சிலர் நீக்கப்பட்டதால் புலனாய்வு பலவீனமடையவில்லை | தினகரன்

சிலர் நீக்கப்பட்டதால் புலனாய்வு பலவீனமடையவில்லை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

"அன்று நான் யுத்தத்தை ஆரம்பிக்கும் வேளையில் புலனாய்வுப் பிரிவினர் எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தில் 9,000 பேரே உள்ளதாக கூறினார்கள். ஆனால் யுத்தம் முடிவடைந்த வேளையில் 35, 000 பேர் இருந்தார்கள். 23,000 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்கள். 12,000 பேர் உயிருடன் சிறைப் பிடிக்கப்பட்டார்கள்.

ஆனால் புலனாய்வு பிரிவினர் 9,000 பேர் இருப்பதாக கூறியிருந்தார்கள். அக்காலத்தில் இக்பால் அக்தாஸ் 30,000 பேர் உள்ளதாக தெரிவித்திருந்தார். அதாவது புனலாய்வுப் பிரிவினரை விட இக்பால் அத்தாஸ் அதுபற்றி அதிகமாக அறிந்திருந்தார். சிலர் கூறுகிறார்கள், புலனாய்வு பிரிவு பலவீனமடைந்துள்ளது என்று நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.

புலனாய்வு பிரிவில் 10, 15 பேரை நீக்கியதால் அவர்கள் பலவீனமடையவில்லை. நான் இராணுவத்தை பொறுப்பேற்ற வேளையில் ​ஹெந்த விதாரன உள்ளிட்ட உயரதிகாரிகள் 04 பேரை நீக்கிவிட்டு பீரங்கி படையணியின் ஒருவரை நியமித்தேன். அதன் பின்னர் காலாட்படைவீரர் ஒருவரை நியமித்தேன். கடற்படையினர் தாக்கி அழித்த எட்டு கப்பல்களை பற்றிய தகவல்களை இராணுவ புலனாய்வு பிரிவினரே வழங்கியிருந்தார்கள். அதனால் ஒரு சிலரை நீக்குவதால் நாட்டின் புலனாய்வு பிரிவினர் பலவீனமடைவதில்லை.

-----------------------------

புலனாய்வுப் பிரிவு வீழ்ச்சியடைந்துள்ளது என்பது முற்றிலும் தவறானது

லெப்ரினன்ற் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க

இராணுவத் தளபதி

இராணுவ புலனாய்வு பிரிவு கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்துள்ளது என நான் கூறினேன் என்ற செய்திக்கு மறுப்பு தெரிவிக்கின்றேன். சில சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் குறுகிய கால பாதிப்பொன்றே ஏற்பட்டது. ஆனால் கடந்த ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணைகள் மற்றும் கைதுகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. புலனாய்வுப் பிரிவினர் தற்போது மிக வெற்றிகரமாக தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

-----------------------------

பாதுகாப்பு உறுதி

மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர

கிழக்கு படை கட்டளை தளபதி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கவில்லை. பாதுகாப்பை இராணுவத்தினர் உறுதி செய்திருந்தார்கள். 24 மணி நேரமும் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பை வழங்கி இருந்தார்கள். ஆனாலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. அந்த பயங்கரவாத சக்தியை நாம் அழித்துள்ளோம். கிழக்கு மாகாண பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

 

-----------------------------

பாதுகாப்பு வீழ்ச்சியடையவில்லை

லெப்ரினன்ட் கமாண்டர் இசுறு சூரிய பண்டார

கடற்படை ஊடகப் பேச்சாளர்

நாட்டின் மொத்தப் பாதுகாப்பும் முற்றாகவே வீழ்ச்சியடையவில்லை. பாதுகாப்பு என்பது பரந்த விடயம். எதிரியுடன் யுத்தம் செய்யும் சூழலில் இருந்து தப்பிப்பது மாத்திரமல்ல சமூகத்தின் சாதாரண வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கு ஏதேனும் தடையாக இருந்தால் அதுவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே. உணவு, மின்சாரம் சமூக கல்வி, தகவல்கள், தொழில்நுட்ப பாதுகாப்பு என்ற பல விடயங்கள் இணைந்தே பாதுகாப்பு அமைகின்றது.

பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுமென்றால் பயங்கரவாத தாக்குதல் மாத்திரம் காரணம் அல்ல. அச்சுறுத்தல் என்பது எப்போதும் உள்ள ஒன்று. சந்தர்ப்பத்திற்கேற்ப நாளுக்கு நாள் உலக மாற்றத்துடன் அச்சுறுத்தல்களும் மாறுபடுகின்றன. அதனால் அச்சுறத்தல் என்பதே முற்றாக உலகிலிருந்து அழிக்க முடியாது. அவ்வச்சுறுத்தல் தொடர்பாக ஆராயவும் போரிடவும் வேண்டும். அதற்காக செயற்படக் கூடிய முறைகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...