன்னியக்க தகவல் சேவை போன்றவற்றினை இலங்கை பொதுநூலக வரலாற்றில் முதன் முதலாக நடைமுறைப்படுத்தி தொடர்ந்து இயங்கி வரும் இந்நூலகம் கடந்த 2021ஆம் வருடம் பத்தாவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடியதுடன் ‘வல்லகி’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டுள்ளது.

அத்துடன் பேத்தாழை பொதுநூலகத்தின் மிக முக்கியமான சிறப்பானதொரு பணியாக கடந்த 03 வருடங்களாக ‘நிலா முற்றம்’ எனும் கலை, இலக்கியக் கருத்தாடல் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று நிலாவொளி படரும் நூலக முற்றத்தில் கலை, இலக்கியப் படைப்பாளிகளும் வாசகர்களும் சங்கமிக்கின்ற அருமையானதொரு நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

கடந்த நவம்பர் மாதத்துடன் சேர்த்து 33ஆவது நிலாமுற்ற நிகழ்வுகள் இங்கு நடந்தேறி உள்ளன. உள்ளுர் எழுத்தாளர்கள் முதல் உலகத்தமிழ் எழுத்தாளர்கள் பலரது நூல்கள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டு அவைபற்றிய கருத்தாடல்கள் பகிரப்படுவதுடன், இலைமறை காயாக விளங்குகின்ற பிரதேசப்படைப்பாளிகளைப் பற்றி தேடிக் கண்டுபிடித்து அவர்களைப் பற்றியும் அவர்களது படைப்புக்கள் பற்றியும் இந்நிகழ்வில் பேசப்படுகின்றது.

பேத்தாழை பொது நூலகத்தின் விபுலானந்தர் வாசகர் வட்டமும், நூலகமும் இணைந்து நடத்தி வருகின்ற இந்நிகழ்வானது இதுவரை பல பிரதேசப்படைப்பாளிகளை வெளியுலகிற்கு அறிமுகம் செய்துள்ளதுடன், பல வெளியூர், வெளிநாட்டு படைப்பாளிகளை வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் கடந்த இரு மாதங்களாக பேத்தாழை பொதுநூலகத்தின் விபுலானந்தர் கலை, இலக்கிய மன்றத்தின் மூலம் ‘கவிமுளரி’ எனும் கவிதை மின்னிதழும் வெளியிடப்பட்டு வருகின்றது. இதன் ஆசிரியராக நூலகப்பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ் விளங்குகின்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT